பிரித்தானியாவில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்திய வம்சாவளி குடியிருப்புகளில் இருந்து சுமார் 140 மில்லியன் பவுண்டுகள் பெருமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த ஆசிய தங்க நகைகள், திருமண பரிசாக பெறப்பட்டு தலைமுறை தலைமுறையாக கைமாற்றப்பட்டு வருகிறது.
இந்த நகைகளை குறிவைத்து கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் சுமார் 28,000 கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக பகீர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கிரேட்டர் லண்டனில் மட்டும் சுமார் 115.6 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை போயுள்ளது.
கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் மட்டும் சுமார் 9.6 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான நகைகள் களவு போயுள்ளது.
அதிகரிக்கும் கொள்ளை சம்பவங்களால் பலமுறை உரிய அதிகாரிகள் தரப்பு, இந்திய வம்சாவளி குடிமக்களை எச்சரித்துள்ளதாக ஆசிய நகை வியாபாரிகளில் ஒருவரான சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
தங்கம் வாங்குவது ராசியானது எனவும் தங்க நகைகள் குடியிருப்பில் இருப்பதால் அதிர்ஷ்டம் சேரும் எனவும் வயதான குடும்ப பெண்கள் கூறுவதால், பல குடும்பங்களில் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரமாக இது நடைபெற்று வருகிறது.
தீபாவளி மற்றும் நவராத்திரி உள்ளிட்ட இந்தியர்கள் பெரும்பாலும் கொண்டாடும் விழாக்கள் நேரங்களில் ஸ்காட்லாந்து யார்ட் எச்சரிக்கை விடுத்துவருவதாகவும் கூறப்படுகிறது.
குறித்த விழா காலங்களிலேயே ஆசிய மக்கள் அதிக நகைகள் வாங்குவதாகவும், இதுவே கொள்ளை சம்பவத்திற்கு இட்டுச்செல்வதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 3,300 வழக்குகள் பதிவாகியுள்ளன. கொள்ளைபோன நகைகளில் மொத்த மதிப்பு 21.2 மில்லியன் பவுண்டுகள் என கூறப்படுகிறது.
கென்ட் பொலிஸ் 89 வழக்குகளை இந்த காலகட்டத்தில் பதிவு செய்துள்ளது. கிரேட்டர் மான்செஸ்டர் பகுதி பொலிசார் 238 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
தொடரும் இந்த கொள்ளை சம்பவத்தை Operation Nugget என்ற பெயரில் பிரித்தானிய பொலிசார் விசாரித்து வருகின்றனர்.