இங்கிலாந்தில் தன்னுடைய மகன் ஓரினினசேர்க்கையாளர் என்பது வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, தாய் ஒருவர் மருமகனை பெண் போல உடை அணிய வற்புறுத்தி திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்தியாவை பூர்விகமாக கொண்ட 29 வயதான ராய் சிங் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய 18 வயதில் சீக்கிய சமுகத்தை சேர்ந்த ஆண் ஒருவரை லண்டனில் சந்தித்துள்ளார்.
அவர் மீது காதல்வயப்பட்ட ராய், திருமணம் செய்துகொள்ள ஆயத்தமாகியுள்ளார். ஆனால் ஒரு கண்டிஷன் என கூறிய அவருடைய மாமியார், என்னுடைய மகன் ஒரு ஓரினசேர்க்கையாளர் என்பது என்னுடைய சமூகத்திற்கு தெரியவந்தால், அது அவமானமாகிவிடும். திருமணத்தில் நீ பெண் உடையணிந்தால் மட்டுமே சம்மதிப்பேன் என கூறியிருக்கிறார்.
உடனே அதற்கு சம்மதம் தெரிவித்து ராய் சிங்கும் பெண் உடையணிந்து திருமணம் செய்துள்ளார். 450 பேர் கலந்துகொண்ட அந்த திருமணத்தில் 9 பேருக்கு மட்டுமே ராய் ஒரு ஆண் என்பது தெரியும். திருமணத்திற்கு பின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என நினைத்த ராய் சிங்கிற்கு அதன்பின்னர் தான் பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
ராய் சிங் எடை அதிகமாக இருப்பதால் கழிவறையை பயன்படுத்த அவருக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். மிகவும் அரிதாக மட்டுமே கணவனை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு கிண்ணத்தில் மட்டுமே உணவு கொடுத்து பட்டினி போட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையில் சொந்த பெற்றோரை கட்டாயம் சந்திக்க வேண்டும் என மாமியார் வற்புறுத்தியுள்ளார். அதன்படி வீட்டிற்கு சென்ற ராய், தன்னுடைய பெற்றோர் அருகில் அமர்ந்து பொறுமையாக நடந்தவற்றை எடுத்து கூறியுள்ளார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர் இனிமேல் வீட்டிற்கு வர வேண்டாம், எங்களுடைய மானம் போய்விடும் எனக்கூறி வெளியேற்றியுள்ளனர்.
9 மாதங்களாக பலகட்ட துன்பங்களை அனுபவித்த ராய், ஒரு கட்டத்தில் கணவரை விட்டு வெளியேறினார். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த மாமியார் தன்னுடைய மகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்துள்ளார்.
இதனை கேள்விப்பட்டு பெரும் துயரத்திற்கு ஆளான ராய், மீண்டும் பெண் போல உடையணிந்து ஆற்றங்கரையோரம் சென்று மணிக்கட்டை கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அந்த வழியாக சென்ற ஒருவர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
பின்னர் நடந்தவை குறித்து கேட்டறிந்த அந்த நபர், ராய் சிங்கை தன்னுடைய வீட்டில் வைத்தே வளர்க்க ஆரம்பித்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் குறித்து கூறியுள்ள பெயர் வெளியிடப்படாத அந்த மாப்பிள்ளை, ராய் சிங்கிற்கு இழைத்த கொடுமைக்காக நானும் என் குடும்பத்தாரும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.