திருமணத்திற்கு முன்னால் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

0

திருமணத்திற்கு முன்னால் ஒருவருடன் மற்றொருவர் பேசக்கூடாது என்பது எல்லாம் அந்த காலம். உங்களுக்கு காதல் திருமணம் என்றால், கண்டிப்பாக உங்களது காதலன்/ காதலியை பற்றி தெரிந்திருக்கும். ஆனால் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றால் அந்த அளவுக்கு எதுவும் தெரியாது. இந்த நிலையில் நீங்கள் உங்களது காதலன் அல்லது திருமணம் செய்து கொள்வதாக இருப்பவரிடன் முங்கூட்டியே சில கேள்விகளை கேட்பதன் மூலம் நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ள முடியும்.

காதலில் உள்ள வேறுபாடு :

இப்போது உனக்கு என் மீது உள்ள காதலுக்கும், 5 வருடங்கள் கழித்து என் மேல் இருக்கும் காதலுக்கும் இடையே வித்தியாசம் இருக்குமா? ஒருவேளை என் காதலில் வித்தியாசம் உனக்கு தெரிந்தால், நீ அதை எப்படி எடுத்துக்கொள்வாய்?

காதல் மனதில் என்றுமே இருக்கும் ஒன்று தான். பிற்காலத்தில் அதை வெளிப்படுத்தும் விதத்தில் ஏதேனும் மாறுதல்கள் உண்டாகலாம். கட்டாயம் உண்டாகும். ஆனால் அதற்காக காதல், அன்பு ஆகியவை குறைந்துவிட்டது என்று அர்த்தம் இல்லை. அவை அதிகரிக்குமே தவிர, என்றும் குறையாது.

வாழ்வில் வரும் மனஅழுத்தம் :

திருமண வாழ்வு என்பது என்றுமே மகிழ்ச்சியாக இருந்துவிடாது. பணம், வேலை, பெற்றோர் உடல்நிலை, குழந்தைகள் என பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அப்போது உனது நிலை என்னவாக இருக்கும்? திருமணம் என்றாலே பிரச்சனைகள் தான் என்று என்றுமே தோன்ற கூடாது.

பிரச்சனைகள் என்பது திருமணம் ஆனாலும் வரும். ஆகாவிட்டாலும் வரும். திருமணம் ஆன பிறகு, பிரச்சனையின் போது நம்மை தாங்கிப்பிடிக்க ஒரு தோள் இருக்கிறது என்று மகிழ்ச்சியடைய வேண்டுமே தவிர, நீ வந்த பின்பு தான் என் வாழ்வே போர்க்களமானது என்று நினைப்பு வந்துவிடக்கூடாது.

செலவுகள் :

நமது குடும்ப செலவில், மளிகை பொருட்கள், ஆடைகள், போக்குவரத்து, வாடகை என ஒவ்வொன்றிற்கும் எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும்? வீட்டில் ஒவ்வொருவரின் செலவும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இதனை முன்கூட்டியே பேசிக்கொண்டால், எதை கூட்டுவது, எதை குறைப்பது… தேவையானது எது? தேவையற்றது எது…? என்ற தெளிவு பிறந்துவிடும். பல பிரச்சனைகள் இதனால் வருவது குறையும்.

வேலை :

அலுவலத்தில் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும்? வீட்டில் எவ்வளவு நேரம் செலவிட முடியும்? வீட்டிலும் அலுவலக வேலைகளை செய்பவரா? பொதுவாக, ஒருவர் அலுவலகத்தில் இருந்து தாமதமாக வந்தால், மற்றொருவருக்கு தனிமை உணர்வு ஏற்பட்டுவிடும். ஒரு குறிப்பிட்ட நேரத்தையாவது தனது குடும்பத்துடன் செலவிட வேண்டியது மிகவும் அவசியம். எனவே இவற்றை பற்றி பேசி ஒரு முடிவுக்கு வருவது சிறப்பு.

மத வேறுபாடுகள் :

ஒருவேளை நீங்கள் இருவரும் இருவேறு மதங்களை சார்ந்தவராக இருந்தால், உங்களது கடவுளை வழிபட உங்களுக்கு ஏதேனும் எதிர்ப்புகள் உண்டா? அல்லது அவரவர் மதத்தை பின்பற்றுவதில் எந்த தடையும் இல்லையா என்பது பற்றி பேசி தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுழந்தைகளுக்கு அடிக்கடி மாதுளையை சாப்பிடக் கொடுப்பதனால் கிடைக்கும் நன்மைகள்!
Next articleவாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் ஓர் அற்புத வழி!