Home Rasi Palan ராசி பலன் Sani Peyarchi Palangal சனிப்பெயர்ச்சி 2020-23: கடகம் ராசிக்கு கண்டச்சனி கவலை வேண்டாம்!

சனிப்பெயர்ச்சி 2020-23: கடகம் ராசிக்கு கண்டச்சனி கவலை வேண்டாம்!

0
1942

சென்னை: விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். கடகம் ராசிக்காரர்களுக்கு ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு சனி பகவான் நகர்கிறார். கண்டச்சனி காலத்தில் கடகம் ராசிக்காரர்களுக்கு வேலை, கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம் கடகம் ராசிக்காரர்களுக்கு எப்படி என்று பார்க்கலாம்.

சனியானவர் உங்களது ராசிக்கு 7 மற்றும் 8ம் வீட்டிற்கு அதிபதி அவர் 7ம் இடத்தில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்வது சற்று சுமார் ஆனாலும் கடகம் ராசிக்காரர்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்காது. சனி பகவான் ஆறாம் இடத்தில் இருந்தாலும் அலைச்சல், வேதனை, நோய்வாய்ப்படுதல் கடன் இவையெல்லாம் கொஞ்சமாக இருந்தது.

இனி சஞ்சரிக்கவிருக்கும் 7ம் இடம் என்பது கண்டச்சனி என்றாலும் ராசிக்கு கேந்திரமாக இருப்பதால் சனியினுடைய கடுமை வரும் காலங்களில் சற்று குறைந்து காணப்படும். சனிபகவான் உங்கள் ராசிக்கு களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு உங்கள் ராசிக்கு 4ஆம் இடம், 9ஆம் இடம், மற்றும் உங்கள் ராசியை பார்வையிடுகிறார்.

ஒற்றுமை அதிகரிக்கும்
வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் விலகி வெளிநாட்டிற்கு செல்லக் கூடிய யோகம் கூடிவரும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் உற்சாகமும் மிகுந்து காணப்படும். எப்பொழுதும் சுறுசுறுப்பும் சிந்தனை சக்தியும் மிகுந்து காணப்படும். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்பம் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழ வழி ஏற்படும்.

நன்மைகள் அதிகம்
சனிபகவான் தனது ஏழாவது பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தெய்வ அனுகூலம் அதிகரிக்கும். செயல்களில் சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் காரணமாக அனைத்து செயல்களையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். எப்பொழுது எல்லாம் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதை தீர்க்க இறைவன் ஒருவரை உங்களுக்கு அனுப்பி வைப்பார்.

அம்மாவின் ஆசி
உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும். தண்ணீர் அதிகம் குடிக்கவும். இந்த இடப்பெயர்ச்சியால் உங்கள் பெற்றோர்களுக்கும் பாதிப்பு வரலாம். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை.தாயரால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். தாயாரின் அன்பும் ஆசியும் கிட்டும்.

வருமானம் கூடும்
சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். நீங்கள் யார் என்று உலகிற்கும் மற்றவர்களுக்கும் தெரியவரும். பேச்சில் சாமர்த்தியம் கூடும். பணப் புழக்கம் அதிகரிக்கும், கடன் கொடுத்த பணம் திரும்ப கைக்கு வந்து சேரும். பழைய இடங்களை விற்று புதிய இடம் வீடு, வண்டி, வாகனங்கள், விட்டு உபயோக பொருட்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். உயர்கல்வி பயில வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும்.

தன்னம்பிக்கை அதிகரிக்கும்
இதுவரை குடும்பத்தில் நடைபெறாமல் தள்ளிப் போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் அமையும். காதல் விஷயங்களில் மன ஈடுபாடு அதிகரிக்கும் ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும் அடிக்கடி விருந்து கேளிக்கைளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் வந்து சேரும். குடும்பத்தில் புதிய வரவுகள் வந்து சேரும். அதனால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும். சகோதர, சகோதரிகளின் அன்பும், ஆதரவும் இருந்து வரும். தன்னம்பிக்கையும் ஊக்கமும் அதிகரிக்கும்.

இடமாற்றம் ஏற்படும்
தேவையில்லாத விஷயங்களில் தலையிடக் கூடாது. வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். ஆனால் வேலையில் திருப்தியற்ற நிலைமையே அமையும். எனவே கிடக்கும் வேலையை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டுவிடக் கூடாது. வேலையாட்களால் நன்மை. உண்டாகும். ஒரு சிலருக்கு வேலையில் இடமாற்றம், ஊர் மாற்றம் அமையும். வேலையில் உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு கிட்டும். சக தொழிலாளர்களால் தேவையற்ற மன வருத்தங்கள் உண்டாகும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு சுமாராக இருந்து வரும்.

பணம் விசயத்தில் கவனம்
யாருக்கும் தேவையில்லாமல் பணம், கடன் கொடுப்பதோ, ஜாமீன் கையெழுத்து போடுவதோ கூடாது. தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. கடன்களை கட்டுக்குள் வைத்து கொள்ளுங்கள். மனம் அமைதியற்ற நிலை ஏற்படும் காலத்தில் யோகா, தியானம் செய்ய மனது அமைதிப்படும்.சரியான நேரத்திற்கு சாப்பிடுங்க. காரணமான, எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது உங்கள் உடல் நலத்திற்கு நல்லது.

மங்களசனீஸ்வரரை வணங்குங்கள்
வழக்குகளில் வெற்றி கிட்ட வாய்ப்புகள் அதிகம். நண்பர்களால் எதிர்பார்த்த, பாராத உதவிகள் வந்து சேரும். எதிரிகள் தலையெடுத்த வண்ணம் இருப்பார்கள். எனவே எதிரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெற லட்சுமி நரசிம்மரை வணங்கலாம். கும்பகோணம் அருகில் உள்ள திருநறையூரில் உள்ள நாச்சியார் கோயிலில் மங்கள சனியாக குடும்பத்துடன் அருள்பாலிக்கிறார். சனிதிசை, கண்டச்சனியால் பாதிப்பு குறைய இங்குள்ள சனிபகவானை தரிசனம் செய்து அர்ச்சனை செய்ய நன்மைகள் நடைபெறும்.

Previous articleஉங்களுக்கு ஃபுட் பாய்சன் வரப்போகிறதா! இந்த அறிகுறிகளை வைச்சி சரி பண்ணிக்கோங்க!
Next articleசனிப்பெயர்ச்சி 2020-23: சிம்மராசிக்காரங்களே இனி வசந்தகாலம்தான்!