Thirukkural Pazhamai Adhikaram-81 திருக்குறள் பழமை அதிகாரம்-81 அங்கவியல் / நட்பியல் பொருட்பால் Angaviyal / Natpiyal Porutpal in Tamil

0

Thirukkural Pazhamai Adhikaram-81 (Pazhaimai) திருக்குறள் பழமை அதிகாரம்-81 அங்கவியல் / நட்பியல் பொருட்பால் Thirukkural Pazhamai Adhikaram-81 Angaviyal / Natpiyal Porutpal in Tamil. திருக்குறள் பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-81 அங்கவியல் பழமை/ நட்பியல் பழமை. Pazhamai Thirukkural by Thiruvalluvar. Thirukkural Pazhamai Chapter-81. திருக்குறள் பழைமை அதிகாரம்-81.

Thirukkural Pazhamai Adhikaram-81

Thirukkural Pazhamai Adhikaram-81

திருக்குறள் பா: 801
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

kural 801: pazhaimai enappatuvadhu yaadhenin yaadhum kizhamaiyaik keezhndhitaa natpu

திரு மு.வரதராசனார் பொருள்:
பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.

மணக்குடவர் பொருள்: பழைமையென்று சொல்லப்படுவது யாதெனின் அது யாதொன்றிலும் உரிமையை அறுத்தலில்லாத நட்பு. இது பழையவன் செய்த உரிமையைச் சிறிதுஞ் சிதையாது உடன்படுதல் நட்பாவதென்றது.

கலைஞர் பொருள்: பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.

சாலமன் பாப்பையா பொருள்: பழைமை என்று சொல்லப்படுவதன் பொருள் என்ன என்றால், நெடுங்கால நண்பர் நம்மீது உரிமை எடுத்துக் கொண்டு பிழைபட நடந்தாலும் அதைப் பொருட்படுத்தாத நட்பு எனலாம்.

திருக்குறள் பா: 802
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.

kural 802: natpir kuruppuk kezhudhakaimai matradharku uppaadhal saandror katan

திரு மு.வரதராசனார் பொருள்:
நட்பிற்க்கு உறுப்பாவது நண்பனுடைய உரிமைச் செயலாகும், அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.

மணக்குடவர் பொருள்: நட்பிற்கு அங்கமாவது உரிமை: அவ்வுரிமையால் செய்யுமதற்கு உடன்படுதல் சான்றோர்க்கு இயல்பு. இது பேய்ச்சுரைக்காய்க்குப் பல காயம் அமைத்தாலும் இனிமை யுண்டாகாதுபோல, உடன்படாராயின் இனிமை உண்டாகாதாதலான் உடன்படல் வேண்டு மென்றது.

கலைஞர் பொருள்: பழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிற சான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும்.

சாலமன் பாப்பையா பொருள்: நண்பர்கள் உரிமையுடன் செய்வதே நட்பிற்கு உறுப்பாகும். அவ்வுரிமையை எண்ணி மகிழ்வதே சான்றோர்க்கு நீதியாகும்.

திருக்குறள் பா: 803
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.

kural 803: pazhakiya natpevan seyyung kezhudhakaimai seydhaangu amaiyaak katai

திரு மு.வரதராசனார் பொருள்:
பழகியவர் உரிமைப்பற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவேக் கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்.

மணக்குடவர் பொருள்: நட்டோரது தப்பைப் பிறர் சொல்லுங்கால் கேளாத உரிமையை யறியவல்லார்க்கு நட்டோர் தப்புச்செய்யின், அந்தநாள் நல்ல நாளாம். இது கேளாது செய்தலே அன்றித் தப்புச் செய்யினும் அமைய வேண்டுமென்றது.

கலைஞர் பொருள்: பழைய நண்பர்கள் உரிமையோடு செய்த காரியங்களைத்தாமே செய்ததுபோல உடன்பட்டு இருக்காவிட்டால், அதுவரை பழகிய நட்பு பயனற்றுப்போகும்.

சாலமன் பாப்பையா பொருள்: தனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், நண்பர் உரிமையாகச் செய்துவிட்டதைத் தானும் விரும்பிச் செய்தது போலவே காட்டவில்லை என்றால், நெடுங்காலமாகக் கொண்ட நட்பு என்ன பயனைத் தரும்?.

