அச்சத்தில் மக்கள்! வியாழேந்திரனின் அடாவடி ஆரம்பம்!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் . கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் மீது தாக்குதல் முயற்சிச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் அவர் கல்முனை பொலீஸில் முறைப்பாட்டையும் செய்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் கூறியதாவது.. நேற்று மாலை 6 மணியளவில் தனது தொழில் கடமைகளை முடித்துவிட்டு வீடு திரும்பினேன். நான் வீடு திரும்பியதும் எனது மனைவி வீட்டு படலையைப் பூட்டியுள்ளார். எனது வீட்டுக்கு வாகனம் ஒன்றிலும் டிப்பர் ஒன்றிலும் 20 வரையிலான மோட்டார் சைக்கிள்களிலும் வந்த கும்பலொன்று டேய் ராஜன் வீட்டுக்கு வெளியே வாடா என்று கத்தி சத்தமிட்டது.
நான் வீட்டைத் திறக்கவில்லை. எனது சகோதரியின் வீடு அருகில் உள்ளது. நான் பின்பக்கத்தால் எனது சகோதரியின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து வந்தவர்கள் யார் என்பதை அவதானித்தேன். அதில் இருவர் எனக்குத் தெரிந்தவர்கள். நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் ஆதரவாளர்;கள். அவர்கள் கையில் ஆயுதங்களை வைத்திருந்தார்கள். நாம் கதவைத் திறக்காதமையால் அவர்கள் ஆத்திரத்தில் கோடரியால் கதவைக் கொத்திவிட்டு சென்றுள்ளார்கள். அவர்கள் வீட்டு வாசலில் நின்று சஜித்திடம் காசு வாங்கிவிட்டா அவருக்கு வேலை செய்தாய். இனி நாங்கள் வந்துவிட்டம். உன்னை கவனிப்பம் என்று கூச்சலிட்டனர்.
நான் இதுவரை யாரிடமும் எந்தக் காசும் வாங்கவில்லை. என்னால் ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டத்திற்கான செலவை கோடீஸ்வரன் எம்.பி. கணக்கை என்னிடம் கேட்டுப் பெற்று அந்தச் செலவை அவர் பொறுப்பேற்றார். கோட்டாபய ராஜபக்ஷ இன்னமும் பதவியேற்கவில்லை. அதற்கிடையில் இவ்வளவு அராஜகங்கள் அரங்கேறுகின்றன என்றால் அவர் பதவியேற்றபின்னர் எவ்வாறு இருக்கும்? இந்தச் சம்பவம் தொடர்பில் நான் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளேன் என்றார்.