முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் தங்கியிருந்தபோது, ஹோட்டல் கட்டணமாக செலவிடப்பட்ட பணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
67 மில்லியன் ரூபா இவ்வாறு ஹோட்டல் கட்டணமாக செலுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த பணத்தினை அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி செலுத்தியதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவி அயோமா ராஜபக்சவும் கடந்த 11ஆம் திகதி தாய்லாந்து செல்லும் வரை சிங்கப்பூரில் உள்ள மரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்தனர். இதன்போது தங்குமிட கட்டணமாக 67 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போது தாய்லாந்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி, அந்நாட்டிலுள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கு தாய்லாந்து அரசாங்கத்திடம் அனுமதி கோரிய போதிலும், இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தங்கியிருக்கும் ஹோட்டல் வளாகத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என தாய்லாந்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக தாய்லாந்தின் பேங்காக் போஸ்ட் செய்தித்தாள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.