தக்காளியின் முக்கிய அம்சம் என்னவெனில் தனியே சாப்பிட்டாலும், சமையலுக்குப் பயன்படுத்தினாலும் இதன் சத்து குறைவதே இல்லை. தினம் ஒரு தக்காளி சூப் குடிப்பது விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். தக்காளியில் நிறைந்துள்ள லைக்கோப்பின் என்னும் பொருள்தான் தக்காளியின் சிவப்பு நிறத்துக்குக் காரணமாக அமைகிறது.
இது ரத்த அழுத்தம் வராமல் தடுப்பதோடு கெட்ட கொழுப்புகளையும், இதயநோய் மற்றும் இதயக்கோளாறுகளையும் தடுக்கும். இதில் வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துகள் அதிகம் இருக்கிறது.
புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அதை விட முடியாமல் தவிப்பவர்கள் தக்காளி சூப் சாப்பிட்டால் அதில் உள்ள கார்சினொஜென்னின் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் உடலில் உண்டாகும் அழிவைக் குறைக்கும்.
இந்தத் தக்காளி சூப்பைத் தினமும் சாப்பிட்டுவந்தால் முகம் பளபளப்பாவதுடன் மேனி மிருதுவாகும். எலும்புகள் மற்றும் கண்பார்வைக்கான வைட்டமின் கே, வைட்டமின் ஏ-வும் உள்ளது.
தக்காளி சூப் செய்து பருகினால் சோர்வும் களைப்பும் நீங்கி விடும். நன்கு பழுத்த தக்காளி இரண்டு (அ) மூன்றை எடுத்து, சிறிது சிறிதாக அரிந்து, மிக்ஸியில் இட்டு, ஜூஸ் எடுத்து வெறும் வயிற்றில் காலையில் பருகி வந்தால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
இதுமட்டுமின்றி புற்றுநோயைத் தடுக்கும் சக்தி கொண்டது தக்காளியில் உள்ள லைக்கோபின். தக்காளிக்கூழானது கணையம், பெருங்குடல், மார்பகம், கருப்பை வாய் ஆகிய உறுப்புகளின் புற்றுநோய் வாய்ப்பைக் குறைப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மரபணுக்களின் செயல்பாடுகளையும் சீராக்குகிறது.
காலை, மாலை இரு வேளைகள், தக்காளியைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் அகன்று விடும். தக்காளியை அரைத்து முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவினால் முகப்பரு நீங்கி சருமம் பளபளக்கும்.
தக்காளி சூப் சைவப்பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதகமாக அமைந்துள்ளது. இதில் அதிக அளவு ஊட்டச்சத்துகளும் பயன்களும் நிறைந்துள்ளது. தக்காளி சூப் தயாரிக்கும் மூலப் பொருளான தக்காளியில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவு.
இந்தத் தக்காளியானது உடலில் கொழுப்பு சேராமல் தடுப்பதோடு அதிக அளவு கலோரியை எரித்துவிடுகிறது. இந்தத் தக்காளியை ஆலிவ் ஆயிலுடன் சமைத்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாவதோடு டயட் மேற்கொள்பவர்களுக்கு டயட் ஆகவும் அமையும். தக்காளியில் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும்.
சரி, தக்காளி சூப் எப்படி வைப்பது
அன்றாடம் வாங்கி பயன்படுத்தும் தக்காளி, உலகெங்கிலும் எளிதாகக் கிடைக்கக்கூடியது. சமைத்தாலும் இதன் சத்துகள் குறைவதில்லை என்பது கூடுதல் சிறப்பு. இதோ உங்களுக்காக சூப்பர் தக்காளி சூப்!
தேவையான பொருள்கள்:
தக்காளி – 5
வெங்காயம் – 1
மிளகுத்தூள் – தேவையான அளவு
பூண்டு – 6 பல்
வெண்ணெய் – 2 தேக்கரண்டி
சோள மாவு – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – தேவையான அளவு
செய்முறை:
தக்காளி, வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் வெண்ணெய் விட்டு உருகியதும் அதில் பூண்டு போட்டு வதக்கி பிறகு வெங்காயம் சேர்த்து இரண்டும் நன்றாக வதங்கியதும் தக்காளி கலந்து நன்றாக மசியும் வரை வதக்கி பிறகு தேவைக்கேற்ப நீர் விட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டவும். பிறகு வடிகட்டிய நீரில் சோள மாவைக் கலந்து சிறிது நீர் சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து பின்னர் மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை தூவி சூடாகப் பரிமாறவும்.
மருத்துவக் குணங்கள்:
இதை வாரத்துக்கு இரண்டு நாள்கள் செய்து குடித்தால் உடல் வலிமை பெறும். இந்தத் தக்காளி சூப் விரைவாக ஜீரணமாகக் கூடியது. உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் ஃபோலிக் அமிலம், அதிக அளவில் மக்னீசியம், சிறிது கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செம்பு, ஃபாஸ்ப்போரிக் அமிலம், சிட்ரிக் அமிலம் ஆகியவை தக்காளியில் உள்ளன. மேலும், வைட்டமின் பி, சி, டி ஆகியவையும் உள்ளன.
இது உடல் பலவீனம், சோம்பல் ஆகியவற்றை நீக்கும். எலும்புகள் மற்றும் பற்களுக்குப் பலத்தை தரும். மலச்சிக்கலைக் குறைத்து ஜீரண சக்தியை அளிக்கும். இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கும். கபம், சளியை வெளியேற்றும்.