பொதுவாக சில பெண்களுக்கு மாதத்தில் 3 நாட்கள் போராட்டமான நாட்களாக அமைந்து விடும். அதிகமான வலி, அதிகமான ரத்தப் போக்கு போன்றவற்றால் அவர்களது இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும்.
மாதவிலக்குக்கு முன்பு, உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பெண்கள் சில பிரச்சினைகளை சந்திப்பார்கள். கோபம், எரிச்சல் போன்ற அந்த அறிகுறிகளுக்கு, `ப்ரி மென்ஸ்சுரல் சின்ட்ரோம்’ என்று பெயர்.
இது மாதவிலக்கு ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன் ஏற்பட்டு அதன் பின்னர் நீங்கிவிடும். ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பது அல்லது குறைவது, அட்ரினல் செயல்பாடு அதிகமாவது, வைட்டமின் குறைபாடு போன்றவைகளால் இந்த அறிகுறிகள் ஏற்படும்.
மார்பகம் கனத்துக் கொள்வது, எடை கூடுவது, சோர்வு, எரிச்சல் மற்றும் தூக்கமின்மை ஆகியவை இதற்கான அறிகுறிகளாகும்.
மேலும், மாதவிலக்கு ஆவதற்கு முன்பு ஏற்படும் இடுப்பு மற்றும் கால் வலியினாலும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கெல்லாம் சரியான பயிற்சியும், மன அமைதியும் அவசியம்.
யோகாசனத்தில் தீர்வு
பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கு யோகாசனத்தில் தீர்வு உண்டு. சில பெண்களுக்கு மாதவிலக்கு சரியாக வராது. ஐந்து மாதங்களுக்கு ஒருமுறை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வரும். சிலருக்கு மாதவிலக்கு சரியாக வந்தாலும், தீட்டு சரியாக ஏற்படாது. விட்டுவிட்டு அல்லது மிகக் குறைவான அளவே இருக்கும். மாறாக சிலருக்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்க அதிக பிளீடிங்காக இருக்கும். மாதம் ஒருமுறை வராமல் சிலருக்கு அடிக்கடி மாதவிலக்கு ஏற்படும். பிசிஓடி எனப்படும் கருப்பையில் நீர்க்கட்டி தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு யோகாசனம் மூலம் நிவாரணம் பெறலாம் என்கிறார் சென்னை கிருஷ்ணமாச்சார்யா யோக மையத்தின் யோக கல்விப் பிரிவு இயக்குநர் கீதா சங்கர்.
சீரற்ற மாதவிலக்கு யாருக்கெல்லாம் அதிகம் ஏற்படுகிறது? மாதவிலக்கு பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும் ஆசனங்கள் எவை?
அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தே வேலை பார்க்கும் பெண்கள், உடல் பருமன் அதிகமுள்ளவர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படலாம். ஹார்மோன் நிலையில் ஏற்படும் மாற்றங்களே இதற்குக் காரணம். உடம்பை வளைத்துச் செய்யும் ஆசனப் பயிற்சிகள், ஒரு சில மூச்சுப் பயிற்சிகள், ரிலாக்சேஷன் பயிற்சிகள் மூலம் இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும். மாதவிலக்கு சமயத்தில் வயிற்று வலி அதிகம் உள்ள பெண்கள், டர்க்கி டவலை தண்ணீரில் அலசிப் பிழிந்து, அடிவயிற்றை சுற்றிப் போட்டுக் கொண்டு ரிலாக்ஸாக இருக்க வேண்டும். மகாமுத்ரா போன்ற யோகாசனங்களை செய்யலாம். ஆசனங்கள் செய்யும்போது உள்மூச்சைவிட வெளிமூச்சு அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ரத்தப்போக்கு அதிகமிருக்கு சமயத்தில் அடிவயிற்றை அழுத்தாமல், ரிலாக்ஸாக இருப்பது போன்ற பயிற்சிகளைச் செய்யவேண்டும்.
இரண்டு உள்ளங்கைகளையும் குவித்து கண்களை மென்மையாக மூடிக் கொண்டு மூச்சில் கவனம் செலுத்த வேண்டும். அதனால் மாதவிலக்கு நேரத்தில் ஏற்படும் மன அழுத்தம் குறையும்.
தரையில் படுத்துக் கொண்டு, இரண்டு தலையணைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, கால்கள் இரண்டையும் தூக்கி அதன் மேல் வைக்கவும். உள்ளங்கைகளால் கண்களை மூடிக் கொண்டு சற்றே ஓய்வெடுக்கவும். இது மிகவும் ரிலாக்ஸாக இருக்கும். மாதவிலக்குச் சமயத்தல் அதிக காரம், அதிக இனிப்பு சாப்பிடக்கூடாது. எண்ணெயில் பொரித்த பண்டங்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
முழங்கால்களை மடித்து, பாதங்களை ஒன்றோடொன்று இணைத்து, இரண்டு கைகளாலும் பாதங்களைப் பற்றவும். கண்கள் மூடி இருக்கட்டும். தோள்களை தளர்த்தி, முகவாயைத் தாழ்த்தி அமரவும். இந்தநிலையில் சிறிது நேரம் நிதானமாக மூச்சு விடவும். இப்பயிற்சியால் கால், தொடை, முழங்கால் தசைகள் ரிலாக்ஸாக இருக்கும்.
தாடாசனம், பார்ஷ்வ உத்தானாசனம், உத்தானாசனம், திரிகோணாசனம், மஹாமுத்ரா, சக்ரவாகாசனம், ஜடாரபரிவ்ரித்தி, அதற்கு மாற்று ஆசனமான அபானாசனம் போன்ற யோகாசனங்களுடன் சூரிய நமஸ்காரப் பயிற்சியையும் செய்து வருவது நல்லது. மாதவிடாய் சீராக வராத இளம்பெண்கள் இந்த ஆசனங்களைச் செய்வது நல்ல பலன்களைத் தரும். மாதவிலக்குப் பிரச்னையால் மனஉளைச்சல், மன அழுத்தத்துக்கு ஆளாகும் பெண்கள் ஒரு ரிலாக்சேஷன் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வரவேண்டும். குறிப்பாக அதிக பிளீடிங் உள்ளவர்களுக்கு அடிவயற்றைத் தளர்வாக வைத்துக் கொள்ளும்படியான பயிற்சிகளைத் தருகிறோம் என்கிறார் கீதா.
அபானாசனம்
செய்முறை: கால்களை நீட்டிப் படுக்கவும். உள்ளங்கைகள் தரையில் பதிந்தவாறு, உடலுடன் ஒட்டி இருக்கட்டும். கண்கள் மூடி இருக்கட்டும். இப்போது முழங்கால்களை மடித்துப் பாதங்களைத் தரையில் உடலோடு ஒட்டிவைக்கவும். பிறகு, கால்களைத் தரையிலிருந்து உயர்த்தி, உள்ளங்கைகளை முழங்கால்களின் மீது வைக்கவும்.
இப்போது மூச்சை வெளிவிட்டபடியே முழங்கால்களை மார்பிற்கு அருகே கொண்டு வரவும். பிறகு மூச்சை உள்ளிழுத்தபடியே முழங்கால்களை மார்பிலிருந்து விலக்கவும். மூச்சை வெளிவிட்ட படியே பாதங்களையும், கால்களையும் தரையில் வைக்கவும். பிறகு கால்களை நீட்டவும். இவ்வாறு மூன்று முறை செய்யவும்.
பலன்கள்: அடிவயிற்றுத் தசைகளுக்கு அழுத்தம் கிடைப்பதால், வாயுக் கோளாறு, வயிற்றுப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக அமையும்.