சென்னையில் ஒரே வாரத்தில் போலீஸ் என மிரட்டி 2 கோடி ரூபாய் பறிப்பு: அடுத்தடுத்த சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி!

0

சென்னையில் கடந்த வாரம் போலீஸ் எனக்கூறி ஒருவரை வேனில் ஏற்றி கடத்திச் சென்று ரூ.98 லட்சத்தை பறித்துச் சென்ற கும்பலை தேடி வரும் நிலையில் நேற்று சைதாப்பேட்டையில் மீண்டும் தனியார் நிறுவன மேலாளரிடம் அதேபாணியில் ரூ.1 கோடியே 78 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

வளசரவாக்கம், பிருந்தாவன் நகரில் வசிப்பவர் உதய குமார் (40). இவர் தண்டலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Kotec Auto) அக்கவுண்ட் மேனேஜராக பணியாற்றுகிறார்.

கடந்த 14-ம் தேதி மாலை 5.30 மணியளவில் கம்பெனி ஊழியர்களின் சம்பளப் பணம் ரூ 1கோடியே 07 லட்சத்து 83 ஆயிரத்து 563 ரூபாய் ரொக்கப்பணத்துடன் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக அடையார் சாஸ்திரி நகர் முதல் பிரதான சாலையில் உள்ள அவர்களது நிறுவனத்தின் சேர்மன் சாங் மான்சிம் என்பவரைப் பார்க்க அவரது காரில் சென்றுக்கொண்டிருந்தார்.

அவருடன் காரில் அக்கவுண்ட் அசிஸ்டெண்ட் இளங்கோ இருந்தார். காரை ஓட்டுநர் வேணுகோபால் ஓட்டிச் சென்றார். கார் சைதாப்பேட்டை இளங்காளியம்மன் கோயில் அருகில் சென்றது.

அப்போது பின்பக்கமாக அரசாங்க பொலீரோ ஜீப் போன்று ஒரு வாகனம் அவர்களை விரட்டி வந்து மடக்கி நிறுத்தியுள்ளது. காரிலிருந்து காக்கி பேன்ட், வெள்ளை சட்டையணிந்த 6 நபர்கள் இறங்கியுள்ளனர். ஆஜானுபாகுவாக இருந்த அவர்களைப்பார்த்து பயந்துப்போன உதயகுமார் யார் நீங்கள் எங்கள் காரை ஏன் மடக்கினீர்கள் என கேட்டுள்ளார்.

நாங்கள் போலீஸ் என்று கூறிய அவர்கள் உங்கள் அனைவர்மீதும் சந்தேகம் இருக்கிறது, வாருங்கள் விசாரிக்கவேண்டும் என அனைவரையும் தங்கள் பொலீரோ ஜீப்பில் ஏற்றிக்கொள்ள அதில் ஒரு நபர் உதயகுமார் வந்த காரை எடுத்துக் கொண்டும், மற்றவர்களை பொலீரோ வாகனத்தில் ஏற்றிக் கொண்டும் பூந்தமல்லி வழியாக வண்டலூர் செல்லும் சாலையில் சென்றுள்ளனர்.

போலீஸ் என்கிறீர்கள் எங்கே எங்களைக் கொண்டுச் செல்கிறீர்கள், எங்கள் முதலாளியுடன் பேசவேண்டும் என உதயகுமார் கூற பேசாமல் வாருங்கள் நாங்கள் ஸ்பெஷல் டீம் எனக்கூறிய அவர்கள் அனைவரது செல்போனையும் பிடுங்கிகொண்டனர்.

பின்னர் பூந்தமல்லிக்கு முன்பாக 8 கி.மீ. தொலைவில் மூன்று பேரையும் இறக்கி விட்டு விட்டு பணம் மற்றும் மூன்று செல் போனுடன் உதயகுமாரின் காரையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து மறுநாள் மாலை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் உதயகுமார் மற்றும் நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் ஐபிசி 341, 323, 392 , 397, 319, 506(ii) ஆகியப்பிரிவின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் சம்பவம் நடந்தவர்களுடன் போராடாமல், வாகனத்தில் தப்பிச் சென்றவர்களை விரட்டியும் பிடிக்காமல், உடனடியாக போலீஸுக்கும் சொல்லாமல் நேரம் கடத்தியதால் போலீஸாருக்கு, உதயகுமார், இளங்கோ, ஓட்டுநர் வேணுகோபால் மற்றும் பொது மேலாளரின் ஓட்டுநர் மாசிலாமணி (50) ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர்களிடம் தெற்கு கூடுதல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், தெற்கு, இணை ஆணையாளர் மகேஷ்வரி, துணை ஆணையர் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. சம்பவம் நடந்துள்ள இடங்களிலிருந்து சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

