சமாதி! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Samathi!

0

சமாதி! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Samathi!

மௌன்ட் ரோடு சாலையினருகில் இருக்கும் கல்லறைத் தோட்டக் காவல்காரன் குடிசையிலிருந்த நாய் அபாரமாகக் குலைக்கிறது. தோட்டக்காரன் நாயை அடக்கிப் பார்க்கிறான். அது கல்லறைத் தோட்டத்தைப் பார்த்துக் கொண்டே குலைத்தது.

ஜன்னல் வழியாக இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. உடன் கைவிளக்கை எடுத்துக்கொண்டு, நாயையும் அழைத்துக் கொண்டு வெளியே வருகிறான். நாய் கல்லறைகளின் பக்கமாகக் குலைத்துக் கொண்டே ஓடுகிறது.

அதோ அந்த கல்லறையின் பக்கத்தில் என்ன? யாரோ குனிந்திருப்பது மாதிரித் தெரிகிறதே?

ஓட்டமாக ஓடிச்சென்று பார்க்கிறான்.

லாந்தலின் மங்கிய வெளிச்சத்தில் ஒரு வாலிபன், பிரேதக் குழியைத் தோண்டி அதனுள் இருந்த சவப்பெட்டியை யுடைத்து அதிலிருக்கும் பிணத்தை வெளியே இழுக்கும் பொழுது பிடித்துக் கொள்ளுகிறான்.

அந்தப் பிரேதம் நேற்றுப் புதைக்கப்பட்ட ஒரு வெள்ளைக்காரப் பெண்மணியின் பிரேதம். பிரேதத்தை இழுத்துக் கொண்டிருந்தவன் வாலிபன். நல்ல நிலைமையில் இருப்பவன் போல் தோன்றியது.

உடனே அவனைப் பின்கட்டாகக் கட்டிப் போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு சேர்த்துவிட்டான்.

அந்த வாலிபன், ஒரு பிரபல வக்கீல். மல்ஹரிராவ் என்ற பெயர்.

விசாரணை நடந்தது. மல்ஹரிராவ் செய்த கோரமான, வெறுக்கத்தக்க செய்கையைப் பற்றி விஸ்தரிக்கப்பட்டது.

விசாரணையைப் பார்க்க வந்தவர்களுக்கும், இந்த வக்கீலின் நடத்தை மனதைக் கொதிக்க வைத்தது. “தூக்கில் போட வேண்டும்” என்று பார்க்க வந்தவர்கள் தங்கள் இலவசத் தீர்மானத்தைக் கூறினார்கள்.

கோர்ட்டில் ஏற்பட்ட அமளியை ஒருவாறு அடக்கிய பிறகு, நீதிபதி, குற்றவாளியை நோக்கி, “உன் சார்பாகக் கூற வேண்டியவற்றை சொல்” என்றார்.

மல்ஹரிராவ் தனக்கு வாதிக்க ஒரு வக்கீலும் வேண்டாம் என்று முன்பே தடுத்துவிட்டார்.

மெதுவாக எழுந்து நின்றார். நல்ல அழகர்; கட்டுறுதியுள்ளவுடல், மனவுறுதி காண்பிக்கும் உதடுகள், களங்கமற்ற முகம்.

“மாட்சிமை தாங்கிய நீதிபதியவர்களே, ஜுரர்களே!

“நான் அதிகமாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. சமாதியிலிருந்து என்னால் வெளியே இழுக்கப்பட்ட நங்கையை, நான் காதலித்தவன். நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தோம்.

“நான் அவளைக் காதலித்தேன். எனது காதல் சரீர சம்பந்தமான வெறும் காமத் தீயல்ல. அது ஒரு தெய்வீகமான காதல். அது களங்கமற்ற தனிப்பெரும் உணர்ச்சி.

“இன்னும் கேளுங்கள்.

“நான் அவளை முதன்முதலாகச் சந்தித்த பொழுது எனக்கு ஏற்பட்ட உணர்ச்சிகள் ஆச்சரியமானது. கண்டதும் காதல் என்ற அழகின் மயக்கம் அல்ல. அவளைக் கண்டவுடன், எங்கோ கண்டது மாதிரி, மீண்டும் சந்திப்பது மாதிரி உணர்ந்தேன். அவளுடைய நடத்தைகளும், அவள் குரலும், எல்லாம் என்னை அவளுள் ஐக்கியப்படுத்தி விட்டன.

