Thirukkural Kan Vithuppazhithal Adhikaram-118 திருக்குறள் கண்விதுப்பழிதல் அதிகாரம்-118 கற்பியல் காமத்துப்பால் Karpiyal Kamathupal in Tamil

0

Thirukkural Kan Vithuppazhithal Adhikaram-118 (Kan vizhippaliththal) திருக்குறள் கண்விதுப்பழிதல் அதிகாரம்-118 கற்பியல் காமத்துப்பால் Thirukkural Kan Vithuppazhithal Adhikaram-118 Karpiyal Kamathupal in Tamil. திருக்குறள் பொருள் (thirukkural porul Vilakkam) Adhikaram-118 கண் விதுப்பழிதல். (kan vithuppalithal)

Thirukkural Kan Vithuppazhithal Adhikaram-118

Thirukkural Kan Vithuppazhithal Adhikaram-118

திருக்குறள் பா: 1171
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.

kural 1171: kandhaam kaluzhva thevankolo thantaanoi thaamkaatta yaamkan tadhu

திரு மு.வரதராசனார் பொருள்:
தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?

மணக்குடவர் பொருள்: அமையாத நோயை யாங்கண்டது அந்நோய் செய்தாரைத் தாங்காட்டுதலானே யன்றே? பின்னர் அக்கண்கள்தாம் காண்டல் வேட்கையாற் கலுழ்கின்றது யாவர் காட்டுவாராகக் கருதி? இது தலைமகள் காட்டுவாரில்லை யென்று தோழியைக் குறித்துச் சொல்லியது.

கலைஞர் பொருள்: கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது? அதே கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்?.

சாலமன் பாப்பையா பொருள்: தணியாத காதல் துன்பத்தை நான் அறிந்ததே இந்தக் கண்கள் எனக்கு அவரைக் காட்டியதால்தானே? இப்போது அவரைக் காட்டு என என்னிடம் அழுவது எதற்கு?.

திருக்குறள் பா: 1172
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்.

kural 1172: therindhunaraa nokkiya unkan parindhunaraap paidhal uzhappadhu evan

திரு மு.வரதராசனார் பொருள்: ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?.

மணக்குடவர் பொருள்: முன்பு அவர் நல்லரென்று தெரிந்து உணர்ந்து நோக்கிய உண்கண்கள் இப்பொழுது வருத்தமுற்று, நல்லரென்று உணராவாய், துன்பமுழப்பது எற்றுக்கு? இது கண்ணினறியாமையைத் தோழிக்குச் சொல்லியது.

கலைஞர் பொருள்: விளைவுகளை உணராமல் மயங்கி நோக்கிய மைவிழிகள், இன்று, காதலரைப் பிரிந்ததால் துன்பமுறுவது தம்மால் தான் என அறியாமல் தவிப்பது ஏன்?.

சாலமன் பாப்பையா பொருள்: வரப்போவதை அறியாமல் அன்று அவரை எனக்குக் காட்டிய என் மை தீட்டப்பட்ட கண்கள், இன்று இது நம்மால் வந்தது; நாம்தாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் துன்பப்படுகின்றனவே எதற்காக?.

திருக்குறள் பா: 1173
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.

kural 1173: kadhumenath thaanokkith thaame kaluzhum ithunakath thakka thutaiththu

திரு மு.வரதராசனார் பொருள்:
அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.

மணக்குடவர் பொருள்: இக்கண்கள் அன்று விரைந்து தாமேநோக்கி இன்று தாமே கலுழாநின்ற; இது சிரிக்கத்தக்க துடைத்து. இஃது ஆற்றாமை மிகுதியால் நகுதல் மிக்க தலைமகளை இந்நகுதற்குக் காரண மென்னையென்று வினாவிய தோழிக்கு அவள் கூறியது.

கலைஞர் பொருள்: தாமாகவே பாய்ந்து சென்று அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள், இன்று தாமாகவே அழுகின்றன. இது நகைக்கத்தக்க ஒன்றாகும்.

சாலமன் பாப்பையா பொருள்: அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.

