நரம்பு பிரச்சனையா! நரம்புகளை வலுப் பெறச் செய்ய இவற்றை கடைப்பிடியுங்கள்!

0
3793

என் வயது 81. கொட்டாவி விடும் போது காது அருகில் நரம்பு பிடித்துக் கொள்கிறது. சில சமயம் கை குரக்கலிபிடித்துக் கொள்கிறது. வலது கால் விரைத்து நீட்டினால் நரம்பு பிடித்துக் கொள்கிறது. நீவினால் சரியாகிவிடுகிறது. இவை எதனால் ஏற்படுகிறது.

வயோதிகத்தில் வாயுவின் ஆதிக்க குணங்களாகிய வறட்சி, லேசானதன்மை, குளிர்ச்சி, சொரசொரப்பு, ஊடுருவும்தன்மை மற்றும் நகரும் தன்மை ஆகியவை மனித உடலில் இயற்கையாகவே அதிகரிக்கின்றன. இக்குணங்களுக்கு நேர் எதிராகிய நெய்ப்பு, கனம், சூடு, வழுவழுப்பு, மந்தத்தன்மை, நகராத நிலைத்தன்மை போன்ற குணங்களை உணவாகவும் மருந்தாகவும் செயலாகவும் பயன்படுத்தினால் உங்களுடைய நரம்பு பிரச்னைக்கு அதுவே தீர்வாகலாம்.

அந்த வகையில் உடலுக்கு நெய்ப்பு தரும் உட்புற மருந்தாகிய விதார்யாதி க்ருதம் எனும் நெய்மருந்தை சுமார் பத்து மி.லி. காலை, மாலை உருக்கி, வெறும் வயிற்றில் 3-6 மாதங்கள் சாப்பிடவும். தோலுக்கு பதமளித்து நெய்ப்புத் தரும் மஹாமாஷ தைலத்தை காலையில் வெதுவெதுப்பாக உடலெங்கும் தடவி அரை மணிநேரம் ஊறிய பிறகு, வெந்நீரில் குளிக்கவும். உடலை வருத்தும் உழைப்பை நிறுத்தி, நிறைய ஓய்வெடுப்பதன் மூலமாக, செயல்வடிவமாக நீங்கள் நெய்ப்பைப் பெறலாம். உணவில் வறட்சியளிக்காத இனிப்பு, புளிப்பு மற்றும் உப்புச்சுவை ஆகியவற்றைச் சிறிது தூக்கலாகச் சாப்பிடுவதால் உணவின் மூலம் நெய்ப்பைக் குடலில் சம்பாதித்துக் கொள்ளலாம்.

பூவன் வாழைப்பழம் அல்லது நேந்திரன் வாழைப் பழத்தை அரிந்து தயிர் மற்றும் தேன் கலந்து மதியம் சாப்பிடுவதன் மூலமாகவும், இரண்டு க்ஷீரபலா 101 எனும் கேப்ஸ்யூல் மருந்தை இரவு படுக்கும் முன் சிறிது சூடான பாலுடன் சாப்பிடுவதாலும், மதியம் படுத்து உறங்குவதன் மூலமாகவும் கனம் எனும் குணத்தை உடலில் நிரப்பி, வாயுவினுடைய லேசானதன்மை எனும் குணத்தை நீக்கலாம்.

சுக்கு, சித்தரத்தை போன்றவற்றை வகைக்கு 5 கிராம் வீதம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீருடன் வேக வைத்து அரை லிட்டராகச் சுண்டியதும் வடிகட்டி, தாகம் எடுக்கும் போதெல்லாம் சிறிது சிறிதாகப் பருகுவதாலும் வைஷ்வாநரம் எனும் சூரணத்தை அரை ஸ்பூன் காலை, இரவு உணவிற்கு அரை மணி முன் 75 மி.லி. வெந்நீருடன் பருகுவதாலும் கதகதப்பான அறையில் படுத்து உறங்குவதாலும் வாயுவினுடைய குளிர்ச்சி எனும் குணம் நரம்புகளிலிருந்து விடுபட்டு, சூடேற்றப்படுவதால் அதுவே உங்களுக்கு நரம்பு இழுப்பைக் குறைத்துவிடும்.

மற்ற மூன்றாகிய வழுவழுப்பு, மந்தகத்தன்மை, நிலைத்ததன்மை ஆகிய குணங்களை உணவில் சுமார் பத்து முதல் பதினைந்து மி.லி. வரை உருக்கிய பசு நெய்யை சூடான புழுங்கலரிசி சாதத்துடன் காலை, இரவு முதல் இரு கவளங்களைச் சாப்பிடுவதன் மூலமாகவும் அப்ரக பஸ்மம் மற்றும் சங்க பஸ்மம் எனும் பஸ்ம மருந்துகளைச் சிறிது நெய் மற்றும் தேன் குழைத்து மதிய உணவிற்கு 1 மணிநேரம் முன்பாக நக்கிச் சாப்பிடுவதாலும், மனதில் கோபதாபங்களுக்கு இடம் தராமல், மகிழ்ச்சியுடன் கூடிய குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வதாலும் பெறலாம்.

ஆயுர்வேத மருத்துவமனைகளில் செய்யப்படும் தைலதாரா சிகிச்சை, நவரக்கிழி சிகிச்சை தலைப்பொதிச்சல் சிகிச்சை, சிரோவஸ்தி சிகிச்சை முறைகள் மூலமாகவும் நம் உடலிலுள்ள நாடி நரம்புகளை வலுப் பெறச் செய்யலாம்.

Previous articleகுலதெய்வ வழிபாட்டை முறையாக செய்தால் பலன்கள் நிச்சம் கிடைக்கும்!
Next articleஆயுள் காக்கும் ஆயுர்வேதம்! உடலிலுள்ள எல்லா மூட்டுகளிலும் வலியும் வீக்கமும்!