திருக்குறள் பா: 804
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.

kural 804: vizhaidhakaiyaan venti iruppar kezhudhakaiyaar kelaadhu nattaar seyin

திரு மு.வரதராசனார் பொருள்:
உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச் செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.

மணக்குடவர் பொருள்: நட்டோர் தமது உரிமையாலே கேளாது இசைவில்லாதவற்றைச் செய்வாராயின் அதற்கு முனியாது அதனையும் தாம் விரும்பும் தன்மையோடே கூட விரும்பத் தப்பாதிருப்பர் மிக்கார். இஃது உடன்படுதலன்றி விரும்பவும் வேண்டு மென்றது.

கலைஞர் பொருள்: பழகிய நட்பின் உரிமை காரணமாக தமது நண்பர் தம்மைக் கேளாமலே ஒரு செயல் புரிந்து விட்டாலும்கூட நல்ல நண்பராயிருப்பவர் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார்.

சாலமன் பாப்பையா பொருள்: தம் நண்பர் உரிமை எடுத்துக் கொண்டு தம்மைக் கேளாமலேயே ஒரு காரியத்தைச் செய்தால் அக்காரியத்தைத் தாம் அறிந்திருந்தாலும் நண்பரால் விரும்பிச் செய்யப்படுவது என்பதனால் அறிவுடையார் அதை ஏற்றுக் கொள்ளவே செய்வர்.

திருக்குறள் பா: 805
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.

kural 805: pedhaimai ondro perungizhamai endrunarka nodhakka nattaar seyin

திரு மு.வரதராசனார் பொருள்:
வருந்ததக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்.

மணக்குடவர் பொருள்: தாம் நோவத்தக்கனவற்றை நட்டோர் செய்வாராயின் அதற்கு முனியாது ஒன்றில் அறியாமையாலே செய்தாரென்று கொள்க: ஒன்றில் பெரிய உரிமையாலே செய்தாரென்று கொள்க.

கலைஞர் பொருள்: வருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா பொருள்: நாம் வருந்தத்தக்கவற்றை நம் நண்பர் செய்வார் என்றால், அதற்கு அறியாமை மட்டுந்தானா, பெரும் உரிமையும் காரணம் என்று அறிக.

திருக்குறள் பா: 806
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

kural 806: ellaikkan nindraar thuravaar tholaivitaththum thollaikkan nindraar thotarpu

திரு மு.வரதராசனார் பொருள்:
உரிமை வாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவுநேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவு கொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிட மாட்டார்.

மணக்குடவர் பொருள்: ஒழுக்கத்தின்கண்ணே நின்றார் பழைமையின்கண்ணே நின்றாரது நட்பை அவராலே தமக்கு அழிவு வந்தவிடத்தும் விடார். எல்லை- வரம்பு.

கலைஞர் பொருள்: நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால்கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது நட்பைத் துறக்க மாட்டார்கள்.

சாலமன் பாப்பையா பொருள்: நட்பின் எல்லையைக் கடக்காமல் வரம்பிற்குள்ளேயே நின்றவர், தம்முடன் நெடுங்காலமாக நட்புக் கொண்டவரால் கெடுதிகள் என்றாலும் அவரது நட்பினை விடமாட்டார்.

திருக்குறள் பா: 807
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.

kural 807: azhivandha seyyinum anparaar anpin vazhivandha kenmai yavar

திரு மு.வரதராசனார் பொருள்:
அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவுதரும் செயல்களை பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பர்.

மணக்குடவர் பொருள்: தமக்கு அழிவுவரும் கருமங்களைப் பழைய நட்டோர் செய்தாராயினும் அவரோடு உள்ள அன்புவிடார்: முற்காலத்து அன்பின் வழியாக வந்த நட்பையுடையவர். இது கேடுவருவன செய்யினும் அமைய வேண்டு மென்றது.

கலைஞர் பொருள்: தம்முடன் பழகியவர்கள் தமக்கே எதிராக அழிவுதரும் காரியத்தைச் செய்தாலும்கூட அன்பின் அடிப்படையில் நட்புக் கொண்டவர் அதற்காக அந்த அன்பை விலக்கிக் கொள்ள மாட்டார்.

