உங்களுக்கு அடிக்கடி சளி, இருமல் பிடிக்கிறதா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள நம் முன்னோர்கள் பின்பற்றிய சில எளிய கை வைத்தியங்களை மேற்கொள்ளுங்கள். இதனால் உங்கள் சளி, இருமல் பிரச்சனை போவதோடு, உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள் :
கற்பூரவல்லி இலை – 10,
ஓமம் – 2 டீஸ்பூன்,
சீரகம் – 2 டீஸ்பூன்,
தனியா – 2 டீஸ்பூன்,
மிளகு – 4 எண்ணிக்கை,
சுக்குத்தூள் – ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),
இஞ்சி – 1 துண்டு,
பூண்டு – 4 பல்,
சோம்பு – சிறிது (தேவைப்பட்டால்),
உப்பு – தேவைக்கு,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),
வெற்றிலை – 4,
நெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை :
கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு கற்பூரவல்லி இலை, வெற்றிலை வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.
மற்றொரு கடாயில் சிறிது நெய் விட்டு சூடானதும் ஓமம், சீரகம், தனியா, சோம்பு, மிளகு, பூண்டு, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, வதக்கிய கற்பூரவல்லி இலை, வெற்றிலையுடன் சேர்த்து 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
நன்கு கொதித்து 1 கப்பாக சுண்டியதும் வடித்து பரிமாறவும்.
ஓமம் – கற்பூரவல்லி இலை சிரப் ரெடி.
காலநிலை மாற்றம் வந்தாலே பலரும் அனுபவிக்கும் ஓர் பிரச்சனை தான் சளி, இருமல். குறிப்பாக குளிர்காலம் அல்லது பனி காலத்தில் தான் இப்பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படக்கூடும். இந்த சளி, இருமலை பலர் கடைகளில் விற்கப்படும் மருந்துகளை வாங்கி குடித்து தற்காலிகமாக நிவாரணம் காண்பர். ஆனால் இந்த சளி, இருமலுக்கு நமது சில பாட்டி வைத்தியங்கள் நல்ல தீர்வை வழங்கும் என்பது தெரியுமா?
பாட்டி வைத்தியங்களின் மூலம் உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் போது, அது பிரச்சனைகளை மட்டும் சரிசெய்வதோடு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்தும். மேலும் பாட்டி வைத்தியங்கள் எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதால் அச்சமின்றி எவர் வேண்டுமானாலும் பின்பற்றலாம்.




