யாழ்.பல்கலை மாணவர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை! பொலிஸாரின் பொறுப்புக்களை பொறுப்பேற்றுள்ள ஆவா குழு!

0

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்களை நடத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவரும் ஆவா குழு என்ற ஆயுதக் கும்பல் யாழ் – பல்கலைக்கழக மாணவா்களுக்கு பகிரங்க எச்சாிக்கையொன்றை விடுத்து துண்டு பிரசுரங்களை விநியோகித்திருக்கின்றது.

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பில் தங்களுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதை அடுத்தே இந்த எச்சரிக்கையை விடுத்திருப்பதாக நேற்றைய தினம் விநியோகித்துள்ள துண்டு பிரசுரங்களில் ஆவா குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பகிடிவதை தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அதற்கான தண்டனைகள் நாட்டில் இருக்கின்ற போதும் பல பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகள் தொடர்வதாகவும் குறிப்பிட்டுள்ள ஆவா குழு, ஈழ பூமியில் ஈழப்போராட்டங்கள் இடம்பெற்ற காலத்தில் இல்லாத பகிடிவதைகள் இப்பொழுது தலை தூக்கியதற்கான காரணங்கள் என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பில் பல முறைப்பாடுகள் ஆவாக் குழுவினருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் தெரிவித்துள்ள அந்தக் குழு, இதுவரை காலமும் உண்மைக்கு புறம்பாக கூறும் ஊடகங்களால் ஆவா குழு சமூக சீர்கேட்டாளர்களாகவே கூறப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தமது ஆவா அமைப்பானது பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் சமூக சீர்கேடுகளையும் அழிக்கும் அமைப்பாகவே தாங்கள் இந்த அமைப்பை கட்டமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தமது அமைப்பின் 40 சதவீதமானோர் பல்கலைக்கழக மாணவர்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ள அந்த குழு, பல்கலைக்கழக பகிடிவதையினை தவிர்ப்பதற்கு ஆவா குழுவினால் பகிடிவதைக்கு எதிரான குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

மறைமுகமாகவோ நேரடியாகவோ பல பிரச்சினைகளுக்கு தாங்கள் தீர்வுகளை பெற்றுக்கொடுத்திருப்பதாகவும் பெருமிதம் வெளியிட்டுள்ள ஆவா குழு, அவை மட்டுமன்றி பல்கலைக்கழக மாணவர்களான சுலக்சன் மற்றும் கஜன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய போதும் தாங்களே முன்னின்று நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் கூறியுள்ளது.

இதனால் இனிவரும் காலங்களில் யாழ். பல்கலைக்கழகத்தில் பகிடிவதை இடம்பெறுமாயின் பகிடிவதைகளில் ஈடுபடுபவர்களின் உடல் பாகங்கள் ஈவு இரக்கம் இன்றி துண்டிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ள ஆவா குழு, பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பில் தங்களிடம் முறையிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் இயங்கிவரும் ஆவா குழு உறுப்பினர்கள் யார் என்று தெரியாத நிலையில் அண்மையில் கொழும்பிலிருந்து ஒளிபரப்பாகும் சிங்கள தொலைக்காட்சியான தெரன தொலைக்காட்சியில் அருண் சித்தார்த் மைத்ரியன் என அடையாளப்படுத்திக்கொண்டுள்ள அருண் அருளாந்தனை பிரபல்யமான ஆவா குழுவின் தலைவன் என அறிமுகப்படுத்தி விசேட செவ்வியொன்றையும் ஒளிபரப்பியிருந்தது.

தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த இந்த செவ்வியை அடுத்து அருண் அருளாநந்தம், சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, மற்றும் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, ராஜித்த சேனாரத்ன உட்பட தென்னிலங்கையிலுள்ள முக்கிய அரசியல் வாதிகளையும் சந்தித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேவேளை ஜே.வி.பி யிலிருந்து பிரிந்து குமார் குணரத்னம் தலைமையில் இயங்கிவரும் முன்னிலை சோசலிசக் கட்சியின் சார்பில் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலிலும் அருண் அருளாந்தம் போட்டியிட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமகரம் – விகாரி வருட பலன்கள் 2019-2020 !
Next articleநெருங்கும் மரணம்! முகம் சுழிக்க வைக்கும் காதல் ஜோடியின் செயல்! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள்!