பண்புள்ள அரசியலை மேற்கொண்டு வரும் நபர் என்ற வகையில் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பழிவாங்க போவதில்லை என ஐக்கிய தேசிய்க்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் சந்தேகம் மற்றும் அச்சத்தை போக்கும் வகையில் அவருக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ள ரணில் விக்ரமசிங்க, எந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியை பழிவாங்க போவதில்லை எனக் கூறியுள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் கட்சித் தலைவர்கள் மனோ கணேசன், பழனி திகாம்பரம், வீ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று காலை ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி முன்வைத்த மூன்று பிரதான விடயங்களை மனோ கணேசன் பகிரங்கப்படுத்தியிருந்தார். இதனையடுத்தே ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதிக்கு தனது செய்தியை அனுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்தால், ரணில் விக்ரமசிங்கவுக்கு பதிலாக வேறு ஒருவரை பிரதமராக தெரிவு செய்யுமாறு, ஜனாதிபதி கூறியதாக மனோ கணேசன் குறிப்பிட்டிருந்தார்.
ரணில் விக்ரமசிங்கவுடன் தொடர்ந்தும் இணைந்து பணியாற்ற முடியாது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இது சம்பந்தமான மனோ கணேசன் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பின்னர், ரணில், மனோ கணேசனை அழைத்து பேசியுள்ளார்.
தான் எந்த வகையிலும் ஜனாதிபதியையோ அவரது அணியை பழிவாங்க மாட்டேன் எனவும் தான் அங்கம் வகிக்கும் பண்புள்ள அரசியலில் பழிவாங்கல் உள்ளடக்கப்படவில்லை எனவும் இதனால், எந்த சந்தேகமும் அச்சமும் கொள்ள வேண்டாம் என ஜனாதிபதியிடம் கூறுமாறு ரணில் விக்ரமசிங்க, மனோ கணேசனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் ஒரு தவறை செய்து அதனை மறைக்க பல தவறுகளை செய்யாது, நடந்த தவறுகளை மறந்து மீண்டும் இணைந்து செயற்பட அழைப்பு விடுப்பதாகவும் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். எனினும் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி எப்படி தீர்க்கப்பட போகிறது என்பதை தன்னால் சரியாக கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.