கோவிலில் சாமி சிலைகளைத் தொட்டு கும்பிடலாமா?

0

கோயில்களுக்குச் செல்லும் வழக்கம் உள்ள எல்லோர் மனதிலும் கோயிலில் சுவாமி சிலைகளைத் தொட்டு வணங்கலாமா? என்னும் இந்தக் கேள்வி நிச்சயம் வந்து போகும். சுவாமி சிலைகளைத் தொட்டு வணங்கலாமா என்ற ஆவலும் வணங்கக்கூடாதோ என்ற அச்சமும்தான் அது. கோயில் சிலைகளைத் தொட்டு வணங்கலாமா என்பதுபற்றி ஆன்மிகப் பெருந்தகை சண்முக சிவாச்சார்யரைக் கேட்டோம்.

”கோயில்களில் வழிபாடு செய்யும்போது சுவாமி சிலைகளைத் தொட்டு வணங்கலாமா என்றால், நிச்சயம் தொடாமல் வணங்குவதுதான் நல்லது. ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’என்றார் ஔவைப் பிராட்டியார். அப்படி ஆலயம் தொழச் செல்வதற்கென்று பல விதிமுறைகள் இருக்கின்றன. ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோயில்களில் நிச்சயம் சுவாமி சிலைகளைத் தொடக்கூடாது.

நாம் மாணவர்களாக இருந்தபோது, பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் அறிவியல் ஆய்வுக்கூடங்களுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொள்வோம். அப்போது, சோதனைச்சாலைகளில் உள்ள பொருட்களை ஆசிரியரின் அனுமதி பெற்று, அவற்றைத் தொடுவோம். சோதனைகளை மேற்கொள்வோம். ஆனால், அதுவே நாம் நாசாவிலுள்ள பொருட்களை பார்வையாளர்களாகச் செல்லும்போது தொடமுடியுமா? தொடக்கூடாது. ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோயில்களில் அதற்குரிய புனிதம் காக்கப்படவேண்டும்.

உதாரணமாக, ஆபரேஷன் தியேட்டரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் நம் அம்மா, அப்பாவாக இருந்தாலும், ஆபரேஷன் செய்யும்போது டாக்டர்கள் நம்மை அனுமதிப்பதில்லை. அப்படித்தான் ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோயில்களில் முக்கியமான பூஜைகளைச் செய்யச் செல்லும் அவர்கள் மிகவும் கவனமுடன் குளித்து அனுஷ்டானங்களை முடித்துவிட்டு மிகவும் ஆசாரத்துடன் சென்று பூஜை செய்வார்கள். பூஜை செய்து முடித்ததும் பிரசாதம் தருவார். ஜனநெரிசல்களில் ஒருவர் மீது ஒருவர் தொடவேண்டி வரும்.

அப்போது பிரச்னையில்லை. இது சாதி மதம் சம்பந்தப்பட்டதல்ல. நான் பூஜை பண்ணப் போகும்போது என் பையனா இருந்தாலும், தொடக்கூடாதுனுதான் சொல்வேன். சில முக்கியமான பூஜைகள், தனி மனிதர்களுக்காக மட்டும் செய்யப்படுவதில்லை. உலகக்ஷேமத்துக்காக, உலகிலுள்ள சகலஜீவராசிகளுக்காகவும்தான் பூஜை செய்யப்படுகிறது. அதாவது அந்த சக்தி அப்படியே பாதுக்காக்கப்படவேண்டும். எனவே நாம் கண்டிப்பாக சுவாமி சிலைகளைத் தொடக்கூடாது.

வடநாட்டில் ஜோதிர்லிங்கம், ஆத்மலிங்கம்னு வெச்சிருக்காங்க. அந்த மாதிரி கோயில்களில் நாம் சுவாமியைத் தொட்டு, மலர்களால் அர்ச்சித்து பூஜை செய்யலாம்னு வெச்சிருக்காங்க. பக்தியை வளர்க்கிறதுக்காக அப்படி வெச்சிருக்காங்க. இப்போ பேங்க்ல காஷியர் கிட்ட பெரிய தொகையை வாங்குறோம். அதே ஏ.டி.எம் மூலமா சிறியதொகைகளை நாமே எடுக்கிறோம். நம்ம பேங்க், நம்ம கணக்குதான்னு காஷியர் அறைக்குள் எப்படி போக முடியாதோ அதே மாதிரிதான்.

