யாழ்ப்பாணத்தில் நடைபெறும் நூதன கொள்ளை மக்களே ஜாக்கிரதை!

0

அது யாழ்ப்பாண நகரச் சுற்றாடலில் உள்ள ஹோட்டல்களில் ஒன்று. எனது நண்பர் ஒருவர் மங்கல நிகழ்வு ஒன்றை இரவு உணவுடன் ஏற்பாடு செய்திருந்தார்.

நிகழ்வு முடிவடைந்ததும், ஹோட்டல் உரிமையாளரிடம் சாப்பாடு, ஏனைய உபசரிப்புச் செலவுக் கணக்கை முடிக்கப் போனார்.

உங்களது நிகழ்வில் 450 பேர் உணவருந்தி உள்ளனர் என பில்லைக் கொடுத்தார்.

நண்பர் சொன்னார், இல்லையே 300 பேரளவில் தானே வந்தனர். இப்படி பில் வராதே. உங்களது கதிரைகளை நிகழ்வு ஆரம்பிக்க முன்னரேயே குறுக்கு நெடுக்காக நான் எண்ணி இருந்தேன்.

300 பேரளவில் தான் இருக்க வசதி உள்ளதாக கதிரைகள் போடப்பட்டிருந்ததைக் கண்டேன் என்றார். ஹோட்டல் முதலாளி சொன்னார் இல்லையில்லை…. ஆள்கள் வந்து வந்து போனார்கள் அது உங்களுக்குத் தெரியவில்லை. 450 பேரென்ற எங்களது கணக்குச் சரி என்றார்.

எனது நண்பரும் விடாப் பிடியாகச் சொன்னார் எனது அழைப்பில் ஆள்கள் பெரும்பாலானோர் வந்ததை உறுதி செய்த பின்புதான் இரவு உணவு கொடுக்க ஆரம்பித்தோம். அதனால் உங்களது கணக்குப் பிழை என்றார்.

சரி உங்களது மண்டபத்தில் சிசிரிவி கமெரா உள்ளது. அதிலொன்று சாப்பாட்டுப் பிளேட் எடுக்கும் பக்கத்தில் உள்ளது. அதில் பார்ப்போம் எத்தனை பேர் எடுக்கின்றனரென உங்களது கணக்குச் சரியாக இருந்தால் பணத்தை உடன் தருகிறேன்.

நண்பரும் விடாப்பிடியாக நின்றார். ஹோட்டல் முதலாளியும் வேண்டா வெறுப்பாக உடன்பட்டு சிசிரிவி கமெராவின் பதிவுகளை பார்க்க உடன்பட்டார். நண்பர் ஒரு கொப்பியிலும், முதலாளி ஒரு கொப்பியிலுமாக அந்தக் கமெராப் பதிவை மீள விட்டு சாப்பாட்டுக் கோப்பைகளை எடுப்பதை எண்ணத் தொடங்கினார்கள்.

இருவரும் ஏக காலத்தில் அருகருகே இருந்து கொப்பியில் குறித்து எண்ணத் தொடங்கினார்கள். எண்ணி முடிய அந்த நிகழ்வுக்கு வந்திருந்த ஆள்களின் மொத்த எண்ணிக்கை 295 பேராகியது. ஹோட்டல் முதலாளி வாயே திறக்கவில்லை. நிகழ்வை ஒழுங்கு செய்த நண்பர் 295 பேருக்கு உரிய பணத்தைக் கொடுத்தார்.

அவர் துணிந்து இப்படிக் கேட்காமல் முகத்துக்கு அஞ்சி நடந்திருந்தால் மேலதிகமாகக் கொடுத்த 150 பேருக்கான 150 000 ரூபாவிற்கு என்ன கதியாகியிருக்கும்?

சேமிப்புக்கும் சிக்கனத்துக்கும் பேர் போன நாம், ஊதாரிகளாக மாறியதன் விளைவு தான் இப்படியான நாகரீகச் சுரண்டல்களுக்குக் காரணம்.

ஆவரங்கால் சிவசக்தி மண்டபம் உழைக்கும் காசில் தனது அறக்கட்டளை மூலமாக நிறைய சமூக சேவைகளைச் செய்து வருகிறது. அது போலவே நாச்சிமார் கோயிலடி ராஜா கிறீம் ஹவுஸ் முதலாளியும் மண்டப வாடகையின்றி புத்தக வெளியீட்டு விழாக்களுக்கு இடம் வழங்கி உதவுகின்றார். இப்படி ஆங்காங்கே சில தர்மவான்கள் உள்ளனர்.

சாப்பாடு, சோடாப் போத்தல், தண்ணீர்ப் போத்தல் கணக்குகளில் கணக்கு விட்டு உழைப்போரும் ஆங்காங்கே இருக்கின்றனர் தான்.

எம்மில் பலருக்கு வெளிநாட்டுக் காசு தானே கேட்ட உடன் விசுக்கி எறிந்தால் சரி.

எம்மவர், சிசிரிவி கமெரா உள்ள மண்டபத்திற்குத் தான் காசு தருவோமென அடம் பிடித்து, கமெராவில் பார்த்துத் தான் காசு தருவோம். கமெரா இல்லாத மண்டபங்களை பகிஸ்கரித்தால் சுரண்டலைத் தடுக்கலாம்..

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதளபதி 63 படத்தில் விஜய்யின் மகன் நடிக்கிறாரா?
Next articleகணவனுக்கு மயக்க மருந்து ! காதல் மோகத்தில் மனைவி அரங்கேற்றிய விபரீதம்!