பெண்கள் வயதுக்கு வருகையில்! அவர்களின் மனநிலை! உங்கள் வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால் அவசியம் படியுங்கள்!

0

பூப்புப் பருவத்தின்போது ஒரு சிறுமியின் உடலில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. அந்தச் சமயத்தில்தான் அவளுக்கு மாதவிடாய் ஆரம்பமாகிறது.

பருவமடையும் ஒரு சிறுமியின் மனதை இனம்புரியாத உணர்ச்சிகள் ஆக்கிரமிக்கின்றன; குழப்பமும் பயமும் கவலையும் அவளை வாட்டுகின்றன. காரணம்? ஒன்று, மாதவிடாய் பற்றி எதுவுமே தெரியாதிருப்பது அல்லது தவறாகத் தெரிந்து வைத்திருப்பது.

மாதவிடாய் பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கும் சிறுமிகள் அது ஆரம்பமாகிற சமயத்தில் தைரியமாக இருக்கிறார்கள். ஆனால் நிறைய சிறுமிகளுக்கு அதைப் பற்றி ஒன்றுமே தெரிந்திருப்பதில்லை என ஆய்வுகள் காட்டுகின்றன. 23 நாடுகளைச் சேர்ந்த பெண்களிடம் பேட்டி காணப்பட்டபோது, கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் மாதவிடாய் பற்றி ஒன்றுமே தெரியாதிருந்ததாகச் சொன்னார்கள். திடீரென ஒருநாள் வயதுக்கு வந்தபோது என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்ததாகவும் சொன்னார்கள்.

மாதவிடாய் பற்றி ஒன்றும் தெரியாதிருந்த பெண்கள்தான் அதுவொரு பயங்கரமான அனுபவமாக இருந்ததென சொன்னார்கள். இன்னொரு ஆய்வில் பேட்டி காணப்பட்ட பெண்கள், தாங்கள் வயதுக்கு வந்தபோது “பதறிப்போனதாக,” “அதிர்ச்சியுற்றதாக,” “கூச்சப்பட்டதாக,” “பயந்துபோனதாக” ஆளுக்கொரு விதமாய் விவரித்தார்கள்.

பொதுவாக, நாம் இரத்தத்தைப் பார்த்தாலே வியர்த்து விறுவிறுத்து போய்விடுகிறோம். அடிபட்டிருந்தால்தான் இரத்தம் வரும் என்று நினைக்கிறோம். எனவே, விவரமறியாத ஒரு பெண் வயதுக்கு வரும்போது தனக்கு அடிபட்டுவிட்டதாக அல்லது ஏதோ வியாதி வந்துவிட்டதாக நினைத்துக்கொள்ளலாம். வெளியே சொன்னால் வெட்கக்கேடு என்றுகூட நினைத்துக்கொள்ளலாம். இதற்கு ஒருவேளை கலாச்சாரம், கட்டுக்கதை, அல்லது அறியாமை காரணமாக இருக்கலாம்.

எல்லாப் பெண்களுக்குமே மாதவிடாய் வருவது இயற்கை என்பதை உங்கள் மகளுக்குப் புரிய வையுங்கள். எவ்வித பயத்தையும் கவலையையும் அவள் மனதிலிருந்து எடுத்துப்போடுங்கள். எப்படி?

பெற்றோரே​—⁠நீங்கள்தான் எல்லாமே

மாதவிடாய் பற்றித் தெரிந்துகொள்ள பல வழிகள் உண்டு; பள்ளி ஆசிரியர்கள், உடல்நல நிபுணர்கள், புத்தகங்கள், கல்விபுகட்டும் திரைப்படங்கள் என பல வழிகளில் முக்கியமான தகவல்கள் கிடைப்பதாக அநேக பெற்றோர் உணருகிறார்கள். குறிப்பாக, மாதவிலக்கின்போது உடலில் என்ன நடக்கிறது என்பதையும் அந்தச் சமயத்தில் எப்படிச் சுத்தமாக இருப்பது என்பதையும் பற்றி முக்கியமான தகவல்கள் கிடைப்பதாக நினைக்கிறார்கள். அவை தவிர வேறு சில தகவல்களையும் சிறுமிகள் கேட்கலாம், அல்லது அவர்களுக்கு வேறு உதவிகள் தேவைப்படலாம். பொதுவாக, ‘பீரியட்ஸ்’ வரும்போது என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்தாலும், அச்சமயத்தில் எழும் பலவிதமான உணர்ச்சிகளைச் சமாளிக்கத் தெரியாமல் அவர்கள் திண்டாடுகிறார்கள்.