திருக்குறள் பா: 1174
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.

kural 1174: peyalaatraa neerulandha unkan uyalaatraa uyvilnoi enkan niruththu

திரு மு.வரதராசனார் பொருள்:
என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டு விட்டன.

மணக்குடவர் பொருள்: உயல் ஆற்றாத என்மாட்டு உய்வில்லாத நோயை உண்கண்கள் நிறுத்தித் தாமும் அழமாட்டாவாய் நீருலந்தன. கண்கள் தாம் நினைத்தது முடித்துத் தொழின்மாறினவென்று கூறியவாறு.

கலைஞர் பொருள்: தப்பிப் பிழைக்க முடியாத, தீராத காதல் நோயை எனக்குத் தருவதற்குக் காரணமான என் கண்கள், தாமும் அழ முடியாமல் வற்றிப் போய்விட்டன.

சாலமன் பாப்பையா பொருள்: மை தீட்டப்பட்ட இந்தக் கண்கள் நான் தப்பிக்கவும், வாழவும் முடியாத காதல் துன்பத்தை எனக்குத் தந்துவிட்டுத் தாமும் அழ முடியாமல் நீர் வற்றிப் போய்விட்டன.

திருக்குறள் பா: 1175
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.

kural 1175: patalaatraa paidhal uzhakkum katalaatraak kaamanoi seydhaen kan

திரு மு.வரதராசனார் பொருள்:
அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.

மணக்குடவர் பொருள்: கடலினும் மிக்க காமநோயை என்மாட்டு நிறுத்துதலானே கண்கள் தாம் உறங்கமாட்டாவாய்த் துன்பமுறாநின்றன. இது பிறர்க்கு இன்னாமை செய்தார்க்கு இன்னாமை வந்ததென்று தோழிக்குத் தலைமகள் கூறியது.

கலைஞர் பொருள்: கடல் கொள்ளாத அளவுக்குக் காதல் நோய் உருவாகக் காரணமாக இருந்த என் கண்கள், இப்போது தூங்க முடியாமல் துன்பத்தால் வாடுகின்றன.

சாலமன் பாப்பையா பொருள்: கடலைவிடப் பெரிதாகும் காதல் துன்பத்தை எனக்குத் தந்த கண்கள், தாமும் தூங்காமல், துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.

திருக்குறள் பா: 1176
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.

kural 1176: oo inidhe emakkinnoi seydhakan thaaam itharpat tadhu

திரு மு.வரதராசனார் பொருள்:
எமக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!.

மணக்குடவர் பொருள்: எமக்கு இந்நோயைச் செய்த கண்கள் தாமும் இந்நோயகத்துப்பட்டது மிகவும் இனிது. இது நின்கண் கலங்கிற்று; அஃதெனக்கு இன்னாதாயிற்று என்ற தோழிக்கு அது மிகவும் இனிதென்று தலைமகள் கூறியது.

கலைஞர் பொருள்: ஓ! என் காதல் நோய்க்குக் காரணமான கண்கள், என்னைப் போலவே வாடி வருந்துகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே!.

சாலமன் பாப்பையா பொருள்: எனக்கு இந்தக் காதல் துன்பத்தைத் தந்த கண்கள் தாமும் தூங்காமல் அழுவது நன்றாகத்தான் இருக்கிறது.

திருக்குறள் பா: 1177
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.

kural 1177: uzhandhuzhan thulneer aruka vizhaindhizhaindhu venti avarkkanta kan

திரு மு.வரதராசனார் பொருள்: அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.

மணக்குடவர் பொருள்: அழுதலை யுழந்துழந்து உள்ளநீர் அறுவனவாக; தாம் வேண்டினவரை விரும்பி நெகிழ்ந்து கண்டகண்கள். இஃது இவ்வாறு அழுதல் தகாதென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

கலைஞர் பொருள்: அன்று, இழைந்து குழைந்து ஆசையுடன் அவரைக் கண்ட கண்களே! இன்று பிரிந்து சென்றுள்ள அவரை நினைத்துக் தூங்காமலும், துளிக் கண்ணீரும் அற்றுப்போகும் நிலையிலும் துன்பப்படுங்கள்.

