வெளியூர் மாப்பிள்ளை! ஒரு தவறால் என் வாழ்க்கை அழகானது !

0

ஒரு தவறு நிச்சயம் வாழ்வில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும். பொதுவாக தவறால் வாழ்வில் ஏற்படும் தாக்கமானது எதிர்வினையாக தான் இருக்கும். ஆனால், என் வாழ்வில் நடந்த தவறால் ஏற்பட்ட திருப்பமானது அழகானது. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஒரு கிராமத்தில். எங்கள் கிராமத்தில் கழிவறை முதல் இன்டர்நெட் வரை எந்த வசதிகளும் கிடையாது. காலைக்கடன், குளியல் என அனைத்தும் வெளியிடத்தில். நான் கண்ட பெரும் கேளிக்கை, விளையாட்டு இடம் எங்கள் ஊரு ஆற்றங்கரை தான்.

எனக்கு திருமணமான போது வயது 15. அந்தக் காலத்தில் பெண்ணுக்கு திருமண வயது இது, ஆணுக்கு திருமண வயது இது என்ற சட்டம் ஒன்று இருப்பதே எங்களுக்கு தெரியாது. வயதுக்கு வந்தால் அடுத்த ஓரிரு வருடங்களில் அந்த பெண்ணுக்கு திருமணமாகிவிடும். அதற்கு அடுத்த ஒரே ஆண்டில் அவள் ஒரு குழந்தை பெற்றெடுத்து ஒரு இல்லத்தரசி ஆகிவிடுவாள். பெரும்பாலும், எங்கள் கிராமத்தில் ஒரு பெண்ணின் வாழ்க்கை 20 வயதுக்குள் ஒரு வட்டத்திற்குள் சிக்கிவிடும். என் வாழ்க்கையும் அப்படியாக தான் ஒரு வட்டத்தில் சிக்கியது

உண்மையில் ஒரு முகவரி குளறுபடியால். இரண்டாவது தெருவில் இருந்த வீட்டுக்கு பெண் பார்க்க செல்ல வேண்டிய வெளியூர் மாப்பிள்ளை. முதலாவது தெருவில் இருந்த எங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டார். எங்கள் ஊரில் இருந்ததே ஓரிரு திருமண புரோக்கர்கள் தான். அவர்கள் இருவருக்குமே எந்த வீட்டில் எந்த பொண்ணு சடங்கானது என்று தெரியும். பெரும்பாலும் சடங்கான வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அவர்களிடம் மாப்பிள்ளை பார்க்க சொல்லி விடுவார்கள்.

அப்படியாக, நான் சடங்காகி ஒரு வருடம் தான் இருக்கும். என் எப்பாவும் அந்த திருமண புரோக்கர்களிடம் நல்ல வரன் பார்த்து பெண் பார்க்க வரும் படி கூற சொல்லி இருந்தார்கள். ஆனால், எங்கள் வீட்டுக்கு பெண் பார்க்க யாரும் வரவே இல்லை. அப்பா அடிக்கடி வரன் இருக்கிறதா என்று கூறி கொண்டே இருப்பார். அதே வாரத்தில் என்னை பெண் பார்க்க ஒரு வெளியூர் வரனிடம் கூறி இருப்பதாக புரோக்கர் கூறி இருந்தார்.

தவறு! வெளியூர் மாப்பிள்ளை வரன் பார்க்க எங்கள் கிராமத்திற்கு வந்தது உண்மை தான். அது எனக்காக அல்ல. எங்கள் பக்கத்து தெருவில் இருக்கும் ஒரு அக்காவை பார்க்க. ஆனால், நான் மேலே கூறியது போல, தவறாக தெரு மாறி எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டனர். வந்த வெளியூர் மாப்பிள்ளைக்கு என்னை பிடித்து போய்விட்டது. ஆகையால், அன்றே திருமணத்திற்கு நாள் குறித்து வெற்றிலைப் பார்க்கு மாற்றிக் கொண்டனர்.

சொந்த தொழில்! நான் எங்கள் கிராமத்தை தாண்டி வெளியே சென்றதே கிடையாது. ஆனால், மாப்பிள்ளை கோயம்புத்தூர். அவர் தொழில் பூக்கடை. சொந்தமாக பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார் என்று அப்பா மூலம் கேள்விப் பட்டேன். சொந்த வீடு, சொந்த தொழில்… நீ கொடுத்து வைத்தவள் என்று பலரும் என்னை பாராட்ட ஆரம்பித்தனர். ஆனால், எனக்கும் அவருக்கும் குறைந்தது 12 வயது வித்தியாசம் இருக்கும்.

கோயம்புத்தூர்! எங்கள் கிராமத்தை தாண்டி முதல் முறையாக ஒரு நகர வாழ்க்கைக்கு செல்கிறேன். அதற்கு முன் நான் அத்தனை எண்களில் பேருந்துகள் கண்டதே இல்லை. எங்கள் கிராமத்திற்கு எல்லாம் காலை, பகல், மதியம், மாலை என நான்கே பேருந்து தான் வரும். கோயம்புத்தூர் குளுமை எனக்கு மிகவுமே பிடித்து போயிருந்தது. இப்போது அந்த குளுமை கோவை தொலைத்துவிட்டது. எங்கள் ஊரை காட்டிலும் நான் கோவையை மிகவும் ரசித்தேன்.

