10 வயது மகனின் தாயை திருமணத்திற்கு கட்டாயபடுத்திய பிரபலம்!

0
385

ஃபேஸ்புக் மூலம் பழகிய இளம்பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி வீட்டுக்கு வரவழைத்து அடைத்து வைத்து தாக்கியதாக நடிகை புவனேஸ்வரியின் மகனை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை, சாலிகிராமம் ராஜாஜி நகரில் வசிப்பவர் உதயா (32). இவருக்கு திருமணமாகி 10 வயதில் மகன் இருக்கிறார். இவரது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். தற்போது தனது தாயாருடன் வசித்து வருகிறார்.

இவருக்கு கடந்த ஒரு மாதம் முன்பு முகநூலில் நடிகை புவனேஸ்வரியின் மகன் மிதுன் சீனிவாசன் என்பவர் பழக்கமாகியுள்ளார். இருவரும் முகநூல் பழக்கத்தில் நெருக்கமாகி உள்ளனர். உதயா கணவரைப் பிரிந்து வாழ்வதை அறிந்த மிதுன் சீனிவாசன் உதயாவை திருமணம் செய்துக்கொள்வதாகக் கூறியுள்ளார். உதயாவும் இதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதனிடையே மிதுனைப் பற்றி விசாரித்தபோது அவர் போதைப்பழக்கம் உள்ளவர் என்றும் போதை மாத்திரையைப் பயன்படுத்துபவர் என்று தெரியவந்ததால் திருமணம் செய்யும் முடிவை உதயா கைவிட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மிதுன் அவரை மிரட்டியுள்ளார். அடிக்கடி தொந்தரவு செய்து வந்த மிதுன் சீனிவாசன் கடந்த 13-ம் தேதி மாலை உதயாவுக்கு போன் செய்து ‘திருமணம் பற்றிப் பேச வேண்டும், என் வீட்டுக்கு வரமுடியுமா?’ என்று கேட்டுள்ளார்.

இதையடுத்து உதயா தனது 10 வயது மகனுடன் இரவு 8.30 மணி அளவில் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு வீட்டில் திருமணப் பேச்சைத் தொடங்கிய மிதுன், ஒரு கட்டத்தில் உதயாவைக் கடுமையாக மிரட்டித் தாக்க முயன்றுள்ளார். இதனால் பயந்துபோன உதயா தனது மகனுடன் கிளம்ப முயன்றுள்ளார்.

ஆனால் மிதுன் வெளியே செல்லவிடாமல் தடுத்து உதயாவைத் தாக்கியுள்ளார். இதனால் உதயா அழுதபடி தனது செல்போனில் போலீஸை அழைக்க முயன்றபோது அவரது ஐபோனை பிடுங்கிக் கீழே போட்டு உடைத்துள்ளார். பின்னர் உதயாவை அடைத்து வைத்துள்ளார்.

காலையில் மிதுனின் தாயார் நடிகை புவனேஸ்வரி, ‘மகன் தூங்குகிறான். நீங்கள் தப்பித்துச் செல்லுங்கள்’ என்று உதயாவையும், அவரது மகனையும் மீட்டு வெளியே அனுப்பியுள்ளார். பின்னர் இரண்டு நாட்கள் பயந்தபடி இருந்த உதயா தனது தாயாரிடம் நடந்ததைக் கூற அவர் உடனடியாக இதை போலீஸில் புகார் செய்ய வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து உதயா வளசரவாக்கம் போலீஸில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் மிதுன் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை அழைத்து விசாரித்துள்ளனர்.

அப்போது புகாரில் கூறிய விஷயங்கள் உண்மை என தெரிய வந்ததன் பேரில் உடனடியாக மிதுன் சீனிவாசன் மீது 342 (சட்டவிரோதமாக அடைத்து வைத்தல்), 323 (தாக்குதல்), 427 (சேதம் விளைவிப்பது), 506(1) (கொலைமிரட்டல்), 4 எச் (பெண் வன்கொடுமை சட்டம்) ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: