சுவிஸ் அரசியலில் 100 ஆண்டு மாற்றம்! தேர்தல் முடிவு ஈழத்தமிழர்களுக்கு எவ்வாறு அமையும்?

0

சுவிஸ் நாடாளுமன்ற தேர்தல், கடந்த 100 ஆண்டுகளில் நடக்காத பல மாற்றங்களை அளித்துள்ளதாக கட்டுரையாளர் சிவமகிழியின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கட்டுரையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1291ல் மூன்று மாநிலங்களின் கூட்டாச்சியாக உருவெடுத்த சுவிற்சர்லாந்து 1798ல் நெப்போலியனின் பேரரிசில் ஓர் குடியரசாக இணைக்கப்பட்டிருந்து.

1803ல் நெப்போலியனுடன் பேச்சுவார்த்தை நடாத்தி 13 மாநிலங்களை ஒருங்கிணைத்து பிரெஞ்சு பேரரசில் ஓர் குடியரசாக சுவிஸ் விளங்கி வந்தது.

1813 நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் பிரான்சின் ஆதிக்கத்தில் இருந்து சுவிஸ் தன்னை விடுவித்துக் கொண்டது. 07. 08. 1815 சுவிற்சர்லாந்துக் குடியரசு மீள் நிறுவப்பட்டது.

முதலாவது உலகப் பெரும்போருக்குப்பின்னர் 1814 முதல் 1815 வரை ஆஸ்திரியா நாட்டில் வீயன்னாவில் நடைபெற்ற அன்றைய ஐரோப்பிய நாடுகளின் மாநாட்டில் சுவிசின் தனித்தன்மை, பக்கசார்பில்லா நடுநிலை, இறையாண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டு சுவிற்சர்லாந்து உலகப் பந்தில் மீண்டும் ஒரு நாடாக வரையப்பட்டது.

  1. 1848ல் சுவிற்சர்லாந்து நாட்டின் புதிய அரசியல் யாப்பு படைக்கப்பட்டது. இது 18. 04. 1999 இறுதியாக மக்கள் வாக்கெடுப்பில் திருத்தப்பட்டது.

இந்நாட்டின் பாராளுமன்றம் என்பது இரண்டு சபைகளைக்கொண்டதாக விளங்குகின்றது. 23 முழு மாநிலங்கள் கொண்டது.

சுவிற்சர்லாந்து நாடாகும். இதில் மூன்று மாநிலங்கள் பாதி மாநிலங்களாக நோக்கப்படுகின்றன. முன்னொரு காலத்தில் ஒரு மாநிலமாக இருந்து பின்னர் பிரிந்த பாசல் லாண்ட் – பாசல் ஸ்ரட், நிட்வல்டென் – ஒப்வல்டென், அப்பென்செல் இன்னரோடனெ; – அப்பனெசெல் அவுசெர்ரோடன் என்பவை பாதி மாநிலங்கள் ஆகும்.

சுவிஸ் நாட்டின் பாராளுமன்றம் இரண்டு சபைகளைக்கொண்டதாக அமைந்துள்ளது. மாநிலங்களின் நலனைப் பிரதிநிதிப்படுத்துவது ஸ்ரென்டேறாற் (மாநிலங்கள் அவை) ஆகும்.

பாதி மாநிலங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு இருக்கை என்ற கணக்கிலும், 20 மாநிலங்களுக்கு தலா ஒரு மாநிலத்திற்கு இரு இருக்கைகள் என்ற கண்ககில் 40 இருக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் மாநிலங்கள் அவையின் இருக்கைகள் 46 ஆகும்.

குடிமக்களின் நலனைப் பிரிதிநிதிப்படுத்துவது நற்சியோனால்றாற் (தேசியசபை) என அழைக்கப்படுகின்றது. 30 ஆயிரம் மக்களுக்கு ஒரு இருக்கை என்று கணிக்கப்பட்டு மொத்தம் 200 உறுப்பினர்கள் தேசிய சபைக்குத் தெரிவுசெய்யப்படுகிறார்கள். அதிக மக்கள் வாழும் மாநிலத்தில் அதிக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

மாநிலங்கள் அவை மற்றும் தேசிய அவை இவை இரண்டும் என்று கூடுவதே சுவிற்சர்லாந்தின் பாராளுமன்றம் ஆகும். கடந்த 20. 10. 2019 ஞாயிறு சுவிஸ் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்றது.

கடந்த 100 ஆண்டுகளில் நடக்காத பல மாற்றங்களை இத்தேர்தல் அளித்துள்ளது. எவரும் முன்கணிக்காத வகையில் தேர்தல் பெறுபேறுகள் அமைந்துள்ளன. 46 வீத வாக்காளர்கள் தமது வாக்கினைச் செலுத்தியிருக்கிறார்கள். கடந்த முறையை விட இது 2.3 வீதம் குறைவாகும்.

