புளி இல்லாமல் தென்னிந்திய வீடுகளில், உணவகங்களில் சமையலே இல்லை என நமது உணவுப்பழக்கங்களில் பெருமளவு ஆக்கிரமித்திருக்கும், புளியின் பயன்பாடுகளுக்கு முந்தைய ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது மூதாதையர் இல்லங்களின் சமையலில் குடம் புளி தான் இடம்பெற்றிருந்தது, என்பது வியப்பாக இருக்கும்.
நாம் இக்காலத்தில் பயன்படுத்தும் புளியைவிட அதிக அளவு பலன்கள் தரும், குடம்புளி, நம் பயன்பாட்டில் இருந்து விலகியது, மலைப்பகுதிகளில் மட்டுமே விளைந்து, பரவலாக வேறெங்கும் கிடைக்காத அதன் உற்பத்தியால் இருக்கலாம்.
ஆயினும் பழமையை விரைவில் கைவிடாத, பழமையை இயன்ற வரையில் அன்றாட வாழ்வில் செலுத்து வாழும் தன்மைகொண்ட கேரள மக்கள், இன்றும் அதிக அளவில் குடம் புளியை, அன்றாட உணவில் பயன்படுத்தி வருகின்றனர்.குடம் புளியில் அவர்கள் செய்யும் அசைவ வகைக் குழம்புகள் மற்றும் உணவுகள் அவற்றின் அதீத சுவையாலும், கமகமக்கும் வாசனையாலும், கேரளத்தில் தனிச்சிறப்புமிக்கதாகும்.
கார்சீனியா கம்போஜியா எனும் தாவரவியல் பெயர்கொண்டு, ஆங்கிலத்தில் மலபார் டாமரின்ட் எனும் பெயரில் அழைக்கப்படும், கொக்கம்புளி எனும் குடம்புளி, நாம் பயன்படுத்தும் புளியைப்போல மரத்தில் காய்க்கும் தன்மைகொண்டது.
கேரளாவில் அநேக இடங்களிலும், நமது உதகை மலைப் பகுதிகளிலும் மற்றும் தென்னிந்தியாவின் பிற மலைப்பாங்கான இடங்களிலும் அதிகம் வளர்க்கப்படுகிறது.
வடிவம் :
சிறிய பரங்கிக்காய் போன்ற சதைப்பாங்கான வடிவம் கொண்ட பழுத்த குடம்புளியை, காயவைத்து புளியைப்போல, நீண்டகாலம் கெட்டுப்போகாமல் பயன்படுத்துகின்றனர்.
புளியைப்போன்ற அதிக அளவில் புளிப்பு சுவை இல்லாமல், குறைவான புளிப்புத்தன்மையுடன், சற்று துவர்ப்புச்சுவையும் கலந்திருக்கும், மேலும், இதன் நறுமணத்தால், சமையலில் உணவுவகைகளின் மணம் அதிகரிக்கச்செய்ய, பயன்படுகிறது.
குடம் புளியின் உடல் ஆரோக்கிய செயல்பாடுகள்:
குடம் புளி, உடலின் சீரண சக்தியை அதிகரித்து, உணவை விரைவில் செரிக்க வைக்கும். உடல் எடையை குறைக்கும் மருந்துவகைகளின், மூல மருந்தாக பயன்படுகிறது.
இதில் உள்ள ஹைட்ராக்சி சிட்ரிக் அமிலம், இதயத்தை காக்கும் தன்மைமிக்கது. அதிகப்படியான பசி எண்ணத்தை குறைக்கும் மூளையின் செயல்பாடுகளைத் தூண்டி, உடல் எடைக்குறைப்பில், முக்கிய பங்காற்றுகிறது.
குடம் புளியை மூலப்பொருளாகக்கொண்ட, உடல் எடையைக் குறைக்கும் மேலை மருந்துகளில், இதன் தாவரவியல் பெயரிலேயே, விற்பனையாகிறது.
மூளை பலம் :
மூளையின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் தன்மையுள்ள சித்த மருந்துகளில், குடம் புளி பெருமளவில் பயனாகிறது. குடம் புளி, உடல் தசைகளை உறுதியாக்கி உடல் பொலிவை அதிகரிக்கும் ஆற்றல்கொண்டது.
சர்க்கரையை சீராக்கும் :
இரத்தக் கொழுப்புகளை கரைத்து, சர்க்கரை குறைபாடுகளை சரிசெய்து, வயிற்றுப்போக்கையும் கட்டுப்படுத்தும் உடல் நல மருந்தாகவும் பயன்படுகிறது.
குடம் புளி மரப்பட்டைப் பிசின், மருத்துவத்துறையில் பயன்படுகிறது.
மனிதர்களுக்கு மட்டுமன்றி, மாடுகளுக்கும் மருந்தாகிறது. இதன் பதப்படுத்தப்பட்ட பொடி, நகைகளை பாலிஷ் செய்ய பயனாகிறது. கேரளாவில் இரப்பர் மரப்பாலை, பதப்படுத்த பயன்படுகிறது.
பயன்படுத்தும் முறை :
குடம் புளியின் பழச்சதையை அப்படியே, சமையலில், சாம்பார் செய்ய, இரசம் செய்யப்பயன்படுத்தலாம், புளி சேர்க்கும் அனைத்துவகை உணவுகளிலும் பயன்படுத்தலாம்.
குடம் புளி பழச்சதை கிடைக்காதபட்சத்தில் இல்லையென்றால், நாட்டு மருந்துக்கடைகளில் பதப்படுத்தப்பட்ட குடம் புளியை வாங்கிப் பயன்படுத்தலாம்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும், புளிக்கு மாற்றாக, இந்த குடம் புளியை பயன்படுத்தினால் உணவுகளில் ஒரு தனி மணமும் சுவையும் கூடவே, சாப்பிட்ட உணவுகள் எல்லாம் விரைவில் செரிமானம் ஆகச்செய்யும் தன்மைமிக்கது.