திருப்பூரில் அதிகாலை முதல் மது விற்பனை செய்யப்படுவதை கண்டித்து டாஸ்மாக் பார் முன்பு கத்தியுடன் இளம்பெண் மறியலில் ஈடுபட்ட சம்பவத்தை தொடர்ந்து டாஸ்மாக் ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் பி.என்.சாலை, பாண்டியன் நகரில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக அதிகாலை முதல் மது விற்பனை செய்யப்படுவதை கண்டித்து அண்ணாநகரை சேர்ந்த கவிதா (24) என்ற இளம்பெண் புதனன்று சம்பந்தப்பட்ட பாரின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.
பின்னர்பி.என்.சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டார். இதுகுறித்து அறிந்த திருமுருகன்பூண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கவிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது காவல்துறையினரிடம் கவிதா கூறியதாவது, மதுக்கடைகளை நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் டாஸ்மாக் கடைக்கு அருகே உள்ள பார்களில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் எனது கணவர் காலையிலேயே மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருக்கிறார். எனது குழந்தைகளை வைத்துக்கொண்டு எப்படி வாழ்க்கை நடத்துவது? உரிய நேரத்தில் பார்கள் செயல்படும் வகையில் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனையை தடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதனையடுத்து காவல்துறையினர் பாரில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து டாஸ்மாக் பார் ஊழியரான ஈரோடு மாவட்டம் அசோகபுரத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.




