வயித்துக் கோளாறுகளை விரட்டியடிக்கணுமா! இஞ்சிக்கு மிஞ்சினது எதுவுமே இல்ல!

0

‘நொறுங்க தின்னா… நூறு வயசு’னு சொலவடை சொல்லுவாங்க ஊரு காட்டுல. ஆனா, நுனிப்புல் மேயுறது கணக்கா கண்டதையும் அரைச்சிட்டு, வேலை அவசரத்துல ஓடறவங்கதான் இப்பல்லாம் ஜாஸ்தி. அதனால… ஜீரணக்கோளாறு, வயித்து உப்புசம்னு அன்னாடம் ஏதாச்சும் ஒண்ணு புறப்பட்டு நின்னு ஆளை ஆட்டிப்படைக்குது. அதையெல்லாம் விரட்டியடிக்கற வழிமுறைகளை பார்ப்போம்.
ஆறு மாசத்துல இருந்து மூணு வயசு வரை உள்ள கொழந்தைங்களுக்கான வைத்தியம்… 

கால் ஸ்பூன் ஓமம் எடுத்துக்கோங்க. அதை ஒரு சட்டியில போட்டு வெடிக்கிற வரைக்கும் நல்லா வறுங்க. பிறகு, கால் டம்ளர் தண்ணி விட்டு நல்லா கொதிக்க வைங்க. தண்ணி நல்லா சுண்டி ஒரு பாலாடை (சங்கு என்றும் கூறுவார்கள்) அளவு வந்ததும் இறக்கி வச்சுருங்க. அதை கொழந்தைங்களுக்கு கொடுத்தீங்கனா… வயித்து உப்புசம், பசியில்லாம வயிறு மொத்து மொத்துனு இருக்கறது, எப்பப் பாத்தாலும் அழுதுகிட்டே இருக்கறது மாதிரியான எல்லா பிரச்னைகளும் சரியாயிரும். சில பிள்ளைக தண்ணி தண்ணியா வெளிக்கு போகும். அதுவும்கூட இந்த வைத்தியத்துக்கு கட்டுப்படும்.


பேய்மிரட்டி இலை – 4, சீரகம் – கால் ஸ்பூன்… இது ரெண்டையும் ராத்திரியே ஒரு சட்டியில போட்டு, அரை டம்ளர் தண்ணி விட்டு கொதிக்க வைங்க. மறுநாள் காலை யில எடுத்து பிழிஞ்சி, ஒரு பாலாடை அளவு கொழந்தைங்களுக்கு கொடுத்தா… வயிறு சம்பந்தமான பிரச்னையெல்லாம் பட்டுனு காணாம போகும்.
அடுத்தது, பெரியவங்களுக்கான வைத்தியம்…

இஞ்சித் துவையல். இது எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். ஆனா, அதோட மகத்துவம் இருக்கே… அதுதான் பலபேருக்கு தெரியாது. வயிறு சம்பந்தமான பிரச்னைனா… அதுக்கு மிஞ்சின வைத்தியம் எதுவும் இல்லைனே சொல்லலாம். இஞ்சியோட தோலை சுத்தமா எடுத்துட்டு, நல்லெண்ணெய் விட்டு வதக்கி புளி, உப்பு, காஞ்ச மிளகாய், வறுத்த உளுந்தம்பருப்பு சேர்த்து அரைச்சி சாப்பிடுங்க, செரிமானக்கோளாறெல்லாம் காத்தா பறந்துரும்.

பிரண்டைத்தண்டு. நல்ல இளந்தண்டா 10 கணு எடுத்துக்கோங்க. அதை நல்லெண்ணெய் விட்டு வதக்கி… புளி, உப்பு, காஞ்ச மிளகாய், வறுத்த உளுந்தம்பருப்பு சேர்த்து அரைச்சி சாப்பிட்டீங்கனாலும் கோளாறு போயே போயிரும். அதுமட்டுமில்ல… சாப்பாடும் கூட கொஞ்சம் இழுக்கும்.
வயித்து உப்புசம், திடீர் வயித்துவலினு சிலர் படாத பாடுபடுவாங்க. உடனே ஒரு கைப்பிடி முருங்கை இலையை உருவுங்க, காம்பெல்லாம் தள்ளிட்டு… கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நல்லா கசக்குங்க. அதுல வர்ற சாறை அப்பிடியே குடிச்சிருங்க. கசக்குறப்ப கைவிரல் நடுவுல வடிஞ்சிருக்கற சாறை வயித்துல தடவுங்க, வயித்துவலி வந்த வழியைப் பாத்து ஓடியே போயிரும் ஓடி!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநகச்சுத்தை விரட்டும் நாட்டு வைத்தியம்!
Next articleஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு! சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!