கடந்த 15 ஆண்டுகளாக ஏறுமுகமாக இருந்த சுவிஸ் மக்கள் கட்சி எஸ்.வி.பி. 12 இருக்கைகளை இழந்துள்ளது. இது வலதுசாரிக்கட்சியாகும்.

முன்னர் விவசாயிகள் மன்றமாக இருந்து பின்னர் சுவிஸ் மக்கள் கட்சி என்ற பெயரில் கடும்போக்குச் சிந்தனை கொண்ட கட்சியாகவும், சுவிற்சர்லாந்து தனது பண்பாட்டு விழுமியங்களை காக்க வேண்டுமென்ற நோக்கமும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சுவிற்சர்லாந்து இணையக்கூடாது என்ற சிந்தனை கொண்ட கட்சியும் இதுவாகும்.

பெருவாரியான இருக்கைகளை இக்கட்சி இழந்திருந்தாலும் இதுவே சுவிஸ் பாராளுமன்றத்தில் 53 இருக்கைகளைக் கைப்பற்றிய பெரிய கட்சியாக உள்ளது. வாக்களித்த மக்களின் 10வீத ஓட்டினைப் பெற்ற பெரிய கட்சியும் இதுவாகும்.

இடதுசாரிச் சிந்தனைகொண்ட சுவிஸ் சோசலிச ஜனநாயக்கட்சியான எஸ்.பி இத்தேர்தலில் 4 இருக்கைகளை இழந்து மொத்தமாக 39 இருக்கைகளைக் கைப்பற்றி உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணக்கம் கொண்ட இக்கட்சி சமூக சோசலிச சித்தாந்தத்துடன் தொழிலளார் மற்றும் குடியேற்றவாசிகளின் நலனில் அக்கறை கொண்ட கட்சியாக இது விளங்குகின்றது.

இருந்தபோதும் இக்கட்சியின் இளையோர்கள், தமது தாய்க்கட்சி இடதுசாரிச் சிந்தனையில் இருந்து வலதுசாரிப்பக்கம் சரிவதாக வெளிப்படையாக இத்தேர்தலில் தம் விமர்சனத்தையும் வைத்திருக்கிறார்கள்.

சுதந்திர ஜனநாயக்கட்சி எப்.டி.பி இது முதலாளிகள் நலன் பேணும் கட்சியாகும். இது இத்தேர்தலில் 4 இருக்கைகளை இழந்து 29 இருக்கைகளைப் பெற்றுள்ளது.

கிறிஸ்தவ மக்கள் கட்சியான சீ.வி.பி இம்முறை 3 இருக்கைகளை இழந்து 25 இருக்கைகளைப் பெற்றுள்ளது.

பசுமைக் கட்சி (குறீனென்) மொத்தமாக 28 இருக்கைகள் பெற்றுள்ளது. வழமைக்கு மாறாக கடந்த 100 ஆண்டுகளில் நடைபெறாத விந்தை என சுவிஸ் ஊடகங்கள் கணித்துள்ளன.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் 11 இருக்கை கொண்ட பசுமைக்கட்சி இம்முறை 17 மேலதிக இருக்கைகளைக் வெற்றி கொண்டுள்ளது.

இதன் படி சுவிசின் நான்காவது பெரிய கட்சியாக பசுமைக் கட்சி விரிந்துள்ளது. பெரும்பாலும் இவ்விருக்கையினை வலதுசாரிக் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சியிடம் இருந்து தட்டிப் பறித்திருக்கிறது.

பாரம்பரியக் கட்சியின் கோட்டைகளையும் வாக்கு வீதத்தில் அதிரடியாக வீழ்த்தியிருப்பது அரசியல் விமர்சகர்களுக்கு வியப்பாக அமைந்திருக்கிறது.

பசுமைக்கட்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் இயற்கை வளத்தைப் பேணிக்காத்தல் எனும் விடயங்களைத் தன் நோக்காகக் கொண்டுள்ளது.

இக்கட்சியின் போக்குவரத்துத் தொடர்பான நிலைப்பாடு, எரிபொருள், மருத்துவம் ஆகிய விடயங்களிலும் மாசற்ற பூமி வேண்டும் எனும் தலைப்புக்களும் பெரும்பாலான இளையோர்களைக் கவர்ந்துள்ளது.

பசுமைக்கட்சியின் சுற்றுச்சூழல் அரசியலில் இணக்கமும், இடதுசாரி வெளிநாட்டவர் மற்றும் பொருளாதாரக்கொள்கைக்கு வேற்றுமையும் கொண்ட திறந்த பொருளாதாரக் கொள்கையும் கொண்ட பரந்த பசுமைக்கட்சி (குறீன்லிபரல்) 16 இருக்கைகள் பெற்றிருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளை விட 9 இருக்கைகள் கூடதலாக இம்முறை இக்கட்சி பெற்றுள்ளது.

ரிச்சீனோ மாநில வரலாற்றில் இதுவரை நடைபெறாத ஒரு செயலாக பழமைவாதக் கட்சியான லேகா தேசிய சபையக்கான தனது ஒரு இருக்கையினை பசுமைக் கட்சி வேட்பாளரிடம் இழந்திருக்கிறது.

இதுவரைக்கும் எக்கட்சியும் தீடீர் பாச்சலாக 17 இருக்கைகளைக் கடந்த முறையைப்பார்க்க அதிகம் கைப்பற்றியதில்லை. இச்சாதனையினை பசுமைக் கட்சி நடாத்தியுள்ளது.

1999ம் ஆண்டுத் தேர்தலில் எஸ்.வி.பி எனப்படும் சுவிஸ் மக்கள் கட்சி 15 கூடுதல் ஆசனங்ளைப்பெற்றிருந்தது. அப்போது வலது சாரிகளின் கை ஓங்கியதாக நோக்கப்பட்டது. இன்று சுவிஸ் பாராளுமன்றம் இடதுசாரிகளின் கை ஓங்கிய மன்றமாக நோக்கப்படுகிறது.

சுவிற்சர்லாந்தின் வரலாற்றில் இதுவரை எக்கட்சியும் ஒரு தேர்தலில் 12 இருக்கைகளை ஒரேயடியாக இழந்ததில்லை. இது எஸ.வி.பி கட்சியின் பேரிழப்பாக இன்று வரலாற்றில் பதியப்படுகிறது.

அதுபோல் 58 புதிய உறுப்பினர்கள் சுவிஸ் பாராளுமன்றத்தில் நுழையவுள்ளனர். இதுவும் இதுவரை நடந்திராத விந்தையாகும்.

சுவிஸ் பாராளுமன்றத்தின் 246 உறுப்பினர்களில் இம்முறை 84 பெண்கள் தெரிவுசெய்யப்பட்டிருப்பதும் சாதனையாகும். சுக்மாநிலத்தில் இருந்து வரலாற்றில் முதலாவதாக ஒருபெண் தேசிய சபைக்குத் தெரிவாகி இருக்கிறார்.

பெண்களுக்கு அதிய இடம் ஒதுக்கி உள்ள நாடுகளில் சுவீடென், பின்லாந்திற்கு அடுத்ததாக சுவிற்சர்லாந்து 2வது இடத்தில் இம்முறை திகழ்கிறது.

இத்தேர்தலின் முடிவு உடனடியாக எவ்வகையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு உடன் பதிலளிக்கவும் முடியாது. இதுவரை தொடரப்பட்ட திட்டங்கள் தொடரப்படும்.

ஆனால் பசுமைக்கட்சியின் வரவு எரிபொருள்விலை ஏற்றத்தை ஏற்படுத்தலாம், விமானச்சீட்டு விலை தண்டனைப்பணம் கொண்டு அதிகரிக்கப்படலாம், போக்குவரத்து வரி ஏற்றப்படலாம் என்கின்ற அச்சம் வலதுசாரிக்கட்சிகளுக்கு உண்டு.

விவாசாயத்தில் அதிக அக்கறையும், பயிர்களில் மரபணுமாற்றத்திற்கு எதிரான கருத்தையும் பசுமைக்கட்சி முன்னெடுக்கும்.

இராசயனவியலில் முன்னணி வகிக்கும் சுவிசிற்கு பசுமைக் கட்சியின் போக்கு இணக்கமாக இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமூகக்காக்புறுதி சீர்திருத்தவும், மருத்துவக்காப்புறுதி ஆகியவற்றின் கட்டணத்தை குறைக்கவும் முயலலாம்.

மணமான இணையர்களுக்கு கிடைக்கும் வரிச்சலுகை, குழந்தைகளைத் தத்தெடுக்கும் உரிமை போன்றவற்றை ஒரு பாலினத்தவர்களுக்கும் வழங்க இடதுசாரிகள் முன்வருவார்கள் என பழமைவாதப் பாரம்பரியக் கட்சிகள் அச்சம் வெளியிடுகின்றன.

246 உறுப்பினர்களும் இணைந்தே சுவிஸ் நடுவன் அரசினைத் தெரிவு செய்வர். 7 அமைச்சர்களைக் கொண்டது சுவிஸ் நடுவன் அரசாகும்.

இதுவரை முதற்பெரும்பான்மை கொண்ட கட்சி 2 அமைச்சர் இருக்கைகளையும், இரண்டாம் பெரும்பான்மை கொண்ட கட்சி 2 இருக்கைகளையும், மூன்றாம் பெரும்பான்மை கொண்ட கட்சி 2 இருக்கைகளையும், நான்காம் பெரும்பான்மை கொண்ட கட்சி 1 இருக்கையினையும் பெற்றுவந்தது மரபாக உள்ளது.

