மன்னார், சின்னக்கடை தெற்கு வயல் வீதி பகுதியில் உள்ள வீட்டிற்குள் நேற்று இரவு முதலையொன்று நுழைய முயற்சித்துள்ளது.
மன்னார் சின்னக்கடை தெற்கு வயல் வீதியில் புனரமைப்பு செய்யப்பட்ட குளத்தில் நிறைய முதலைகள் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் குறித்த குளத்தில் காணப்பட்ட முதலை ஒன்று நேற்று இரவு 11 மணியளவில் குளத்தில் இருந்து வெளியில் வந்து அருகில் உள்ள வீட்டினுள் செல்ல முயன்றுள்ளது.
இதனை அப்பகுதியில் உள்ள வளர்ப்பு நாய்கள் குரைத்து காட்டிக் கொடுத்துள்ளன. இந்த நிலையில் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்த போது வீட்டு வாசலில் முதலையை கண்டுள்ளனர்.
சுமார் 5 அடி நீளம் கொண்ட குறித்த முதலையை அப்பதியை சேர்ந்தவர்கள் இணைந்து இன்று அதிகாலை 1 மணியளவில் உயிருடன் பிடித்துள்ளனர்.
இதன் பின் சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.





