குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – கடகம்.

0

கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
அழகான உடலமைப்பும், மற்றவர்களை கவரக்கூடிய பேச்சு திறனும் கொண்ட கடகராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி சந்திரனுக்கு நட்பு கிரகமான குருபகவான் வாக்கிய கணிதப்படி 04.10.2018 முதல்(திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) உங்களின் ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் பணவரவுகள் சரளமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்களும் புத்திர வழியில் மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் தடையின்றி கைகூடும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று பொருளாதார நிலையானது உயர்வடையும். கடன்கள் அனைத்தும் குறையும். உற்றார் உறவினர்களும் சாதகமாக இருப்பார்கள். சனி ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் இதுவரை ஜென்ம ராசியிலும், 7-ஆம் வீட்டிலும் சஞ்சரித்த ராகு கேது 13-2-2019 முதல் மாறுதலாகி கேது 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதும் ஏற்றத்தையே ஏற்படுத்தும் அமைப்பாகும்.

உடல் ஆரோக்கியத்தில் உள்ள பிரச்சினைகள் படிப்படியாக குறைவதால் மருத்துவ செலவுகளும் மறையும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவதால் மனநிம்மதி உண்டாகும் பகைவர்களும் நட்பு கரம் நீட்டுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள உதவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிட்டும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எடுக்கும் பணிகளை திறம்பட செய்து முடித்து பாராட்டுதல்களை பெறுவீர்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் யோகம் உண்டாகும். குருபார்வை ஜென்ம ராசிக்கும், 9, 11-ஆம் வீடுகளுக்கும் இருப்பதாலும் கிரகங்களின் சாதமான சஞ்சாரத்தாலும் தொட்டதெல்லாம் துலங்கும். சொந்த பூமி மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். நினைத்ததெல்லாம் நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும்.

உடல் ஆரோக்கியம்
உங்களின் தேக ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்த காலங்களில் இருந்த மருத்துவ செலவுகள் குறையும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். சிலருக்கு வாரிசு யோகம் உண்டாகி மன மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களும் நலமுடன் இருப்பதால் எல்லா பிரச்சினைகளும் விலகி மன நிம்மதி உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வரும் ஆரோக்கிய பாதிப்பும் படிப்படியாக குறைந்து உடல் நிலை முன்னேற்றம் அடையும்.

குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கடந்த காலங்களில் நீங்கள் சந்தித்த சோதனைகளும் வேதனைகளும் படிப்படியாக குறையும். நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொள்ளக்கூடிய அளவிற்கு வலிமையும் வல்லமையும் உண்டாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணவாழ்க்கை சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்களும் உங்களை புரிந்து கொண்டு நட்பு கரம் நீட்டுவார்கள். பணவரவுகளும் தாராளமாக அமையும். சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்.

கமிஷன்- ஏஜென்சி
கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர்க்கு நல்ல லாபம் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி எதிர்பார்க்கும் ஆதாயங்களைப் பெற முடியும். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சாதகமானப் பலன்களைப் பெற முடியும். பூர்வீக சொத்துக்களாலும் அனுகூலமானப் பலன்களை பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம்
செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் மறைவதால் வரவேண்டிய வாய்ப்புகளும் லாபங்களும் தடையின்றி வந்து சேரும். புதிய கூட்டாளிகள் இனைவார்கள். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சாதகமானப் பலனை அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் நற்பலன்கள் எளிதில் கிடைக்கும். வெளிவட்டார தொடர்புகளால் அனுகூலமானப் பலன்கள் அதிகரிக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய பயணங்களால் நல்ல லாபங்களை அடைவீர்கள்.

உத்தியோகம்
செய்யும் உத்தியோகத்தில் பதவி உயர்வுகள் கிடைக்கும். கடந்த கால நெருக்கடிகள் யாவும் குறையும். உயரதிகாரிகளின் ஆதரவுகளும், உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருப்பதால் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்க முடியும். ஊதிய உயர்வுகளால் பொருளாதார நிலையானது உயரும். பணி நிமித்தமாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள கூடிய வாய்ப்புகள் ஏற்படும். வேலை பளு குறையும். சிலருக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவார்கள்.

அரசியல்
தங்கள் எதிர்பார்த்த மாண்புமிகு பதவிகள் தடையின்றி கிட்டும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். மறைமுக வருவாய்கள் அதிகரிப்பதால் பொருளாதாரநிலை உயரும். பத்திரிக்கை நண்பர்களின் ஆதரவும், மக்களின் ஆதரவும் உங்கள் பெயர் புகழை உயர்த்தும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். பயணங்களால் அனுகூலமானப் பலனை பெறுவீர்கள்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளைபொருளுக்கு ஏற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் பொருளாதார நிலை உயர்வடையும். புதிய பூமி மனை போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். கால்நடைகளாலும் லாபம் உண்டாகும். காய், கனி போன்றவற்றாலும் சிறப்பான லாபத்தை பெறமுடியும். வங்கி கடன்கள் குறையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் தடையின்றி கிட்டும். பங்காளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள்.