“அவள் எனது ஆத்மிக ஆசையின் பதில் போலும், நம்பிக்கையின் பயன்போலும் எனக்குப் பட்டது.

“சிறிது பழக்கம் அதிகப்பட்டது. அவள் என்னுடன் வாழச் சம்மதித்தாள். உலகம் தூற்றலாம். அதற்கு அதைத் தவிர வேறு என்ன தெரியும்? ஆனால் அந்தத் தெய்வத்தின் முன்பு அவள் எனது மனைவிதான். நான் அவளைப் பெற்றேன். அவள்தான் என் வாழ்க்கை. இதற்குமேல் நான் ஒன்றும் விரும்பவில்லை.

“ஒருநாள் சிறிது தூரம் உலாவச் சென்றிருந்தோம். அப்பொழுது ஒரு சிறு தூறல் வந்தது. அவளால் குளிர் தாங்க முடியவில்லை.

“நெஞ்சில் சளி பிடித்தது. எட்டு நாள் கழித்து அவள் உயிர் நீத்தாள்.”

“அவள் மரணபரியந்தம், எனது மனம் குழம்பியது. மனம் இடிந்துவிட்டது.

“அவள் இறந்தாள். குருட்டு விதியின் கதை என் உள்ளத்தை ஒடித்தது. என் சிந்தனை நின்றது. நான் அழுதேன்.

“அவளது பிரேத சமஸ்காரத்திற்கு வேண்டி அவள் உடலைத் துணியினால் சுற்றி, சவக்குழியில் புதைக்கும் வரை அவள் பக்கத்திலிருந்தேன். ஒவ்வொரு நிமிஷமும் பக்கத்திலிருந்தேன்.

“பிறகு… பிறகு என் சித்தம் தெளிந்தது. உள்ளம் புழுவாகத் துடித்தது. என் காதலுக்கு அவள் கொடுத்த பணயம் அபாரமானது.

“பிறகு நினைப்பு என் உள்ளத்தைக் கவ்வியது. இனி என்னால் ஒரு காலத்திலும் அவளைப் பார்க்க முடியாது என்பதுதான்.

“இப்படியே ஒருவன் ஒருநாள் பூராவாகவும் நினைத்துக் கொண்டிருந்தால் பைத்தியந்தான் பிடிக்கும். எண்ணிப் பாருங்கள். ஒருத்தி, காதல் பூராவையும் வசீகரித்த ஒருத்தி, உலகத்தில் ஈடு இணையற்ற ஒருத்தி, அவள் தன்னையே கொடுத்து விடுகிறாள்.

காதல் என்ற அந்த அற்புதமான விளக்கை உள்ளத்தில் ஏற்றி வைக்கிறாள். அவள் கண்கள், வானவெளியிலும் பெரிய எல்லையற்ற கண்கள், களங்கமற்ற கனிவுடன் புன்சிரிப்புக் காண்பிக்கின்றன. அவள் காதலிக்கிறாள். அவள் பேசும்பொழுது அவள் குரல் இனிமையிலே, இன்ப வெள்ளம் உள்ளத்தில் பெருக்கெடுக்கிறது.

“பிறகு திடீரென்று மறைந்து விடுகிறாள். எண்ணிப் பாருங்கள். எனக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே மறைந்து விடுகிறாள். அவள் இறந்துவிட்டாள். அந்த வார்த்தையின் அர்த்தம் என்ன தெரியுமா?

இனி இல்லை, இல்லை, இல்லை. ஒரு இடத்திலும் அவள் இருக்கமாட்டாள். இனி அந்தக் கண்கள் ஒன்றையும் நோக்காது. இனி அந்தக் குரல், ஆம், அந்த இனிமையான குரல் கேட்காது.

“அவள் முகத்தைப் போல் இன்னொரு முகம் இருக்குமா? சிலைகள், படங்கள், அவளைப் போன்றதாகச் செய்துவிடலாம். ஆனால் அந்த உடல், அந்த முகம், இனி இப் புவியில் தோன்றாது.

ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான மக்கள் பிறப்பார்கள். ஆனால் இனிப் பிறக்கும் அந்தப் பெண்கள் கூட்டத்தினுள் அவள் இனிவரப் போகிறாளா? அது முடியுமா? இதை எண்ணிக் கொண்டிருந்தால் ஏன் பைத்தியம் பிடிக்காது?

“அவள் இருபது வருஷங்கள் இருந்தாள். அவள் மறைந்தாள். ஒரேயடியாக மறைந்தாள்.

“அவள் சிந்தித்தாள்; சிரித்தாள்; என்னைக் காதலித்தாள், – என்னை! – இப்பொழுது அதன் சின்னம் என்ன இருக்கிறது? பிறந்து மடியும் ஈசலும் நம்மைப்போல்தான் சிருஷ்டிக்கப்படுகின்றது.

எதுதான் இருக்கிறது? அவள் உடல், உஷ்ணமும் ஜீவனும் பொதிந்த உடல், அந்தப் பெட்டியில், சமாதியின் அடியில் அழுகும் என்று நினைத்தேன். அவள் ஆத்மா, அவள் சிந்தனை, அவள் எங்கே?

“அவளை இனி பார்க்க முடியாது. இனி அவளைப் பார்க்க முடியாது!

“மண்ணாக மாறும் சவம், இனியும் அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய சவம், என் சிந்தனையில் அடிக்கடி எழுந்தது. அவளை ஒருமுறை பார்க்க ஆவல்கொண்டேன். ஒரே ஒரு தடவை.

“கையில் மண்வெட்டியும் விளக்கும் சம்மட்டியும் எடுத்துக்கொண்டு கல்லறைத் தோட்டத்திற்கு வந்தேன். சுவரேறிக் குதித்து உள்ளே சென்றேன். வெகு எளிதில் அவள் சமாதியைக் கண்டுகொண்டேன். இன்னும் சரியாகக் கூட கல் பதிக்கப்படவில்லை.

“தோண்டி, சவப்பெட்டியை எடுத்துத் திறந்தேன். தாங்க முடியாத துர்நாற்றம் வீசியது. பிணத்தின் அழுகிய வாடை. ஆமாம்! அவள் பஞ்சணை எவ்வளவு சுகத்துடன் கமழ்ந்தது!

“பிணத்தின்மேல் சுற்றிய துணியை விளக்கின் வெளிச்சத்தில் பார்த்தேன் அவளைப் பார்த்தேன். அவள் முகம் நீல நிறமாகப் பருத்து, பயங்கரமாக இருந்தது. வாயிலிருந்து கறுத்த சீழ் வடிந்து கொண்டிருந்தது.

“அவள், அவள்தான். பயம் என்னைப் பிடித்துக் கொண்டது. அவள் தலைமயிரைப் பிடித்து முகத்தை நன்றாகப் பார்க்க என் பக்கம் தூக்கினேன்.

“அப்பொழுதுதான் என்னைப் பிடித்துக் கொண்டார்கள்.”

“அன்று இரவு முழுவடும் – ஒவ்வொருவனும், காதலியின் ஆலிங்கனத்தில் ஏற்ற பரிமள கந்தத்தைப் பெறுவான் – பிணத்தின் அழுகிய வாடையை, என் காதலியின் பரிமள கந்தத்தை முகர்ந்து கொண்டு இருந்தேன்.

“இனி நீங்கள் என்னை என்னவேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.”

கோர்ட்டு முழுவதும் நிசப்தமாய் இருந்தது. இன்னும் எதையோ கேட்கக் காத்திருப்பதுபோல் இருந்தது. ஜுரர்கள் முடிவு கட்ட உள்ளே சென்றார்கள்.

அவர்கள் திரும்பியும், குற்றவாளி பயமற்று, சிந்தனையற்று நின்றான்.

நீதிபதி கேட்க வேண்டியதைக் கேட்டார்.

ஜுரர்கள், “குற்ற குற்றவாளி” என்று முடிவு கட்டினார்கள்.

அவன் சிந்தனையற்று நின்றான்.

கோர்ட்டில் ஒரு பெருமூச்சு வந்தது.

எழுத்தாளர்: புதுமைப்பித்தன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநிகும்பலை! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Nikumbalai!
Next articleசங்குத் தேவனின் தர்மம்! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Sangu Thevanin Tharmam!