உலகில் ஏராளமான மக்கள் போராடும் ஒரு பிரச்சனை தான் வயிற்று உப்புசம். பெரும்பாலான நேரங்களில் வயிற்று உப்புசம் மோசமான டயட் காரணமாக ஏற்படலாம். ஆனால் சில நேரங்களில் அது தீவிரமான நோய்களின் காரணமாகவும் ஏற்படலாம்.
ஒருவருக்கு வயிற்று உப்புசம் அளவுக்கு அதிகமாக உணவு உண்பது, அதிகமாக அமிலம் சுரப்பது, நெஞ்செரிச்சல், அதிகமான அளவில் காற்றினை விழுங்குதல், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், தைராய்டு சுரப்பியின் முறையற்ற செயல்பாடு, உணவு சகிப்புத்தன்மை, கார்போனேட்டட் பானங்களைப் பருகுவது அல்லது குடலில் அதிகமாக பாக்டீரியாக்கள் இருப்பதாலும் ஏற்படும். இப்போது உடலில் எந்த நோய்கள் இருந்தால், வயிற்று உப்புசம் ஏற்படும் வாய்ப்புள்ளது என்பது குறித்து காண்போம்.
கருப்பை புற்றுநோய்
தொடர்ச்சியான வயிற்று உப்புசம், இடுப்பு எலும்புகளில் வலி மற்றும் பசியின்மை போன்றவை கருப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகளாகும். குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான் கருப்பை புற்றுநோய் வரும் அபாயம் அதிகம் உள்ளது.
வயிற்று புற்றுநோய்
வயிற்று புற்றுநோய் இருந்தால், ஆரம்ப காலத்தில் எவ்வித அறிகுறியும் தெரியாது. இருப்பினும் அது முற்றும் போது, பாதிக்கப்பட்டவர்களின் உடல் எடை குறையும், செரிமான பிரச்சனைகள் ஏற்படும், வயிற்று உப்புசத்துடன் இருக்கும், வாந்தி குமட்டல் போன்ற உணர்வைப் பெறக்கூடும்.
கணைய புற்றுநோய்
கணைய புற்றுநோய்க்கான அறிகுறிகளுள் எடை குறைவு, பசியின்மை, வயிற்றின் மேல் பகுதியில் வலி மற்றும் வயிற்று உப்புசத்துடன் மஞ்சள் காமாலை ஏற்படும்.
எடை குறைவு
ஒருவர் எடையைக் குறைக்க எந்த ஒரு முயற்சியும் எடுக்காத நிலையில், 10 கிலோவிற்கும் அதிகமான அளவில் உடல் எடை குறைந்தால், குடலில் கட்டிகள் உருவாக ஆரம்பித்துள்ளது என்று அர்த்தம். அதுமட்டுமின்றி, வயிறு எப்போதும் உப்புசத்துடன் இருக்கும். மேலும் சிறிது உணவை உட்கொண்டாலும், வயிறு நிறைந்துவிட்ட உணர்வை பெறக்கூடும்.
இடுப்பு எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள்
காய்ச்சல், வயிற்று உப்புசம், இடுப்பு எலும்பு வலி போன்றவை இடுப்பு பகுதியில் நோய் இருப்பதற்கான பொதுவான அறிகுறிகளாகும். சில நேரங்களில் பாலியல் நோய்களும் இடுப்பு எலும்புகளில் நோய்களை உண்டாக்கும். மேலும் அசாதாரணமாக யோனியில் இருந்து திரவம் வெளியேறும். இதை அப்படியே விட்டுவிட்ல், அது மலட்டுத்தன்மையைக் கூட உண்டாக்கும்.
குடல் புற்றுநோய்
இந்த வகை புற்றுநோய் குடலில் அடைப்புக்களை ஏற்படுத்தி, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும். குடல் புற்றுநோய்க்கு ஆரம்ப கால அறிகுறி என்றால் அது வயிற்று உப்புசம் தான். ஆனால் முற்றிய நிலையில் இருந்தால், வயிற்று உப்புசத்துடன் மலச்சிக்கல் மற்றும் இரத்தப் போக்கு ஏற்படும்.
நீர் கோர்வை
உடலில் நீர் கோர்வை இடுப்பு பகுதி அல்லது அடிவயிற்று பகுதியில் ஏற்படும். இதனால் உடல் பருமன் மற்றும் வயிற்று உப்புசம் போன்றவை உண்டாகும்.
கல்லீரல் நோய்கள்
கல்லீரல் நோய்களும் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும். இது ஹிபடைடிஸ், அதிகமான மருந்துகளை உட்கொள்ளல், மது அதிகம் பருகுவது அல்லது கல்லீரல் புற்றுநோய் போன்றவற்றால் தூண்டப்படும். மேலும் சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பதும், கல்லீரல் நோய்களுக்கான அறிகுறிகளாகும்.