அதனால் சுவாமி சிலைகளை, பகவானின் திருமேனியைத் தொடாமல் வழிபடுவது அவர்களுக்கு நல்லது. எப்படி ஹை ஓல்டேஜ்ல் வர்ற மின்சாரத்தை டிரான்ஸ்பார்மர் மூலமாக பிரித்து தெருக்களுக்கு, பின்னர் வீடுகளுக்கு என பகிர்மானம் செய்து பயன்படுத்துவதுபோல் சுவாமியிடம் இருந்து வெளிப்படும் ஆகர்ஷண சக்தி மிகவும் வலிமை மிக்கது. எனவே, நாம் சிலைகளைத் தொடாமல் வணங்கினாலே நமக்குத் தேவையான அருள் கிடைத்துவிடும்.

பொதுவாக கோயில்களில் வழிபாடு செய்யச் செல்லும்போது கவனிக்க வேண்டியவை:

* நன்றாகக் குளித்து தூய ஆடை உடுத்தி, நெற்றியில் சமயச் சின்னங்கள் இட்டுக்கொண்டு செல்ல வேண்டும்.

* மலர்கள், தேங்காய், பழம், பூ, ஊதுபத்தி, சூடம் ஆகியவற்றுள் அவரவர் வசதிக்கேற்ப இயன்றவைகளை எடுத்துச் செல்ல வேண்டும்.

* கோபுரத்தைக் கண்டவுடன் இருகரம் கூப்பி வணங்க வேண்டும்.

* எந்தக் கோயிலுக்குச் செல்கின்றோமோ அந்த தெய்வத்தை மனத்தில் ஜபித்தவாறே செல்லவேண்டும்.

* கோயிலுக்குச் செல்லும் முன் அந்தக் கோயிலின் தல விநாயகரை வணங்கி குட்டிக்கொண்டு, தோப்புக்கரணம் போட்டு விட்டு பிறகே உள்ளே செல்ல வேண்டும்.

* கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றை வணங்கிய பிறகே சுவாமி தரிசனம் செய்யவேண்டும்.

* மூலமூர்த்தியை வணங்கியதும், சுற்றிலுமுள்ள உற்சவ மூர்த்திகளையும், சண்டேசுவரரையும், பிற சந்நிதிகளையும் வணங்க வேண்டும்.

* திருநீற்றை இரு கைகளாலும் பணிவுடன் பெற்று, கீழே சிந்தாமல் அணிந்துகொள்ள வேண்டும்.

* ஆலயப் பிராகாரத்தை மூன்று முறையாவது வலம் வர வேண்டும்.

* சுவாமியை தரிசனம் செய்யும்போது, அந்த தெய்வத்துக்குரிய துதிப்பாடல்களைச் சொல்லி வழிபாடு செய்யவேண்டும்.

* கோயிலை வலம் வந்ததும், கொடி மரத்தின் கீழ் வீழ்ந்து வணங்க வேண்டும்.

* சிறிது நேரம் மௌனமாக அமர்ந்திருந்து அவரவர் நிலைக்கேற்ப தியானம் செய்து, பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டும்.

கோயில்களுக்குச் செல்லும்போது செய்யக்கூடாதவை:

* உடல் தூய்மை, உள்ளத்தூய்மை இல்லாமல் செல்லக்கூடாது.

* காலணிகள் அணிந்துகொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.

* சமயச் சின்னங்கள் அணியாமல் செல்லக்கூடாது.

* வீண் பேச்சு பேசுதல், சண்டையிடுதல், ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு இடித்து நெருக்கி செல்லக்கூடாது.

* அசுத்தம் செய்யவோ எச்சில் துப்பவோ கூடாது.

* பலிபீடம், நந்தி இவற்றின் குறுக்கே செல்லக்கூடாது.

* ஒரு கையால் கும்பிடுதல் கூடாது.

* கோயில்களில் எதிரில் வருபவர் எத்தனை பெரிய மனிதராக இருந்தாலும் மென்புன்னகையுடன் கடந்துவிடவேண்டும், கைகளை உயர்த்தியோ, கால்களில் விழுந்தோ வணங்கக்கூடாது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅதிர்ஷ்டம் தேடி வர 21 நாட்கள் படுக்கைக்கு கீழ் இந்த பொருட்களை வையுங்கள்!
Next articleதொப்பையை குறைக்கும் மூச்சுப்பயிற்சியை முறையாக செய்வது எப்படி?