சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் காதலியை அரிவாளால் வெட்டிவிட்டு காதலனும் ரயில்முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் குழுமியிருந்த இடத்தில், இளைஞர் ஒருவர் திடீரென அங்கு இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் அந்த இளைஞரை பிடிக்க முயன்றுள்ளனர். உடனே அந்த இளைஞர் அரிவாளை கீழே போட்டுவிட்டு எதிரே வந்த மின்சார ரயில் மீது பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையடுத்து வேகமாக மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தேன்மொழி (26) என்பவர், எழும்பூரில் உள்ள விடுதியில் தங்கி கூட்டுறவுத்துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் பணிமுடிந்து விடுதிக்கு திருப்புவதற்காக காத்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த அதே மாவட்டத்தை சேர்ந்த சுரேந்திரன் என்பவர், தேன்மொழியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அடுத்த சில நிமிடங்களில் மறைத்து வைத்திருந்த அரிவாளை வைத்து சரமாரியாக தேன்மொழியை வெட்டியுள்ளார். ரத்தவெள்ளத்தில் தேன்மொழி சரிந்ததும், எதிரில் வந்துகொண்டிருந்த மின்சார ரயில் மீது பாய்ந்துள்ளார். இதன்மூலம் இருவரும் காதலித்து வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் திகதி அன்று அதிகாலை பணிக்கு செல்வதற்காக காத்துக்கொண்டிருந்த சுவாதி என்கிற பெண், கொடூரமான முறையில் நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.




