தந்தைக்காக ஆணாக மாறிய சகோதரிகள்! நான்கு ஆண்டுகள் சவரம் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

0
547

இந்தியாவில் தந்தையின் மருத்துவ செலவுக்காகவும், குடும்ப செலவுகளை சமாளிக்கவும் சகோதரிகள் ஆணாக மாறி 4 ஆண்டுகள் சவரம் செய்த விடயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் துருவ நாராயணன். சலூன் கடை நடத்தி வந்த துருவ்வுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதைத் தொடர்ந்து, கடந்த 2014ஆம் ஆண்டு படுத்த படுக்கையானார்.

அதன் பின்னர் இவரது மகள்களான ஜோதி குமாரி(18), நேகா(16) ஆகியோர் சலூனை ஏற்று நடத்த முடிவு செய்தனர். ஆனால், இளம்பெண்களிடம் சவரம் செய்துகொள்ள வாடிக்கையாளர்கள் தயங்கினர். சிலர் இவர்களிடம் தவறாக நடக்க முயற்சி செய்தனர்.

இதன் காரணமாக தங்களது தோற்றத்தை மாற்றிக்கொள்ள நினைத்த சகோதரிகள் இருவரும், தலைமுடியை ஆண்களைப் போல் வெட்டிக் கொண்டனர். கையில் காப்பு போட்டுக்கொண்டு தங்களின் பெயர்களையும் தீபக், ராஜு என்று மாற்றி வைத்துக் கொண்டனர்.

இந்த விடயம் கிராமத்தில் இருந்தவர்களுக்கு தெரிந்திருந்தபோதும், பக்கத்து ஊர்களில் இருந்து வந்த வாடிக்கையாளர்களுக்கு எதுவும் தெரியவில்லை. சகோதரிகள் இருவரும் தினந்தோறும் குறைந்தது 400 ரூபாய் சம்பாதித்தனர்.

இந்த பணத்தை வைத்து தந்தையின் மருத்துவ செலவை சகோதரிகள் இருவரும் பார்த்துக் கொண்டனர். காலையில் பள்ளிக்கு சென்றுவிட்டு, மதியத்துக்கு மேல் இருவரும் கடையை திறப்பார்கள்.

தற்போது ஜோதி பட்டதாரியாகிவிட்டார். நேகா இன்னும் படித்துக் கொண்டிருக்கிறார். இவர்களைப் பற்றிய செய்தி வெளியான பின்னர், சகோதரிகளை அரசு அதிகாரிகள் அழைத்து கௌரவித்துள்ளனர்.

அனைத்துப் பிரச்சனைகளையும் போராடிக் கடந்து வாழ முடியும் என்பதற்கு இவர்களின் கதை ஓர் ஆச்சரிய உதாரணம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து நேகா கூறுகையில், ’ஆரம்பத்தில் கிராமத்தில் சிலரே எங்களை கிண்டல் செய்வர். ஆனால், அவர்களைக் கண்டுகொள்ளாமல் வேலையில் கவனம் செலுத்தினோம். ஏனென்றால் அப்போது எங்களுக்கு வேறு வழியில்லை.

ஆனால், இப்போது எங்களுக்கு தன்னம்பிக்கை இருக்கிறது. யாரைக் கண்டும் பயப்படுவதில்லை. நாட்கள் செல்ல செல்ல எங்களுடைய நிஜ அடையாளத்தை வாடிக்கையாளர்களிடம் வெளிப்படுத்தினோம்.

பெரும்பாலானோர் எங்களைப் புரிந்துகொண்டனர். அக்கா (ஜோதி) மீண்டும் தன்னுடைய முடியை வளர்க்க ஆரம்பித்துவிட்டாள். ஆனால் என்னைப் பார்த்தால் இப்போது கூட யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது’ என தெரிவித்துள்ளார்.

Previous articleதொண்டை வலியில் வைத்தியசாலை சென்ற பெண்ணால் ஆச்சரியத்தில் விழிப்பிதுங்கிய வைத்தியர்கள்!
Next articleஎங்க அம்மா, அப்பா திரையுலகில் இல்லை என்றால்? தளபதி விஜய் சூப்பர் ஸ்பீச்!