அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைப் போன்று அதே உருவத்தில் டைட்டானிக்-2 உருவாக்கப்பட்டு வருகிறது. டைட்டானிக்-1 கப்பல் பயணித்த அதே பாதையில் டைட்டானிக் 2 கப்பல் வரும் 2022-ம் ஆண்டு தன் பயணத்தைத் தொடங்க உள்ளது.
கடந்த 1915-ம் ஆண்டு, ஏப்ரல் 10-ம் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் இருந்து நியூயார்க் நகருக்கு டைட்டானிக் கப்பல் புறப்பட்டது. ஆனால், கப்பல் புறப்பட்ட 5 நாட்களில் ஏப்ரல் 15-ம் தேதி அட்லாண்டிக் கடற்பகுதியில் பயணித்தபோது, பனிமலையில் மோதி கப்பல் மூழ்கியது. இந்தக் கப்பலில் பயணித்த 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளில் 1500 பேர் இறந்துவிட்டாகக் கூறப்படுகிறது.
இந்த டைட்டானிக் கப்பல் பயணத்தைத் தழுவி எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படமான டைட்டானிக் உலக அளவில் வசூலை வாரிக் குவித்தது.
இந்நிலையில் கடலில் மூழ்கிய டைட்டானிக்-1 கப்பலைக் போன்று டைட்டானிக்-2 கப்பல் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தக் கப்பல் டைட்டானிக்-1 கப்பல் பயணித்த அதே பாதையில் தனது பயணத்தை 2022-ம் ஆண்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
1912-ம் ஆண்டு சவுத்தாம்டனில் இருந்து நியூயார்க் நகரம் புறப்பட்ட டைட்டானிக் கப்பல்: கோப்புப்படம்
இந்த டைட்டானிக்-2 கப்பலை ப்ளூ ஸ்டார் லைன் நிறுவனம் தயாரித்து வருகிறது. சீனாவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் இந்த கப்பல் 2022-ம் ஆண்டு அங்கிருந்து புறப்பட்டு சவுத்தாம்டன் நகரம் வந்து அங்கிருந்து நியூயார்க் புறப்பட உள்ளது.
இந்த டைட்டானிக்-2 கப்பல் குறித்து ப்ளூஸ்டார் நிறுவனத்தின் தலைவர், தொழிலதிபர் கிளிப் பால்மர் கூறியதாவது:
”டைட்டானிக்-1 கப்பல் தனது பயணத்தைத் தொடங்கிய சில நாட்களிலேயே அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. நாங்கள் அதை டைட்டானிக் கப்பல் போன்று டைட்டானிக்-2 கப்பலை உருவாக்கி வருகிறோம்.
டைட்டானிக்-1 கப்பலில் இருந்த அதே தோற்றம், உள்ளரங்கு வடிவமைப்பு, அறைகள், ஓவியங்கள் அனைத்தும் அதே தோற்றத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால், டைட்டானிக்-1 கப்பலில் இல்லாத பாதுகாப்பு அம்சங்கள், நவீன தொழில்நுட்பங்கள் இந்தக் கப்பலில் இருக்கும்.
டைட்டானிக்-2 கப்பலில் ஏறக்குறைய 2400 பயணிகள், 900 கப்பல் பணியாளர்கள் பயணிக்கலாம். 2018-ம் ஆண்டு இந்தக் கப்பலை வெள்ளோட்டம் பார்க்க முதலில் திட்டமிட்டு இருந்தோம். ஆனால், நிதிப் பிரச்சினை காரணமாகக் கப்பல் கட்டுமானம் கால தாமதமானது.
இந்தக் கப்பல் கட்டிமுடிக்கப்பட்டதும், முதலாவது டைட்டானிக் கப்பல் பயணித்த அதே பாதையான, சவுத்தாம்டன் முதல் நியூயார்க் வரை பயணிக்க உள்ளது. இந்தக் கப்பல் கட்டுமானத்தின் ஒட்டுமொத்த செலவு 50 கோடி டாலர்(ரூ.3,658 கோடி). முதலாவது டைட்டானிக் கப்பலில் பயணித்த அதே அனுபவம், 21 நூற்றாண்டுக்கான பாதுகாப்பு அம்சங்கள், சொகுசு வசதிகள் இதில் இருக்கும்”.
இவ்வாறு பால்மர் தெரிவித்தார்.