சாலமன் பாப்பையா பொருள்: விரும்பி மகிழ்ந்து விடாமல் அன்று அவரைக் கண்ட கண்களின் உள் இருக்கும் கண்ணீர் எல்லாம் இன்று வருந்தி வருந்தி வற்றிப் போகட்டும்!.

திருக்குறள் பா: 1178
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.

kural 1178: penaadhu pettaar ularmanno matravark kaanaadhu amaivila kan

திரு மு.வரதராசனார் பொருள்:
உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.

மணக்குடவர் பொருள்: விரும்பத்தகாததனை விரும்புவாரும் உளரோ? நம்மைக் கண்டால் விருப்பமின்றிப்போன அவரைக் காணாது அமைகின்றில என் கண்கள்: இதனை ஒழியப் பிறவு முளவோ?

கலைஞர் பொருள்: என்னை அரவணைக்கும் எண்ணமின்றிக் காதலித்த ஒருவர் இருக்கின்றனர்; அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே!.

சாலமன் பாப்பையா பொருள்: உள்ளத்தால் என்னை விரும்பாமல் வாயால் மட்டுமே விரும்பியவர் நன்றாக இருக்கட்டும்; ஆனால், அவரைக் காண முடியாமல் என் கண்கள் தூங்காமல் இருக்கின்றன.!.

திருக்குறள் பா: 1179
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.

kural 1179: vaaraakkaal thunjaa varindhunjaa aayitai aaragnar utrana kan

திரு மு.வரதராசனார் பொருள்:
காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கி‌டையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.

மணக்குடவர் பொருள்: அவர் வாராத காலத்துப் புணர்ச்சி வேட்கையால் துஞ்சா; வந்த காலத்துப் பிரிவாரென்று அஞ்சித்துஞ்சா: அவ்விரண்டிடத்தினும் மிக்க துன்பமுற்றன கண்கள். இது நீ உறங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் இன்றேயல்ல எஞ்ஞான்றும் உறக்கமில்லை யென்றது.

கலைஞர் பொருள்: இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்துவிட்டாலும் பிறகு தூங்குவதில்லை. இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவை காதலர்களின் கண்களாகத் தானே இருக்க முடியும்.

சாலமன் பாப்பையா பொருள்: அவர் வராதபோது வரவை எதிர்பார்த்துத் தூங்குவதில்லை. வந்தபோதோ, எப்போது பிரிவாரோ என்று அஞ்சி் தூங்குவதில்லை; இரண்டு வழியிலும் என் கண்களுக்குத் தூங்க முடியாத துன்பந்தான்.

திருக்குறள் பா: 1180
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.

kural 1180: maraiperal ooraarkku aridhandraal empol araiparai kannaar akaththu

திரு மு.வரதராசனார் பொருள்:
அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.

மணக்குடவர் பொருள்: எம்மைப்போல அறைபறையாகிய கண்களையுடையார் மாட்டு உளதாகிய மறையை யறிதல் ஊரார்க்கு எளிது.

கலைஞர் பொருள்: காதல் வேதனையைப் பறைசாற்றிக் காட்டிக் கொடுக்க எம் கண்களேயிருக்கும்போது, யாம் மறைப்பதை அறிந்து கொள்வது ஊரார்க்குக் கடினமல்ல.

சாலமன் பாப்பையா பொருள்: அடிக்கப்படும் பறைபோன்று மனத்துள் இருப்பதை அழுது வெளியே காட்டிவிடும் எம்போன்ற பெண்களின் ரகசியத்தை அறிந்து கொள்வது இவ்வூரில் இருப்பவர்க்கு எளிது.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Pasapparuparuvaral Adhikaram-119 திருக்குறள் பசப்பறுபருவரல் அதிகாரம்-119 கற்பியல் காமத்துப்பால் Karpiyal Kamathupal in Tamil
Next articleThirukkural Padar Melindirangal Adhikaram-117 திருக்குறள் படர்மெலிந்திரங்கல் அதிகாரம்-117 கற்பியல் காமத்துப்பால் Karpiyal Kamathupal in Tamil