இத்தாலி தலைநகர் ரோமில் மெட்ரோ ஸ்டேஷன் ஒன்றில் எஸ்கலேட்டர் திடீரென வேகமாக ஓடியதில் அதில் பயணித்தவர்கள் சரிந்து விழுந்ததில் 20 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து இத்தாலி போலீஸார் தரப்பில், ”ரோமிலுள்ள பிரபல மெட்ரோ ஸ்டேஷனான ரிப்பளிக்காவில் உள்ள எஸ்கலேட்டார் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக ஓட, அதில் பயணம் செய்த அனைவரும் ஓரிடத்தில் குவியலாக விழுந்தனர்.
இதில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் கால்பந்தாட்ட ரசிகர்கள். இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களில், ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து காரணமாக மெட்ரோ ஸ்டேஷன் சில மணி நேரம் மூடப்பட்டது. விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.
இந்த விபத்திலிருந்து தப்பித்த ஒருவர் கூறும்போது, ”திடீரென பலத்த சத்தம் கேட்டது. நாங்கள் அனைவரும் சரிந்து ஒரே இடத்தில் குவியலாக விழுந்தோம். எங்களுக்குத் தப்பிக்க நேரம் கிடைக்கவில்லை” என்றார்.
இந்த விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.