கலைஞர்கள்
கலைஞர்களுக்கு திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். நிலுவையிலிருந்த சம்பள பாக்கிகள் அனைத்தும் கிடைக்கப் பெறுவதால் பொருளாதார நிலையும் உயரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் அனுகூலங்களும் உண்டாகும். ஆடம்பர கார் பங்களா போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடப்பது நல்லது.

பெண்கள்
உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் தடையின்றி கைகூடும். சிலர் சிறப்பான புத்திர பாக்கியங்களை பெறுவர். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து நட்பு கரம் நீட்ட கூடிய அளவிற்கு சந்தர்ப்பங்கள் அமையும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராளமான பண நடமாட்டம் இருப்பதால் வீடு, மனை வாங்க வேண்டுமென்ற கனவுகளும் நிறைவேறும். பணிபுரிபவர்களுக்கு பணியில் உயர்வுகள் கிட்டும்.

மாணவ மாணவியர்
கல்வியில் நல்ல உயர்வினை அடைய முடியும். சிறப்பான மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவும் அற்புதமாக இருப்பதால் மனநிறைவு உண்டாகும். விளையாட்டு போட்டி, கட்டுரை, பேச்சுப் போட்டி போன்றவற்றில் பரிசுகளை தட்டிச் செல்வீர்கள். நல்ல நண்பர்களின் நட்புகளால் சாதகமானப் பலன்கள் உண்டாகும். அரசு வழியில் ஆதரவு கிட்டும்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04.10.2018 முதல் 21.10.2018 வரை
உங்கள் ராசியாதிபதி சந்திரனுக்கு நட்பு கிரகமான குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5-ல் சஞ்சாரம் செய்வதும், 6-ல் சனி சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் கடந்த கால பாதிப்புகள் விலகி மருத்துவச் செலவுகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவு செய்வீர்கள்.

உற்றார் உறவினர்கள் சற்றே சாதகமாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் பெரிய தொகைளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிட்டும். துர்கை அம்மனை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.

குரு பகவான் அனுச நட்சத்திரத்தில் 22.10.2018 முதல் 20.12.2018 வரை
குருபகவான் சனியின் நட்சத்திரத்தில் உங்கள் ஜென்ம ராசிக்கு 5-ல் சஞ்சாரம் செய்வதும், 6-ல் சனி சஞ்சரிப்பதும் நற்பலன்களை ஏற்படுத்தும் என்பதால் எடுக்கும் முயற்சிகளில் லாபமும், வெற்றி கிட்டும். பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. எதிர்பாராத தனவரவுகளால் கடன்களும் சற்றே குறையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே சோர்வு ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவேர்களின் விருப்பம் நிறைவேறும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்ப்பார்கள். விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது நற்பலனை உண்டாக்கும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21.12.2018 முதல் 12.03.2019 வரை
குருபகவான் இக்காலங்களில் 3,12-க்கு அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5-ல் சஞ்சரிப்பதும், சனி 6-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும்.

திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தற்போது 1, 7-ல் சஞ்சரிக்கும் ராகு, கேது வரும் 13-2-2019 முதல் கேது 6-ஆம் வீட்டிலும், ராகு 12-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இருப்பது நல்ல அமைப்பு என்பதால் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் மேன்மையுடன் செயல்படுவார்கள். ராகுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் 13.03.2019 முதல் 09.04.2019 வரை
இக்காலங்களில் குருபகவான் தன் சொந்த வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலத்தில் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைய தாமதநிலை ஏற்படும். சனி, கேது 6-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகளில் சிறப்பான நிலையே இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக அமையும்.

உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. உங்களுக்கு இருந்த வந்த கடன்கள் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் லாபங்கள் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்கள் ஆரோக்கிய பாதிப்புகளால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 10.04.2019 முதல் 06.08.2019 வரை
குரு இக்காலங்களில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் சிறுசிறு இடையூறுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்றாலும் சனி, கேது 6-ல் சஞ்சரிப்பதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணம் பல வழிகளில் தேடி வரும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வீடு மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பும் உண்டாகும்.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்க தாமதநிலை ஏற்பட்டாலும் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதன் மூலம் வாழ்வில் மேலும் நற்பலன்கள் உண்டாகும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 07.08.2019 முதல் 28.10.2019 வரை
குருபகவான் இக்காலங்களில் 3, 12-க்கு அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5-ல் சஞ்சரிப்பதும், 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் முன்னேற்றங்களை பெற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணம் பல வழிகளில் தேடி வரும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். நல்ல வரன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை ஏற்படுத்தும்.

வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அமையும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில் வியாபாரமும் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். துர்கை அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

பரிகாரம்
கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 13-2-2019 வரை சர்பகிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சரபேஸ்வரரை வழிபடுவது, சிவன் மற்றும் பைரவரை வணங்குவது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது. கேதுவுக்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1,2,3,9 நிறம் – வெள்ளை, சிவப்பு கிழமை – திங்கள், வியாழன்
கல் – முத்து திசை – வடகிழக்கு தெய்வம் – வெங்கடாசலபதி

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபொலிஸ் அதிகாரிகளிற்கு நேர்ந்த கதி! யாழ். வடமராட்சியில் பதற்றம்!
Next articleகுரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 சிம்மம்.