ஜலதோஷத்திலிருந்து விடுதலை பெற கை மருந்துகள்!

0
650

ஜலதோஷத்திலிருந்து விடுதலை பெற…!

பாதிக்கப்பட்டவங்களை மட்டுமில்லாம, பக்கத்துல உள்ளவங்களையும் சேர்த்து இம்சிக்கிற பிரச்சினை சளி, இருமல் மற்றும் தும்மல். பிறந்த குழந்தைலேர்ந்து வயசானவங்க வரை யாரையும் ஜலதோஷம் விட்டு வைக்கிறதில்லை. பச்சைத்தண்ணி குடிச்சா ஆகாது; தயிர்சாதம் சாப்பிட்டா அவ்வளவுதான்னு சிலருக்கு எது சாப்பிட்டாலும் உடனே சளி பிடிக்கும். இன்னும் சிலருக்கு ராத்திரி 12 மணிக்கு ஐஸ் கிரீம் சாப்பிட்டா கூட சளியே பிடிக்காது. காரணம்… நோய் எதிர்ப்பு சக்தி!

அந்த சக்தி சரியா இருக்கிறவங்களுக்கு அடிக்கடி ஜலதோஷம் வர்றதில்லை. அசுத்தமான சூழல், ஜலதோஷம் வந்தவங்க சரியா கைகளை சுத்தம் செய்யாதது, தும்மறது… இப்படி நுண்ணுயிர்க் கிருமிகள், அடுத்தவங்க உடம்புக்குள்ள போறதாலதான் சளி பிடிக்குது. ஏ.சி.ரூம், சினிமா தியேட்டர்… இந்த மாதிரி இடங்கள்ல இருக்கிறப்ப, ஒருத்தர்கிட்டருந்து மத்தவங்களுக்கு சுலபமா ஜலதோஷம் பரவும். ஜலதோஷம் வந்தவங்க சில சுகாதார வழிகளைக் கடைப்பிடிச்சாலே, இதைத் தவிர்க்கலாம்.

அந்தக் காலத்துல லேசா ஒரு தும்மல் போட்டாலே, சட்டுனு ஒரு கஷாயமோ, கை மருந்தோ கொடுத்து சரியாக்கிடுவாங்க. இறுகிப்போன சளியை நீர்க்க வச்சாதான், அது கரைஞ்சு வெளியேறும். அப்படிப்பட்ட மருந்துகள் அந்தக் காலத்துல நிறைய இருந்தது. இன்னிக்கு எதுக்கெடுத்தாலும் மாத்திரை, மருந்து, அதோட பக்கவிளைவா வேற ஏதாவது பிரச்சினை, அப்புறம் அதுக்கு மருந்துன்னு தொடர்கதை ஆயிடுச்சு.

சளித் தொந்தரவுக்கு முக்கியத் தேவை வைட்டமின் சி. எலுமிச்சம்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடின்னு இது ரொம்ப சுலபமா கிடைக்கக் கூடியது. ஆனாலும், “எலுமிச்சம்பழம் சாப்பிட்டா சளி பிடிக்கும்”ங்கிற மாதிரியான தவறான நம்பிக்கைதான் நமக்கு அதிகம். வெங்காயம், சிவப்பு முள்ளங்கி, பூண்டு, குடமிளகாய், தயிர் – இதெல்லாம் ஜலதோஷத்தை விரட்டக்கூடியது. புகை பிடிக்கிறவங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். காரணம், அவங்களுக்கு வைட்டமின் “சி” இல்லாதது. இவங்களுக்கு தினசரி 300 மி.கி வைட்டமின் “சி” அவசியம்.

சளி பிடிச்சா சூடா ஒரு டம்ளர் பால் குடிக்கிறவங்க பலர். பால், சளியை அதிகப்படுத்தும். வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்த வெஜிடபிள் சூப், தொண்டைக்கு இதம் தந்து, சளியை விரட்டும். அதிக காரம் சாப்பிடறவங்களுக்கு சளி பிடிக்கிறது கம்மியா இருக்குமாம்.

சைனஸ் தொந்தரவால் நெற்றி, கண், மூக்கை சுத்தி நீர் சேரும். அப்ப பூண்டும் தூதுவளையும் சேர்த்து காரமா ஒரு குழம்போ, ரசமோ வச்சு சாப்பிட்டா, சட்டுனு குணம் தெரியும். கற்பூரவல்லி இலைக்குக் கூட சளியைக் கரைக்கிற குணம் உண்டு. இதைக் கஷாயமா வச்சு சாப்பிட விரும்பாதவங்க, ரசத்துல சேர்த்து சாப்பிடலாம்.

சிவப்பு முள்ளங்கியைத் துருவி அதுல கொஞ்சம் தேன், வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து, கிராம்பு தட்டிப் போட்டு, கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடறது ஜலதோஷத்தால உண்டான தொண்டைக் கமறல், எரிச்சலைப் போக்கும்.

முட்டைக்கோஸை பொடியா நறுக்கி, கொஞ்சமா தண்ணீர் விட்டுக் கொதிக்க வச்சு, வடிகட்டி, உப்பும் மிளகுத் தூளும் சேர்த்துக் குடிக்கிறதும் பலன் தரும்.

ஆஸ்துமா தொந்தரவால் பாதிக்கப்பட்டவங்க மூச்சு விட சிரமப்படுவாங்க. பூண்டு, இஞ்சி, மிளகு, லவங்கம் சேர்த்த உணவுகள் இவங்களுக்கு உதவும். புதினா, வெந்தயம், பார்லி கீரையும் நல்லது. இவங்க தவிர்க்க வேண்டியது அதிக உப்பு சேர்த்த ஊறுகாய் போன்ற அயிட்டங்கள்.

காளான், பச்சை வெங்காயம், தூதுவளைக் கீரை- இந்த மூணையும் அடிக்கடி உணவுல சேர்த்துக்கிறவங்களுக்கு ஆஸ்துமா தொந்தரவுகூட முழுக்க சரியாகுங்கிறது அனுபவஸ்தர்கள் சொல்லக் கேட்டது.

Previous articleயாழில் பரபரப்பை ஏற்படுத்திய பொலிஸ் வாகன கடத்தல் தொடர்பாக‌ வெளிவந்துள்ள தகவல்!
Next articleபிக்பாஸ் வீட்டில் கதறி கதறி அழும் நடிகை மும்தாஜ்! திடீரென விழுந்த விஜயலட்சுமி! முழுக் குடும்பமும் பதற்றத்தில் !