சாலமன் பாப்பையா பொருள்: தம் நண்பர் தமக்கு அழிவு தருவனவற்றையே செய்தாலும் நெடுங்காலமாக நட்பை உடையவர் நண்பர்மீது தாம் கொண்ட அன்பை விட்டுவிடமாட்டார்.

திருக்குறள் பா: 808
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.

kural 808: kelizhukkam kelaak kezhudhakaimai vallaarkku naalizhukkam nattaar seyin

திரு மு.வரதராசனார் பொருள்:
பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும், கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந்த நண்பர் தவறுசெய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.

மணக்குடவர் பொருள்: நட்டோரது தப்பைப் பிறர் சொல்லுங்கால் கேளாத உரிமையை யறியவல்லார்க்கு நட்டோர் தப்புச்செய்யின், அந்தநாள் நல்ல நாளாம். இது கேளாது செய்தலே அன்றித் தப்புச் செய்யினும் அமைய வேண்டுமென்றது. .

கலைஞர் பொருள்: நண்பர்கள் செய்யும் குற்றத்தைப் பிறர்கூறி அதனை ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு நம்பிக்கையான நட்புரிமை கொண்டவரிடத்திலேயே அந்த நண்பர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர்களுடன் நட்புக் கொண்டிருந்த நாளெல்லாம் வீணான நாளாகும்.

சாலமன் பாப்பையா பொருள்: நண்பன் உரிமை எடுத்துச் செய்து பிழையை அடுத்தவர் எடுத்துக்காட்டியும் ஏற்றுக் கொள்ளாத நட்புரிமை உடையவர்க்கு நண்பன் பிழை செய்யும் நாள் பயனுள்ள நாளாம்.

திருக்குறள் பா: 809
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.

kural 809: ketaaa vazhivandha kenmaiyaar kenmai vitaaar vizhaiyum ulaku

திரு மு.வரதராசனார் பொருள்:
உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.

மணக்குடவர் பொருள்: குற்றம் உண்டாயின் அவ்விடத்து நட்பினிற் கெடாராய்க் குலத்தின்வழி வந்த நட்புடையாராது நட்பை விடுதலின்றி உலகத்தார் விரும்புவர். இது பழைமையைக் கொண்டாடுவாரை உலகத்தார் தாமும் நட்பு ஆகுதற்கு விரும்புவர் என்றது.

கலைஞர் பொருள்: தொன்றுதொட்டு உரிமையுடன் பழகிய நட்புறவைக் கைவிடாமல் இருப்பவரை உலகம் போற்றும்.

சாலமன் பாப்பையா பொருள்: உரிமையை விடாது நெடுங்காலமாக வரும் நட்பினை உடையவர் கேடு செய்தாலும் அந்த நட்பை விட்டு விடாதவரை, அவரது நட்புள்ளம் குறித்து உலகம் விரும்பும்.

திருக்குறள் பா: 810
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.

kural 810: vizhaiyaar vizhaiyap patupa pazhaiyaarkan panpin thalaippiriyaa thaar

திரு மு.வரதராசனார் பொருள்:
(தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்.

மணக்குடவர் பொருள்: பழைய நட்டோர்மாட்டுக் குணத்தினின்று நீங்காதார், விரும்பாதாராலும் விரும்பப்படுவர். இது பகைவரும் விரும்புவாரென்றது.

கலைஞர் பொருள்: பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள்.

சாலமன் பாப்பையா பொருள்: பழைய நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது நம் நட்பை விடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர்.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleTamil Piththan Kavithaigal – தமிழ்பித்தனின் கவிதைகள் kavithaigal tamil – kavithai varigal kavithaigal images – 01 தமிழ் பித்தன் கவிதைகள்! எழுத்தாக்கம் தமிழ் பித்தன்!
Next articleAgathi Keerai Benefits அகத்தி கீரை பயன்கள் Agathi Keerai Health Benefits அகத்தி கீரை மருத்துவ பயன்கள் Agathi Keerai in English Vegetable Hummingbird