1995ஆம் ஆண்டு ஜப்பானில் நடத்தப்பட்ட சுரங்க ரயில் நச்சுத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஓம் ஷின்ரிக்யோ மத அமைப்பின் 6 உறுப்பினர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக ஓம் ஷின்ரிக்யோ மத அமைப்பின் தலைவர் ஷாகோ அஸஹாரா மற்றும் அவரது 6 சீடர்களுக்கு இந்த மாதம் 6ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஏனைய 6 பேருக்கும் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள சுரங்க ரயில் நிலையங்களில், ரயில் பயணிகளைக் குறிவைத்து கடந்த 1995ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி நச்சுத் தக்குதல் நடத்தப்பட்டது.
ஓடும் ரயில் பெட்டிகளுக்குள் அதி பயங்கரமான இரசாயனப் பொருள் திரவ வடிவில் வீசப்பட்டதில், 13 பயணிகள் உயிரிழந்ததுடன், சுமார் 50 பேருக்கு நிரந்தர உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.
மேலும், 900க்கும் மேற்பட்டவர்களுக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டது.
அந்த தாக்குதலை, ஷாகோ அஸஹாரா தலைமையிலான ஓம் ஷின்ரிக்யோ மத அமைப்பினரே நடத்தியிருந்தனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அந்த அமைப்புக்கு எதிராக பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஓம் ஷின்ரிக்யோ பொறுப்பேற்காவிட்டாலும், டோக்கியோ சுரங்க ரயில் தாக்குதலிலும், அதற்கு முன்னரே நடைபெற்றிருந்த சிறிய அளவிலான தாக்குதல்களிலும் அந்த அமைப்பு ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கில், 189 ஓம் ஷின்ரிக்யோ அமைப்பினர் மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. அவர்களில், அமைப்பின் தலைவர் ஷாகோ அஸஹாரா உள்ளிட்ட 13 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், அந்த தாக்குதல் நடந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு, மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் இந்த மாதம் 6ஆம் திகதியும், 6 பேர் நேற்றும் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.