பாட்டிமாரும், அக்காமாரும், அம்மாமாரும் சிறுமிகளுக்குத் தேவையான கூடுதல் தகவல்களையும் உணர்ச்சிப்பூர்வ ஆதரவையும் கொடுக்க முடியும். இருந்தாலும் சிறுமிகள் முக்கியமாக தங்கள் அம்மாவிடமே எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்கள்.

அப்படியென்றால் அப்பாவிடம் கேட்பதில்லையா? அநேக சிறுமிகள் இந்த விஷயத்தைப் பற்றி அப்பாவிடம் பேசுவதற்குக் கூச்சப்படுகிறார்கள். ஆனால், ‘அந்த நாட்களில்’ அப்பா, தங்களைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும் என்று அவர்களில் சிலர் எதிர்பார்க்கிறார்கள். இன்னும் சில சிறுமிகளோ இந்த விஷயத்தில் அப்பாவை சம்பந்தப்படுத்தவே விரும்புவதில்லை.

அநேக நாடுகளில், தாயில்லாத குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த பல வருடங்களாக அதிகரித்து வந்திருக்கிறது.* அதனால், தகப்பன்மார்தான் தங்கள் மகள்களுக்கு மாதவிடாய் பற்றிச் சொல்லித்தர வேண்டியிருக்கிறது. அதற்காக அவர்கள் முதலில் அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் மகளுக்கு ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் தகப்பன்மார் தங்கள் அம்மாவிடமோ அக்கா தங்கையிடமோ அறிவுரையையும் உதவியையும் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.

எப்போது பேசுவது

ஐக்கிய மாகாணங்கள், தென் கொரியா, மேற்கு ஐரோப்பாவின் சில பகுதிகள் போன்ற தொழில் மயமாக்கப்பட்ட இடங்களில் சிறுமிகள் பொதுவாக 12, 13 வயதில் பூப்படைகிறார்கள். ஆனாலும், சீக்கிரமாக எட்டு வயதில் அல்லது லேட்டாக 16, 17 வயதில்கூட பூப்படைகிறார்கள். ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பாகங்களில் அவர்கள் கொஞ்சம் மெதுவாகத்தான் வயதுக்கு வருகிறார்கள். உதாரணத்திற்கு, நைஜீரியாவில் சிறுமிகள் பூப்படையும் சராசரி வயது 15. மரபியல், பொருளாதார அந்தஸ்து, போஷாக்கு, உடல் உழைப்பு, வசிக்கும் பிரதேசத்தின் உயரம் ஆகியவற்றைப் பொறுத்து மாதவிடாய் ஆரம்பமாகும் காலம் வேறுபடலாம்.

உங்கள் மகள் வயதுக்கு வருவதற்கு முன்பே மாதவிடாய் சம்பந்தமான விஷயங்களை அவளிடம் பேசுவது நல்லது. ஆகவே, அவள் கிட்டத்தட்ட எட்டு வயதாக இருக்கும்போதே மாதவிடாய் பற்றியும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் பேச ஆரம்பித்துவிடுங்கள். ‘இவ்வளவு சின்ன வயதிலேயே இதையெல்லாம் பேசுவதா?’ என நீங்கள் நினைக்கலாம், ஆனால் உங்கள் மகள் 8-10 வயதுக்குள் இருக்கும்போதே, ஹார்மோன்கள் அதிகமாகச் சுரப்பதால் உடல் முதிர்ச்சியடைய ஆரம்பிக்கும். அவளுடைய தோற்றம் மாறுவதைக் கவனிப்பீர்கள், உதாரணத்திற்கு, மார்பு பெரிதாவதையும் உடம்பில் உரோமம் வளருவதையும் கவனிப்பீர்கள். அநேக பெண்கள் பூப்படைவதற்கு முன்பு மளமளவென வளர்ந்து சதைபோட்டுவிடுவார்கள்.

