பரிகாரம் எல்லாம் வேண்டாம் ரூ.40 லட்சம் கொடு பரிகாரம் கூறிய ஜோதிடருக்கே அடி உதை மிரட்டல் அதிர்ச்சியளித்த தம்பதி!

0

பணக்கஷ்டத்தைப் போக்க பரிகாரம் கூறிய ஜோதிடரை வரவழைத்து அடித்து உதைத்து பணம் பறித்த கோவை தம்பதியினரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் தெக்குபாளையத்தை சேர்ந்தவர் குபேரன். இவரது மனைவி காயத்ரி. இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் திருபுவனம் புளியூரை சேர்ந்த 33 வயது ஜோதிடர் பாலமுருகன் என்பவரைச் சந்திக்கச் சென்றனர்.

பாலமுருகனிடம் தங்கள் பணக்கஷ்டத்தைப் பற்றி தம்பதியினர் கூற, ஜோதிடரும் பணக்கஷ்டம் மற்றும் கடன் தொல்லையால் அவதி மற்றும் அவமானப்பட்டு வருகிறீர்கள் என்று கூறினார்.

ஆமாம் என்று கூறிய தம்பதியினர் இதற்கு என்ன பரிகாரம் என்று கேட்டுள்ளனர். ரூ.3000 கொடுத்தால் பரிகாரம் செய்து விடுவேன் பிறகு உங்கள் பணக்கஷ்டம் தீர்ந்து விடும் என்றார் ஜோதிடர். எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறி தம்பதியினர் ஊரைப்பார்க்கத் திரும்பினர்.

சிறிது நாட்கள் கழித்து ஜோதிடருக்கு தொலைபேசி செய்து பணம் உள்ளது பரிகாரம் செய்து விடலாம் கோவை வாருங்கள் என்று தம்பதியினர் அழைத்தனர். அதை நம்பி சென்றார் ஜோதிடர் பாலமுருகன்.

14-ந்தேதி ஜோதிடர் பாலமுருகன் கோவை வந்தார். காந்திபுரத்தில் காத்திருந்த அவரை தம்பதி வந்த காரில் ஏற்றிக்கொண்டனர். பரிகாரம் செய்வது அக்கம் பக்கத்தினருக்கு தெரியக்கூடாது என்று கேட்டுக்கொண்டனர். அதற்கும் ஜோதிடர் சம்மதித்தார்.

வீட்டில் தம்பதியைத் தவிர மேலும் உறவினர்கள் இருவர் இருந்துள்ளனர். கதவைச் சாத்திய பின்னர் பரிகாரமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று கூறி ஜோதிடரை நால்வரும் சேர்ந்து தாக்கியுள்ளனர், நாங்கள் பணக்கஷ்டத்தில் இருக்கிறோம் என்று நீங்களே கூறினீர்கள், எனவே பரிகாரமும் வேண்டம் ஒன்றும் வேண்டாம் ரூ.40 லட்சத்தை எடு! என்று ஜோதிடரை மிரட்ட, அவர் அதிர்ச்சியில் உறைந்தார்.

தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று ஜோதிடர் மன்றாடினார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் ஜோதிடரை சரமாரியாகத் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.அடி உதைக்குப் பயந்த அவர் என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சியுள்ளார். கடைசியில் ரூ.5 லட்சம் கொடு என்று மிரட்டியுள்ளனர், அடி, உதைக்குப் பயந்து ஜோதிடர் இதற்கு ஒப்புக் கொண்டார்.

அதாவது ஜோதிடரின் தந்தை பணத்தைக் கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும் என்பது நிபந்தனை. பணமும் கும்பலின் கைக்கு வந்து சேர்ந்தது. பிறகு ஜோதிடரை மிரட்டி வெளியில் சொன்னால் ஜாக்கிரதை என்று விட்டு விட்டனர்.

காயமடைந்த ஜோதிடர் சிகிச்சை பெற்ற பிறகு போலீசில் புகார் அளித்தார். போலீஸார் தம்பதி உட்பட 6 பேர் கொண்ட கும்பலுக்கு வலை வீசியுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉங்களின் பிறந்த நேரத்தின் படி உங்களின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது தெரியுமா!
Next articleசிஎஸ்கேவின் பயிற்சி ஆட்டத்தைக் காண இவ்வளவு கூட்டமா? ஆச்சர்யத்தில் மூழ்கிய வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள்!