இப்போது பசுமைக்கட்சி நான்காம்பெரும்பான்மை கொண்ட கட்சியாக சுவிஸ் பாராளுமன்றத்தில் உள்ளது. இருந்தபோதும் இப்போது நடுவன் அரசின் அமைச்சர்களாக பதிவி வகிப்போர் எவருடைய பதிக்காலமும் முடிவடையவில்லை.

இருப்பவர்கள் விலகவேண்டிய தேவையும் இல்லை. நடுவன் அரசின் தேர்தல் நடைபெறாத வரையில் அடுத்த வாய்ப்பில் தமக்கு ஒரு சுவிஸ் மத்திய அமைச்சர் பதவியினை பசுமைக் கட்சி எதிர்பார்க்கிறது.

சுவிஸ் தொலைக்காட்சி நடாத்திய கருத்துக் கணிப்பில் பசுமைக்கட்சி 4ம் பெரும்பான்மை கொண்ட கட்சியாக இப்போது விளங்கினாலும், அடுத்த தேர்தலில் தன் இருப்பைத் தக்க வைத்தாலே இது நிரந்தர வெற்றி கொள்ளப்படும் எனத் தெரிவித்திருக்கிறது. மேலும் நடுவன் அரசில் அங்கம் வகிக்க சுகை கட்சி 2023 வரை காத்திருக்க நேரும் என எதிர்வினையும் கூறியுள்ளது.

இத்தேர்தல் முடிவு ஈழத்தமிழர்களுக்கு எவ்வாறு அமையும்?

கெறி முல்லெர் எனும் பசுமைக் கட்சியின் முகம் பல ஈழத்தமிழர்களுக்கு மிக அறிமுகமான முகமாகும். ஈழவிடுதலைக்கு அதிக குரல் கொடுத்ததுடன், தமிழர்களின் மேடைகளில் இவர் பல முறை தோன்றியிருக்கிறார்.

இலங்கை தொடர்பான சுவிசின் முடிவுகளுக்கு முடிந்தளவு தனது அரசியல் அழுத்த்தையும் அக்காலங்களில் காட்டியிருந்தார். இவர் இன்று பசுமைக்கட்சியில் இல்லை, தனிப்பட்ட செயல் காரணமாக கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார்.

தமிழர்கள் பொதுவாக இடதுசாரிச் சிந்தனை கொண்ட கட்சியாக எஸ்.பி அல்லது பசுமைக் கட்சிக்கே வாக்களித்து வந்தாலும், மன்றங்களாக அல்லது அமைக்புக்களாக கட்சித் தலைமமைகளுடன் அதிக உறவு பேணுவது குறைவே. ஆகப் பசுமைக்கட்சியின் நிரலில் நாம் இருப்போமா என்பதும் கேள்விக்குறியே!

கடந்த காலங்களில் 1999 ஆண்டு சுவிஸ் மக்கள் கட்சி (எஸ்.வி.பி) அதிக இருக்கைகள் பெற்று அக்கட்சியின் உறுப்பினர் சுவின் நடுவனரசின் அமைச்சர் பதியேற்று, நீதி மற்றும் காவற்துறையினைப் பொறுப்பேற்றுக் கொண்டதும் துரிதமாக அகதி விண்ணப்பம் கோரியவர்கள் கோர்வைகள் வேகமாக பரிசீலித்து பலருக்கும் தஞ்சமறுப்பு பதிலாக அளிக்கப்பட்டது.

வெளிநாட்டவர்கள் குற்றச் செயலில் ஈடுபட்டால் உடன் நாடு கடத்தும் சட்டமும் மக்கள் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொண்டு ஒப்பந்தம் காரணமாக சில நடைமுறைச் சிக்கலை இச்சட்டம் கொண்டிருப்பினும் இன்றும் சுவிசின் குடியேற்றத்தை மட்டுப்படுத்திய பல சட்டச் சீர்திருத்தங்களை வலதுசாரிக் கட்சி செயற்படுத்தியிருந்தது.

பசுமைக்கட்சியும் தொழிலாளர் நலன் விரும்பும் எஸ்.பியும் இணைந்து வெளிநாட்டவர்களுக்கும், குடியேறியவர்களுக்கும் நலன் பேணும் திட்டத்தை விரைவு படுத்துவார்களா அல்லது எரிபொருள் விலையினை உயர்த்தி, விமான மற்றும் தனிநபர் வாகனங்களைக் கட்டுப்படுத்துவார்களா எனப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசாண்டியின் முன்னாள் மனைவியின் குழந்தைக்கு என்ன நடந்தது? காஜலின் விவாகரத்துக்கான காரணம் அம்பலம் !
Next articleஎதிர்வரும் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம் !