எப்படி ஆரம்பிப்பது

பூப்படையும் பருவத்தில் உள்ள சிறுமிகள் அதைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார்கள். ஸ்கூலில் மற்ற பிள்ளைகள் அதைப் பற்றிப் பேசுவதைக் கேட்டிருப்பார்கள். அவர்களுக்கு இதைக் குறித்து நிறைய கேள்விகள் இருந்தாலும் கேட்கத் தெரியாமல் கஷ்டப்படுகிறார்கள். அதைப் பற்றிப் பேசவே வெட்கப்படுகிறார்கள்.

பெற்றோர்களும் அப்படியே உணருகிறார்கள். அம்மாதான் மகளுக்கு இதுபற்றிச் சொல்ல வேண்டுமென்றாலும், என்ன சொல்வது, எப்படிச் சொல்வது எனத் தெரியாததால் தயங்குகிறார்கள், அதைப் பற்றிப் பேச சங்கடப்படுகிறார்கள். நீங்களும்கூட சங்கடப்படலாம். அப்படியானால், பருவம் எய்துவது பற்றியும் மாதவிடாய் பற்றியும் உங்கள் மகளிடம் நீங்கள் எப்படிப் பேச ஆரம்பிக்கலாம்?

வயதுக்கு வருகிற நிலையிலுள்ள சிறுமிகளுக்கு மாதவிடாய் பற்றி எளிமையாகவும் வெளிப்படையாகவும் விளக்கும்போது அவர்களால் புரிந்துகொள்ள முடிகிறது. உதாரணத்திற்கு, எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வரும்?, வந்தால் எத்தனை நாட்களுக்கு இருக்கும்?, எவ்வளவு இரத்தம் வெளியேறும்? போன்றவற்றை அவர்களுக்கு விளக்கலாம். முதலாவதாக, மாதவிடாய் வரும்போது என்னென்ன செய்ய வேண்டுமென்ற நடைமுறையான விஷயங்களைச் சொல்லித் தருவது சிறந்தது. தவிர, ‘அது வந்தால் எனக்கு எப்படி இருக்கும்?,’ அல்லது ‘வேறெதாவது ஆகுமா?’ போன்ற கேள்விகளுக்கும் பதில்சொல்ல ரெடியாக இருங்கள்.

பிற்பாடு, மாதவிடாய் சம்பந்தமான உடல் இயக்கங்களைப் பற்றி மகளிடம் நீங்கள் விளக்க விரும்பலாம். அது சம்பந்தமான புத்தகங்களை உடல்நல நிபுணரிடமோ, நூலகத்திலோ, புத்தகக் கடையிலோ பெற முடியும். நுட்பவிவரங்களை விளக்குவதற்கு இவை உதவலாம். சில பிள்ளைகள் இந்தப் புத்தகங்களை அவர்களாகவே படிக்க விரும்பலாம், மற்றவர்களோ அம்மாவுடன் சேர்ந்து படிக்க விரும்பலாம்.

மகளுடன் பேசுவதற்கு அமைதியான ஓர் இடத்தைத் தேர்ந்தெடுங்கள். முதலில், வளர்ந்து பெரியவளாவதைப் பற்றிச் சாதாரணமாகப் பேச ஆரம்பியுங்கள். ஒருவேளை இப்படிச் சொல்லலாம்: “எல்லாப் பெண்களையும் போலவே நீயும் சீக்கிரத்தில் பெரியவளாகி விடுவாய், அது என்னவென்று உனக்கு தெரியுமா?” உங்கள் சொந்த அனுபவத்தைக்கூட இப்படிச் சொல்லலாம்: “நான் உன் வயதில் இருந்தபோது, ‘பீரியட்ஸ்’ என்றால் என்னவென்று யோசிக்க ஆரம்பித்தேன். நானும் என் ஃப்ரெண்ட்ஸும் அதைப் பற்றி ஸ்கூலில் பேசிக்கொள்வோம். உன் ஃப்ரெண்ட்ஸும் அதைப் பற்றிப் பேசுகிறார்களா?” அவள் தருகிற பதிலை வைத்து, மாதவிடாய் பற்றி அவள் என்ன புரிந்துவைத்திருக்கிறாள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அவள் தவறாகப் புரிந்துவைத்திருந்தால் சரியானதைச் சொல்லிக்கொடுங்கள். ஆரம்பத்தில் நீங்களே எல்லாவற்றையும் பேச வேண்டியிருக்கும், அதற்குத் தயாராக இருங்கள்.

நீங்கள்கூட நிச்சயம் இதுபோன்ற கஷ்டங்களையும் கவலைகளையும் எதிர்ப்பட்டிருப்பீர்கள்; எனவே, உங்கள் சொந்த அனுபவத்தை வைத்தே உங்கள் மகளுடன் பேசலாம். ‘பீரியட்ஸ்’ பற்றி என்னவெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது? என்ன தெரிந்துகொள்ள விரும்பினீர்கள்? என்ன தகவல்கள் பிரயோஜனமாக இருந்தன? மொத்தத்தில், மாதவிடாயின் நல்லது கெட்டதை சமநிலையோடு பார்க்க மகளுக்கு உதவுங்கள். எல்லாச் சந்தேகங்களையும் தீர்க்கத் தயாராக இருங்கள்.

தொடர்ந்து பேசுங்கள்

மாதவிலக்கு பற்றி ஒருமுறை மட்டுமே சொல்லித் தந்துவிட்டு நிறுத்திவிடாதீர்கள், தொடர்ந்து சொல்லித் தாருங்கள். ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை. அப்படிச் செய்தால் உங்கள் மகள் திணறிவிடுவாள். அவள் சிறுமியாக இருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சொல்லித்தர வேண்டும்; அதோடு, ஒரே விஷயத்தை வித்தியாசமான சந்தர்ப்பங்களில் திரும்பத் திரும்ப சொல்லித்தர வேண்டும்; அப்போதுதான் அவள் கற்றுக்கொள்வாள். வளரவளர விஷயங்களை இன்னும் விவரமாகப் புரிந்துகொள்வாள்.

சிறுமிகள் வளரவளர மாதவிடாய் பற்றிய அவர்களுடைய கண்ணோட்டம் மாறிக்கொண்டே வரும். கொஞ்சம் அனுபவப்பட்ட பிறகு உங்கள் மகளுக்கு வேறு விதமான கேள்விகளும் சந்தேகங்களும் வரலாம். எனவே, அது பற்றி நீங்கள் தொடர்ந்து அவளிடம் பேசி, அவளுடைய கேள்விகளுக்குப் பதில் அளித்துக்கொண்டே இருக்க வேண்டும். உங்கள் மகளின் வயதுக்கும் புரிந்துகொள்ளும் சக்திக்கும் பொருத்தமான முக்கிய தகவல்களை மட்டுமே கொடுங்கள்.

நீங்களாகவே பேச ஆரம்பியுங்கள்

மாதவிடாய் பற்றிப் பேச உங்கள் மகள் விரும்பாதிருக்கலாம். அத்தகைய தனிப்பட்ட விஷயங்களைப் பேச அவளுக்குத் தயக்கமாக இருக்கலாம். அல்லது, சங்கோஜப்படாமல் சந்தேகங்களைக் கேட்க அவளுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் தேவைப்படலாம். அல்லது, அது பற்றிய எல்லா விஷயங்களும் தனக்கு ஏற்கெனவே தெரியுமெனச் சொல்லிவிடலாம்.

அமெரிக்காவில், ஆறாம் வகுப்பு மாணவிகளை வைத்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது; அவர்களில் அநேகர் மாதவிடாய் பற்றித் தங்களுக்கு எல்லாமே தெரியுமென நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், கேள்விகள் கேட்கப்பட்டபோது அதைப் பற்றி எல்லா விவரங்களும் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. கலாச்சாரங்களையும் கட்டுக்கதைகளையும் சார்ந்த தவறான தகவல்களை அவர்கள் உண்மையென நம்பியிருந்தார்கள். அதனால், மாதவிடாய் பற்றி எல்லாம் தெரியுமென உங்கள் மகள் சொன்னாலும், நீங்கள் அவளிடம் இதைப் பற்றிப் பேசியே ஆக வேண்டும்.

நீங்கள்தான் பேச்சை ஆரம்பிக்க வேண்டும். முதலில் மாதவிடாய் பற்றிக் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசுங்கள், பிறகு அப்படியே தொடருங்கள். பெற்றோராகிய உங்களுடைய கடமை இது. உங்கள் உதவி தேவையென உங்கள் மகள் ஒத்துக்கொள்கிறாளோ இல்லையோ அவளுக்கு அது மிகவும் தேவைதான். ‘இதெல்லாம் என்னால் செய்ய முடியுமென்று தோன்றவில்லை, நினைத்தாலே சங்கடமாக இருக்கிறது’ என நீங்கள் சொல்லலாம், ஆனால் மனம் தளர்ந்துவிடாதீர்கள். பொறுமையாய் இருங்கள். உங்களுடைய உதவியின் அருமையை நிச்சயம் உங்கள் மகள் போகப்போக புரிந்துகொள்வாள்.

ஜப்பானில் தாயில்லாத குடும்பங்களின் எண்ணிக்கை 2003-⁠ம் ஆண்டு என்றும் இல்லாதளவுக்கு அதிகரித்தது. ஐக்கிய நாடுகளில் உள்ள ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களில் ஆறில் ஒன்று தாயில்லாத குடும்பமாக இருக்கிறது.

உங்கள் மகள் வயதுக்கு வருவதற்கு முன்பே இது சம்பந்தமான விஷயங்களை அவளிடம் பேசுவது நல்லது

மாதவிடாய் பற்றி உங்கள் மகளிடம் பேசுகையில்

❖ அவளுக்கு ஏற்கெனவே என்ன தெரிந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடியுங்கள். அவளுடைய சந்தேகங்களைத் தீர்த்துவையுங்கள். உங்களுக்கும் அவளுக்கும் தெரிந்திருக்கும் தகவல்கள் உண்மையானவையா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.

❖ உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள். மாதவிடாய் ஆரம்பித்தபோது நீங்கள் என்ன செய்தீர்கள், எப்படி உணர்ந்தீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்; உங்களுடைய அனுபவத்தைச் சொல்வதன் மூலம் உங்கள் மகளுக்கு மிகவும் தேவைப்படும் உணர்ச்சிப்பூர்வ ஆதரவை உங்களால் அளிக்க முடியும்.

❖ நடைமுறையான ஆலோசனைகளை அளியுங்கள். பொதுவாக இளம் பெண்கள் இதுபோன்ற கேள்விகளைக் கேட்பார்கள்: “ஸ்கூலில் இருக்கும்போது ‘பீரியட்ஸ்’ வந்துவிட்டால் என்ன செய்வது?” “என்ன ‘நாப்கின்களை’ பயன்படுத்த வேண்டும்?” “அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?”

❖ எளிமையாக விளக்குங்கள். உங்கள் மகளின் வயதுக்கும் புரிந்துகொள்ளும் சக்திக்கும் ஏற்ற விதத்தில் விளக்குங்கள்.

❖ தொடர்ந்து பேசுங்கள். உங்கள் மகள் வயதுக்கு வரும் முன்பே மாதவிடாய் பற்றி பேச ஆரம்பியுங்கள், அவள் வயதுக்கு வந்த பிறகும் கொஞ்ச காலத்திற்கு அதைப் பற்றித் தொடர்ந்து பேசுங்கள்.

உங்கள் மகளைப் புரிந்துகொள்ளுங்கள். மனந்திறந்து பேச அவளுக்குப் பிடிக்காமல் இருக்கலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமனைவியின் ஒழுக்கமற்ற வீடியோவை பார்த்து கணவர் செய்த அதிர்ச்சி செயல்!
Next articleபாம்பு கடிப்பது போல கனவு கண்டால் என்ன பலன் தெரியுமா? Kanavil pambu vanthal