யாழில் திருமாவளவன் ஆவேசம்! சிங்கள தலைவர்கள் அனைவரும் தமிழீழத்திற்கு எதிரானவர்களே!

0

சிங்களக் கட்சிகள் அதன் தலைவர்கள் யாராக இருந்தாலும் தமிழீழத்திற்கு எதிரானவர்கள் தான். தமிழீழ நலன்களுக்கும் எதிரானவர்கள்தான் என தமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் தமிழ் மக்களுடைய நலன்களை அடிப்படையாக கொண்டு ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு வருகைத்தந்துள்ள திருமாவளவன், யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இன்று இலங்கையில் உருவாகியிருக்கும் அரசியல் நெருக்கடி நிலையினை சமாளிப்பதற்காகவும் தமிழர் நலன்களுக்காக அதனை பயன்படுத்தி கொள்வதற்கும் அரசியல் கட்சிகளின் ஒன்றிப்பு அவசியமானதாக அமைந்துள்ளது.

ஜனாதிபதி சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தது ஜனநாயகப் படுகொலை. சட்டத்தை, விதிகளை, மரபுகளை மீறி இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது ஜனநாயகத்திற்கு முரணானது. இதனை இந்தியா உட்பட சர்வதேச சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.

ஒரு நாட்டின் அரசியலில் பிற நாடுகள் தலையிட கூடாது என்றாலும் கூட இந்த நடவடிக்கைகள் ஜனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையயை பாதிக்கும்.

ஆகவே இந்தியா உள்ளிட்ட அரசுகள் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டுமென எமது கட்சி கோருகிறது.

மகிந்த வரக்கூடாது என்பது மட்டுமே விருப்பமாக இருக்க முடியாது. என்னைப் பொறுத்தவரையில் சிங்களக் கட்சிகள் அதன் தலைவர்கள் யாராக இருந்தாலும் தமிழீழத்திற்கு எதிரானவர்கள் தான். தமிழீழ நலன்களுக்கும் எதிரானவர்கள். ஆனால் அவர்களை எப்படி எம் வழிக்கு கொண்டு வருவதற்கு நாம் வலிமையோடு இருக்க வேண்டும்.

நடாளுமன்றத்திற்கு உட்பட்டு நம்மை வலிமைப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. அதற்கு ஒருங்கிணைந்து செயற்படுவது தான் சிறந்தது.

சிங்களவர்களிடமிருந்து எமது கோரிக்கைகளை வென்றெடுக்க எமக்கிருக்கும் ஒரேயொரு வாய்ப்பு நாம் ஒற்றுமையாக இருப்பது. தமிழ் கட்சிகள் தலைவர்கள் ஒருங்கிணைய வேண்டும். ஒன்றுபட்டு இத் தேர்தலைச் சந்திக்க வேண்டும்.

விக்னேஸ்வரனைச் சந்தித்த போதும் தமிழ் தேசிய அரசியல் தலைவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்து செயற்பட வேண்டுமென்பதனைச் சொல்லியிருக்கின்றேன்.

தமிழ்த் தேசியக் கொள்கையுடன் செயற்படுகின்ற எல்லாக் கட்சிகளும் கடந்த காலங்களில் சேர்ந்து செயற்பட்டவர்கள். இப்ப பிரிந்து நிற்கின்றனர். ஆகவே நடைபெறும் நடாளுமன்றத்தில் பிரிந்து இருக்காமல் சேர்ந்து செயற்பட வேண்டும். அந்த முயற்சி தான் தேவை.

ஒருவருக்கு ஒருவர் சந்தேகப்பட்டுக் கொண்டு அல்லது விமர்சித்துக் கொண்டு இருக்கிற போக்குகளை முடிந்தவரை கைவிட முன்வாருங்கள். நமக்கிடையில் நாம் விமர்சித்துக் கொள்வதால் எந்தப் பயனும் இல்லலை.

அவ்வாறு செய்வது அடுத்த தலைமுறைக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாககத் தான் அமையும். எனவே கடந்த காலங்களில் எமக்கு ஏற்பட்ட பாதிப்புக்ககளிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினை நிறையவே இருக்கின்றன.

அதிலும் கடந்த பத்தாண்டு காலத்தை சுய விமர்சனங்களுக்காகவே பாழாக்கிவிட்டோம். ஆகவே அந்த நிலைமை இனிமேலும் தொடரக் கூடாது. இனி கொள்கைப் பகைவர்களை எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில் நாம் ஓரணியில் திரள வேண்டும். அதற்கு நம்முடைய சக்திகளைப் பயன்படுத்த வேண்டும்.

ஏனெனில் நமது தோளில் கையைப் போட்டுக் கொண்டே வேரறுக்கக கூடிய சிங்கள தலைவர்களை நாங்கள் பார்த்திருக்கின்றோம். ரணில் விக்ரமசிங்க என்ன செய்தார் என்பதும் மகிந்த ராஐபக்ச என்ன செய்வார் என்பதும் தெரியும்.

ஆகையினால் எமது மக்களுக்காக நாம் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் அவசியம். பிராந்திய நலன்கள் சர்வதேச அரசியல் ஆகியவற்றைக் கொண்டு எமது போக்குகள் அமைய வேண்டும். அத்தகைய அனுகுமுறையைப் பொறுத்தும் கையாளும் உத்தியைப் பொறுத்து தான் இவை எல்லாம் இருக்கிறது.

நாம் செய்ய வேண்டியது என்னவெனில் தமிழ்ச் சமூகம் தமிழகத்திலும், தாயகத்திலும், புலம் பெயர் தேசங்களிலும் வாழ்ந்தூலும் சரி ஆற்றாமை விமர்சனங்களை வெளிப்படுத்தக் கூடிய வகையில் நமக்கிடையிலான விமர்சனங்களை தான் கையிலெடுத்திருக்கின்றோம்.

அதனையெல்லாம் உண்மையில் கைவிட்டு நமக்கான அரசியல் தீர்வு எது அதனை எவ்வாறு அடையப் போகிறோம். இதற்கு யாருடைய ஆதரவைப் பெற்றுக் கொள்ளப்போகிறோம் என்று சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

சர்வதேச சமூகத்தினுடைய ஆதரவில்லாமல் ஈழத்தமிழர்களுக்கு தீர்வைக் காண முடியாது. அதற்கு சர்வதேச நன்மதிப்பு ஆதரவைப் பெற்றாக வேண்டும்.

அதற்கேற்ப தமிழ்ச் சமூகம் ஒன்றாக உலக அரங்கில் பலத்தை வெளிப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றன.

தமிழ் சமூகம் விமர்சனங்களை ஓரம் வைத்துவிட்டு அடுத்த பத்தாண்டு என்ன செய்யப் போகிறோம் என்ற விரிவான பார்வை நோக்க வேண்டும்.

ஆகையினால் கட்சித் தலைவர்களைத் தாண்டி பாதிக்கப்பட்ட தமிழ் சொந்தங்களுக்காக தமிழ்த் தேசிய அரசியல் சக்திகள் எல்லாம் ஒன்றுபட வேண்டும்.

இதனை மக்களே முன்வைக்க வேண்டும். மக்களை வழிநடத்தும் அரசயில் தலைவர்கள் எல்லாரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅரசியல் களத்தில் பாரிய அதிர்வலைகள்! மகிந்த தேசப்பிரியவின் திடீர் அறிவிப்பு!
Next articleஉங்கள் உடலில் கல்லீரல் கொழுப்பை கரைக்க இந்த ஒரு பொருள் போதும்!