இந்த பழமொழி மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்ட பழமொழி.. அப்படி என்ன மகத்துவம் இந்த நல்ல மிளகில்…? …உலகின் தலைசிறந்த எதிர் மருந்து (Antidote) தான் இந்த மிளகு. இந்த மிளகு இந்தியாவில் மிக அதிகமாக பயிரிடப்படுகிறது.தென்னிந்தியாவில் முக்கியமாக கேரளா, மைசூர், மற்றும் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளான கொல்லிமலை, சேர்வராயன் மலைகளிலும் நல்லமிளகு அதிகம் விளைகிறது.
உலகிலேயே தலைசிறந்த தரம் வாய்ந்த நல்ல மிளகு தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது என்பது நவீன ஆராய்ச்சி கூறும் தகவல்.மிளகில் உள்ள வேதிப் பொருட்கள் அனைத்தும் நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கிறது மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மிளகிற்கு வீக்கத்தைக் குறைக்கும் பண்பும் (Anti-inflamattory) வாதத்தை அடக்கும் பண்பும் (Anti vatha)பசியைத் தூண்டும் பண்பும் (Appetizer), வெப்பத்தைக் குறைக்கும் பண்பும் (Antypyretic), கோழையை அகற்றும் பண்பும் (Expectorant), பூச்சிக்கொல்லியாக செயல்படும் பண்பும் (Anti-helmenthetic) உள்ளது. நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும்.
வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு.நல்ல மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.நல்ல மிளகில் piperine என்ற ஆல்கலாய்டு இருப்பதால் பசியைத் தூண்டுகிறது.வயிற்றில் சுரக்கும் என்ஸைம்களை தூண்டி சுரக்கச் செய்கிறது. மேலும் உமிழ்நீரை சுரக்கச் செய்கிறது. இதனால் ஜீரணத் தன்மை அதிகரிக்கப்படுகிறது.
உணவு சரியான முறையில் செரிக்கப் பட்டால் தான் வாயுத் தொந்தரவு இருக்காது. மேலும் நச்சுக் கழிவுகள் உடலில் தங்காது. இந்த நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை மிளகில் அதிகம் இருப்பதால்தான் நம் முன்னோர்கள் இந்த பழமொழியை பயன்படுத்தினார்கள். இதனாலேயே நம் முன்னோர்கள் வெளியிடங்களில் சாப்பிட்டு வரும்போது பத்து மிளகை வாயில் போட்டு சுவைத்து சாப்பிட்டுவிடுவார்கள். வெளியில் தயாரிக்கப் படும் உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை அனைத்தையும் இந்த பத்து மிளகு முறித்து விடும்.
மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள்…
வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி கிமு 3000 ஆம் ஆண்டுகளிலிருந்து சிறந்து விளங்கிய கடல் வியாபாரத்தில் தங்கம் போல் விலை மதிக்க முடியாத ஒன்று மிளகு.மிளகை வீணடித்தால் உப்பு போட்டு அதில் நாள் முழுவதும் மண்டியிட வைக்கும் தண்டனை போர்ச்சுகல் நாட்டில் நடைமுறையில் இருந்தது.
மிளகில் உள்ள சத்துக்கள்:
தாது உப்புகள்,கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்பு,வைட்டமின்கள்,தயாமின்,ரிபோபிலவின், ரியாசின்
சளித் தொல்லைக்கு:
மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். கல்யாண முருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி குணமாகும்.
பற்களுக்கு:
மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.
தலைவலி:
மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.
இரத்தசோகைக்கு:
கல்யாணமுருங்கை இலை, முருங்கை இலை, மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும் .
பசியின்மைக்கு:
ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும்.
மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது. மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது. மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.