காணாமல்போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் மூன்று மாத கர்ப்பிணியென தெரியவருகிறது.
அத்துடன் வவுனியா – ஆசிகுளம், இலக்கம் 108, கட்டுக்குளம் பகுதியை சேர்ந்த 29 வயதான நடராசா போதநாயகி எனும் குறித்த பெண்ணின் சடலத்தை உறவினர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
எனினும் சடலத்தை எரிக்காது புதைக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட மேலதிக நீதவான் சம்பா ரத்னாயக்க உத்தரவிட்டுள்ளார்.
பெண்ணின் சடலத்தை அவரது கணவர் அடையாளம் காட்டியிருந்த நிலையில் பிரேத பரிசோதனை செய்வதற்கான வைத்தியசாலை ஒன்றை தெரிவு செய்து இன்றைய தினத்திற்குள் அறிவிக்குமாறு பொலிஸாருக்கு நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அதுவரையில் சடலத்தை திருகோணலை ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக விடுதியில் வசித்து வந்த பெண் விரிவுரையாளர் விடுமுறை பெற்று வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார்.
திருகோணமலை சங்கமித்த கடற்கரையில் இருந்து நேற்று குறித்த பெண் விரிவுரையாளருடைய பை மற்றும் செருப்பு போன்ற பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன
இதனையடுத்து விரிவுரையாளரும் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