குழந்தை! ஊர் மட்டும் தான் மாறியதே தவிர, எங்கள் ஊர் பெண்களை போலவே, திருமணமான மறுவருடமே குழந்தைக்கு தாயானேன். ஆனால், என் குழந்தையை எப்படி தூக்க வேண்டும், எப்படி பாலூட்ட வேண்டும்,, குளிப்பாட்ட வேண்டும் என்று கூட எனக்கு தெரியாது. எங்கள் வீட்டு காம்பவுண்டில் மூன்று வீடுகள் வாடகைக்கு விட்டிருந்தோம். அங்கிருந்த அக்காக்கள் தான் என் முதல் குழந்தைக்கு அனைத்து வேலைகளும் செய்தனர். டயப்பர் மாற்றி விடுவதில் இருந்து குளிப்பாட்டி உடை மாற்றி சோறூட்டுவது வரை அனைவரும் அவர்கள் தான். தாய் பால் மட்டுமே நான் கொடுத்து வந்தேன்.

உதவி கரங்கள்! நாங்கள் வீட்டு ஓனர், குடி இருப்பவர்கள் போன்ற உறவில் வாழவில்லை. என் கணவரும் ஒருநாளும் மாதத்தின் முதல் நாளில் வாடகை கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை எல்லாம் போட்டது இல்லை. நாங்கள் ஒரு உறவுக்காரர்கள் போல வாழ்ந்து வந்தோம். இரண்டு வருட இடைவேளையில் இரண்டாம் குழந்தை. எனது இரண்டாம் குழந்தை பிறந்த போது என் வயது 18. அப்போது தான் எனக்கு குழந்தை வளர்ப்பும், கோயம்புத்தூரும் ஓரளவுக்கு பரிச்சயம் ஆகியிருந்தது.

அதுவரை நான் அறியாதது என் கணவர் என்னை ஒரு வேலையும் செய்ய விட்டது கிடையாது. குழந்தைகளை பார்த்துக் கொள்வது உணவு சமைப்பது மட்டுமே என் வேலை. வீட்டிலும் கூட ஒத்தாசையாக பல வேலைகள் செய்துக் கொடுப்பார். அவர் தனது ஆரம்பக் காலக்கட்ட வாழ்க்கை பற்றி எதுவும் கூறியதே இல்லை. ஒரு நாள் இரவு உணவு ஊட்டிக் கொண்டிருந்த போது முதல் குழந்தை அடம்பிடிக்கவே என் கணவர் முன் அதட்டி அவனை ஒரு அடி அடித்தேன். அவருக்கு வந்ததே கோபம். குழந்தை என்றால் அடம் பிடிக்க தான் செய்யும் அதற்கு இப்படியா அடிப்பது என்று கோபித்துக் கொண்டார். பிறகு, அவரே உணவு ஊட்ட துவங்கினார்.

அன்று இரவு அன்று இரவு தான் முதன் முதலாக என்னிடம் பல உண்மைகளை கூறினார். அவருக்கு பள்ளி சென்று படிக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால், அப்பா இல்லாத சூழலால் படிக்க இயலவில்லை. சின்ன வயதில் இருந்தே பூக்கடையில் வேலை செய்து வந்தார். அவர் தன் வாழ்வில் அதிகம் அறிந்தது பூக்களை தான். அதனால் தான் என்னவோ மிகவும் மென்மையாக நடந்துக் கொள்வார். மிகவும் கஷ்டப்பட்டு தனக்கென தனிக்கடை, சொந்த வீடு என எல்லாம் அவரது வியர்வையில் வாங்கியவை. தன் வாழ்வில் கடந்து வந்த கஷ்டமான தருணங்கள் அனைத்தையும் அன்றைய ஒற்றை இரவில் கூறி முடித்தார். மேலும், தான் பட்ட கஷ்டம் தன் குழந்தைகள் படக் கூடாது என்பதற்காக தான் இப்படி உழைக்கிறேன். அதனால் தான் நீ அடித்த போது கொஞ்சம் துடித்து போனேன் என்று கூறி என்னிடம் மன்னிப்புக் கோரினார்.

படிப்பு! அப்போது அவரிடம் எனக்கும் படிக்க ஆசையாக இருக்கிறது. நான் தொலைதூர கல்வியில் படிக்கட்டுமா என்று கேட்டேன். ஒரு நொடி கூட யோசிக்காமல் நான் படிக்க சம்மதம் தெரிவித்தார். என்னை படிக்கவும் வைத்தார். டுடோரியல் கல்லூரியில் சேர்ந்து பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தேன். பிறகு, பி.காம்., எம்.காம் முடித்து. இப்போது ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.

அழகானது! ஒருவேளை என் கணவர் அந்த சரியான தெருவுக்குள் நுழைந்திருந்தார் என்றால், இன்று நான் எங்கள் ஊரிலேயே இது போல இரண்டு குழந்தைக்கு தாயாக மட்டுமே இருந்திருப்பேன். இந்த அழகிய ஊரில், ஒரு அழகான வாழ்க்கை அமைய அந்த ஒரு தவறு தான் காரணம். அனைவரது வாழ்விலும் தவறு எதிர்வினை மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் என் வாழ்வில் தவறு ஒரு அழகான திருப்பு முனையாக மாறியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇத சாப்பிட்டதால் 8 வயது சிறுமிக்கு மூளை முழுக்க புழுக்கள்! அதிர்ந்து போன மருத்துவர்.
Next articleவேகமாக கருத்தரிக்க ஒரு நாளைக்கு எத்தனை முறை கலவி கொள்ள வேண்டும்?