மீண்டும் மோதலுக்கு தயாராகும் மைத்திரி! விடுக்கப்பட்டது உடனடி பணிப்புரை!

0

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு துறை மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகளை அழைத்து, விசாரணைகளை மேற்கொண்டு தேசிய பாதுகாப்பு இரகசியங்களை வெளியே கசியும் செயற்பாடுகளை நாடாளுமன்றத் தெரிவுக்குழு மேற்கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் அதனை உடனடியாக நிறுத்துமாறும் நேரடியாக வலியுறுத்தியுள்ளார்.

நேற்றுக் காலை ஜனாதிபதி-சபாநாயகர் ஆகியோருக்கிடையில் நிகழ்ந்த சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுக்குமாயின் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க வேண்டிவரலாமென்றும் நேற்று முந்தினம் இரவு பிரதமரைச் சந்தித்தபோது ஜனாதிபதி திட்டவட்டமாக கூறியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தெரிவுக்குழு விசாரணையை ஒளிபரப்பக்கூடாதென முன்னதாக ஜனாதிபதி பணித்திருந்தார். எனினும், நேற்றும் அதனை ஒளிபரப்ப தெரிவுக் குழுவினர் முயன்றபோதும் ஜனாதிபதி அதற்கு இடமளிக்கவில்லை.

இந்தநிலையில் நேற்றுக் காலையில் ஜனாதிபதியைச் சந்தித்த சபாநாயகர், ஒளிபரப்பு விடயம் குறித்துப் பேச்சு நடத்தினார். இதன்போது, ஒளிபரப்பை மட்டுமல்ல, தெரிவுக்குழு விசாரணையையே உடனடியாக நிறுத்தும்படி ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதனால் மீண்டும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையில் இழுபறி நிலைமை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் இனி பாதுகாப்புத் தரப்பின் உயர் அதிகாரிகள் முன்னிலையாக கூடாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த தெரிவுக்குழுவில் பாதுகாப்புச் செயலர் கோட்டேகொடவும் தேசிய புலனாய்வுத் துறைத் தலைவரும் சமூகமளித்து சாட்சியமளித்திருந்தனர். நேற்று பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான நாலக டி சில்வா சாட்சியமளித்தார்.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர்கள் எதிர்காலத்தில் அழைக்கப்படுவார்கள் என நேற்றுத் தெரிவிக்கப்பட்டபோதும் அவர்கள் அதில் முன்னிலையாகுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

முன்னதாக இந்தக் குழு ஜனாதிபதி மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்த தயாராகி வருவதாக ஜனாதிபதி தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து வந்த நிலையில் கடந்த அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா சாட்சியாளர்களைக் கடுமையாக கேள்விக்கு உட்படுத்தியிருந்த நிலையில் ஜனாதிபதியின் இந்த நகர்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநள்ளிரவில் இளம் பெண்ணை மலைக்கு தூக்கிச் சென்று அரக்கர்கள் செய்த கொடுமை! தடுக்க வந்த தாய் வெட்டிக் கொலை!
Next articleசீயோன் தேவாலய குண்டுவெடிப்பு! நேற்று நிகழ்ந்த மேலுமொரு உயிரிழப்பு!