வழிப்பறி சம்பவம் தொடர்பாக கிண்டி உதவி ஆணையர், சைதாப்பேட்டை உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மாலை நேரத்தில் ஜன சந்தடிமிக்க இடத்தில் திட்டம்போட்டு தெளிவாக கொள்ளைச்சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இதேபோன்று கடந்த 10-ம் தேதி கீழ்ப்பாக்கத்தில் பேருந்தில் பயணம் செய்த இளைஞர் ஒருவரிடம் ரூ.98 லட்சத்தை போலீஸ் எனக்கூறி பேருந்தைவிட்டு இறக்கி தங்கள் வாகனத்தில் ஏற்றிச்சென்று பணத்தைப்பறித்துவிட்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது.

ஏழுகிணறு, பெரியண்ணன் முதலி தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (26), இவரது மாமா கண்ணன் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 9-ம் தேதி, பர்மா பஜார் பகுதியில் வியாபாரம் செய்யும் 1) கிருஷ்ணன், 2) முனுசாமி, 3) விஜயகுமார் 4) பிரதீப்குமார், 5) சுல்தான் ஆகியோரிடம் பணம் ரூபாய். 80 லட்சம் பெற்றுள்ளார், உடன் கடையில் இருந்த பணம் ரூ.18 லட்சம் என மொத்தம் ரூ.98 லட்சத்தை கோபிநாத்திடம் கொடுத்தனுப்பியுள்ளார்.

பணத்துடன் கோபிநாத் கடந்த 09-ம் தேதி இரவு பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து 15F பேருந்தில் ஏறி கோயம்பேடு சென்றுள்ளார். இரவு 9 மணியளவில் பேருந்து டெயிலர்ஸ் ரோடு பேருந்து நிறுத்தம் வந்தபோது இன்னோவா கார் ஒன்று பேருந்தை மறித்து நின்றுள்ளது.

உடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் சேர்ந்து பேருந்துக்குள் ஏறி தாங்கள் போலீஸ் எனக்கூறி, கஞ்சா கடத்துகிறாயா என மிரட்டி, கோபிநாத்தை பிடித்து வலுக்கட்டாயமாக பேருந்தைவிட்டு இறக்கி கைவிலங்குப்போட்டு தாங்கள் வந்த காரில் ஏற்றி கடத்தியுள்ளனர்.

கார் வண்டலூர் அருகே சென்றபோது கோபிநாத்தை தாக்கி அடித்து கீழே இறக்கிவிட்டு பணத்துடன் அனைவரும் தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து மறுநாள் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் கோபிநாத் அளித்த புகாரின்பேரில் போலீஸார் ஐபிசி 363, 392, 394 ஆகியப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சம்பவம் தொடர்பாக கோபிநாத், அவரது சித்தப்பா கண்ணன் (39), ஏழுகிணற்றைச் சேர்ந்த சகாபுதீன் (52), முகமது ரசாக் (26) ஆகியோரிடம் விசாரணை நடத்தி விடுவித்தனர். சமபவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மேற்படி சம்பவம் நடந்த ஐந்து நாட்களில் மீண்டும் சைதாப்பேட்டையில் அதே பாணியில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால் இரண்டுச் சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாமோ என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆண் வாரிசு சிங்கக் குட்டி என்று மார்தட்டிக் கொண்ட தந்தையரே.. அவன் அன்னையை, தங்கையை, ஆசிரியையை, தோழியை சமமாகப் பாவிப்பதை உறுதி செய்ய என்ன செய்தீர்கள்?
Next articleதங்கக் கொலுசு அணியலாமா?