தமிழகத்தைச் சேர்ந்த ரஜினி பழனி என்பவர் சீமானின் நாம் தமிழர் கட்சியினர் தான் என்னை வெட்டியதாக கண்ணீர்மல்க கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் இரும்பாலை அருகில் உள்ளது கருக்கல்வாடி பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவர் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால் ரஜினியின் பெயரை சேர்த்துக் கொண்டு தன் பெயரை ரஜினி பழனிச்சாமி (46) என்று மாற்றிக் கொண்டார்.
சேலம் அழகாபுரம் பகுதியில் கால் டாக்ஸி ஒன்றில் ஓட்டுனராக பணியாற்றி வரும் நிலையில், இன்று காலை வழக்கம் போல் அழகாபுரத்திற்கு சென்று கார் எடுக்க சென்ற போது, திடீரென்று அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது.
இதனால் படுகாயமடைந்த அவர் உடனடியாக அருகிலிருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சியை கிண்டல் கேலி செய்யும் வகையில் குறிப்பிட்டு வந்துள்ளார்.
இதனால், கோபமடைந்த அந்த கட்சியை சேர்ந்த சிலர் அவரை சரமாரியாக வெட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
ஏனெனில் ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து ரஜினி கூறிய கருத்துக்கு நாம் தமிழர் கட்சியினர் கருத்து தெரிவித்ததால், நாம் தமிழர் கட்சி குறித்து ரஜினி பழனி சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்து வீடியோ பதிவு செய்துள்ளார்.
இதற்கு நாம் தமிழர் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து மாறி மாறி சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வந்த நிலையில் நேற்று இரவு சீமான் குறித்து விமர்சனம் செய்து வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
அதன் பின்னே இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து ரஜினிபழனி கூறுகையில், என் தலைவர் ரஜினியை முதலில் சீமான் ஒருமையில் விமர்சனம் செய்தார். அதையடுத்து நானும் சீமானை ஒருமையில் விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டேன். அதைத் தொடர்ந்து சீமான் கட்சிக்காரர்கள் எனக்கு சமூக வலைதளங்களிலும், செல்போன் மூலமும், தொடர்ந்து மிரட்டல் விட்டார்கள்.
இருப்பினும் நாம் தமிழர் கட்சிக்காரர்களுக்கும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிலளித்து வந்தேன். என் தலைக்கு விலை பேசினார்கள், அதை எல்லாம் நான் கண்டுகொள்ளவில்லை.
இன்று காலை நான் வீட்டை விட்டு கிளம்பிய போது சீமான் கட்சியைச் சேர்ந்த வீரமணி, வெள்ளியங்கிரி மற்றும் 2 பேர் முகமூடி அணிந்து வந்தார்கள்.
அவர்கள் என் காரைச் சுற்றி வளைத்து கையில் கொண்டு வந்திருந்த கொடுவாளால் தலையில் சரமாரியாக வெட்டினார்கள்.
இரத்த வெள்ளத்தில் அங்குமிங்குமாக ஓடினேன். ஒரு நபர் நுழையக் கூடிய சாக்கடை பாலத்துக்குள் புகுந்து கொண்டேன். அதனால் அவர்கள் உள்ளே வர முடியாமல் ஓடிவிட்டார்கள். இதனால் உயிர் தப்பினேன் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
ஆனால், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அருள்ராம், அவர் இதை விளம்பரத்திற்காக செய்கிறார் எனவும், வன்முறை மீது எங்களுக்கோ, சீமானுக்கோ நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி அவர் குறிப்பிடும் நபர்களின் பெயர்கள் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.