அடிக்கடி வலிப்பு நோய் வந்து 15 ஆண்டுகளாக தவித்த சீனாவைச் சேர்ந்த ஒருவரது மூளையை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது அதிர்ச்சி தரும் காட்சி ஒன்று கிடைத்தது.
Wang (36) அடிக்கடி வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டதுடன், அடிக்கடி வாந்தியும் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில், இடது கையும் காலும் மரத்துப்போக ஆரம்பித்திருக்கிறது.
கடைசியில் மிகவும் சோர்வு ஏற்பட்டு, Wangஆல் வேலை செய்ய முடியாமல், வேலையை விட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியிருக்கிறார்.
அத்துடன் அடிக்கடி மயங்கி விழவும் தொடங்க, அவரது குடும்பத்தார் அவரை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி இறங்கியும் பலன் ஏதுமில்லை.
ஆனால், கடந்த ஆண்டு ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில் அவருக்கு ஸ்கேன் செய்த மருத்துவர்கள் அவரது மூளைக்குள் ஏதோ இருப்பதைக் கண்டுள்ளனர்.
பின்னர் அது ஒரு நாடாப்புழு என்பதும், அது உயிருடன் இருப்பதும் தெரியவந்துள்ளது.
அது Wangஇன் மூளையை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடத் தொடங்கியதால்தான், அவருக்கு வலிப்பு நோய், மயக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.
கடைசியாக அபாயகரமான அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்ட மருத்துவர்கள், உயிருடன் இருந்த அந்த ஐந்து இஞ்ச் நீள புழுவை வெளியே எடுத்தனர்.
15 ஆண்டுகளாக அந்த புழு Wangஇன் மூளைக்குள் வாழ்ந்து வந்துள்ளது. அது அகற்றப்பட்டபின் உடல் நலம் தேறி வருகிறார் Wang.
தனது முதலாளி நத்தைகளை விரும்பி உண்ணுவதைக் கண்ட Wang, தானும் அவற்றை தொடர்ந்து உண்ணத்தொடங்கியிருக்கிறார்.
அதன் மூலம்தான் அவருக்கு இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. நாடாப்புழுக்கள், நாய் அல்லது பூனையில் சிறுகுடலில் காணப்படும் என்பதும், சரியாக வேகவைக்காத இறைச்சி மூலம் அவை மனிதனுக்கும் பரவலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது