மாதவிடாய் காலத்தின் முதல் நாள் வயிற்று வலியும், அதிகமான உதிரப்போக்கு!

0
1304

எனக்கு வயது 25. மாதவிடாய் காலத்தின் முதல் நாள் வயிற்று வலியும், அதிகமான உதிரப்போக்குமாக இருக்கும் . இதற்கு பல மருத்துவங்கள் செய்து விட்டேன் பலனேதும் இல்லை. தீர்வு என்ன?

பதில்:- சரியான பதில் சொல்வதற்கு உங்களிடம் பல கேள்விகள் கேட்க வேண்டியிருக்கும். நீங்கள் பெரியபிள்ளையான காலம் முதல் இந்த வலி இருக்கிறதா. பிறகு வந்ததாயின் எத்தனை காலத்திற்கு பிறகு வலி வரத்தொடங்கியது. உங்களுக்கு குழந்தைகள் இருக்கின்றனவா போன்றவற்றை அறிய வேண்டியிருக்கும். அது முடியாது என்பதால் பொதுவாக விடை சொல்கிறேன்.

எமது இருதயம் சுருங்கி விரிவது போலவே பெண்களின் கருப்பையும் வழமையாக சற்று சுருங்கி விரிக்கின்றது. ஆனால் அவை லேசானவை என்பதால் சாதாரண நேரத்தில் உணரப்படுவதில்லை. ஆனால் மாதவிடாய் நேரத்தில் கருப்பையின் உட்புறமுள்ள என்டோமெட்ரியம் எனப்படும் திசுவை உதிரச்செய்து அதையும் அதனுடன் சேர்ந்து கசியும் குருதியை வெளியேற்றுவதற்காக கருப்பை கூடுதலாக சுருங்கி விரிய நேர்கிறது. இதுவே சில பெண்களில் வலியை உண்டுபண்ணுகிறது.

இதனை முதன்மை மாதவிடாய் வலி (Primary Dysmenorrhoea) என்பார்கள். இது பொதுவாக ஆபத்தற்றது. கடுமையான நோயல்ல. பெரிய பிள்ளையான ஓரிரு வருடங்களுக்கு பின் ஆரம்பிக்கும். ஆரம்பத்தில் கடுமையாக இருக்கும் இவ்வலியானது கால ஓட்டத்தில் படிப்படியாக வலுவிழந்து நின்றுவிடும்.

உங்களுக்கு வருவது அத்தகைய வலி என்றே எண்ணுகிறேன். காலஓட்டத்தில் மறைந்துவிடுவது மட்டுமின்றி குழந்தைகள் பிறந்த பின்னரும் பொரும்பாலும் நின்றுவிடும்.

ஆனால் வேறுநோய்கள் காரணமாக வலி வந்தால் அதை வேறுகாரணத்திலான மாதவிடாய் வலி (secondary dysmenorrhoea) என்பார்கள். கருப்பையின் உட்பகுதியை மூடியிருக்கும் திசுவான கருப்பை அகப்படலம் (endometrium) அது இருக்க வேண்டிய இடம் தவிர்ந்து வயிற்றறையின் வேறு இடங்களில் காணப்பட்டால் அது மாவிடாய் காலத்தில் வீங்கி கலங்களை உதிர்த்து குருதியும் வெளியேறுவதால் வலியை ஏற்படுத்தும்.

இதைக் கண்டறிவதற்கு பெண்ணியல் நோய் நிபுணர் யோனிப் பரிசோதனை, ஸ்கான், லப்ரொஸ்கோபி போன்ற பரிசோதனைகள் செய்வார். பல மருத்துவங்கள் செய்ததாக எழுதியிருந்தீர்கள். எனவே இவை உங்களுக்கு செய்யப்பட்டு வேறு தீவிர நோய்கள் இல்லை என உறுதிபடுத்தப்பட்டிருக்கும் என நம்புகிறேன்.

இல்லையேல் ஒரு பெண்ணியல் நோய் நிபுணரை அணுகி ஆலோசனையும் பரிசோதனைகளும் செய்யுங்கள்.

ஏற்கனவே கூறியது போல இது முதன்மை மாதவிடாய் வலியாக இருந்தால் விரைவில் அது நின்றுவிடும் என எதிர்பார்க்கலாம்.

அது வரையில் வலி ஏற்படும்போது அடிவயிற்றில் சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுப்பதுஇ சற்று உடற் பயிற்சி செய்வது போன்றவற்றை செய்து நிவாரணம் பெறலாம்.

யோகாசனம் சாந்தியாசனம் போன்றவையும் நிச்சயம் உதவும்.

வலி அதிகமாக இருந்தால் வலி ஏற்படும் நேரத்தில் வலி நிவாரணி மாத்திரைகளை உபயோகிக்கலாம். சாதாரண பரசிற்றமோல் மாத்திரையை 2 மாத்திரைகள் மூன்று தடவைகள் வீதம் எடுக்க வலி தணியும். அதற்கு குiறாயவிட்டால் இபூபுறுவன், மெவமெனிக் அசிட் மாத்திரை 500 மிகி போன்றவற்றை மருத்துவ ஆலோசனையுடன் உபயோகியுங்கள்.

Previous articleமார்பகப் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?
Next articleபகலில் உறங்கினால் உடல் நிறை அதிகரிக்குமா!