பத்து மாதம் சுமந்து குழந்தைகளை நலமுடன் பெற்றெடுப்பது, அன்னையின் கடமையாக இருக்கிறது.அதன்பின் அந்தக்குழந்தையை, நலமுடன் வளர்த்து, சிறு சிறு உடல்நல உபாதைகளையும் கண்டறிந்து, அதற்கேற்ப குழந்தைகளுக்கு மருந்துகள் அளித்து, குறிப்பிட்ட வயதை அடையும்வரை, குழந்தைகளை கண்ணின் மணி போல காத்து வருவது வீட்டில் உள்ள மூத்தோர் பாட்டிமார்களின் கடமையாக இருக்கிறது என்றாலும், அந்தப் பாட்டிகளுக்கு, குழந்தைகளின் உடல்நல பாதிப்புகளை நீக்குவதில் பெரிய துணையாக, பக்கபலமாக இருப்பது ஒரு மூலிகையாகும்.
வசம்பு, நீர்நிலைகளின் ஓரம் அதிகமாக வளரும், இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மூலிகைத்தாவரமாகும். இஞ்சிக்கொத்தின் இலைகளைப் போல, வசம்பின் இலைகளும் நீண்டு, மூன்றடி உயரம் வரை வளரும் இயல்புடையவை.
வசம்பின் நல்ல தடித்த வேர்கள், வளரும் இடங்களில் மூன்றடி ஆழம்வரை பரவிச்செல்லும் இயல்புடையன. நிலத்தின் அடியே வளரும் வேர்த் தண்டுகள், ஓராண்டில் முதிர்ந்து இள மஞ்சள் வண்ணத்தில் காணப்படும் சமயத்தில், இந்த தண்டுகளை வெட்டிப் பதப்படுத்துவர்.
நல்ல நறுமணமிக்க இந்த வேர்களில், அரிய வேதிப்பொருட்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இந்த வேர்களே, வசம்பு எனப்படுவது. மிகப்பழங்காலத்தில் இருந்து, தமிழர்களின் மருத்துவத்தில், சிறப்பிடம் வசம்புக்கு உண்டு.
பல் முளைக்காத பிறந்த குழந்தைகள் முதல், பல்லு போன வயது முதிர்ந்தவர்கள் வரை, அனைவருக்கும், உடல்நல பாதிப்புகளுக்குத் தேவையான நிவாரணம் அளிக்கும் அருமருந்தாக, பயன்படுத்துபவர்களின் கைகண்ட நம்பிக்கை மருந்தாக, வசம்பு திகழ்கிறது.
வசம்புவின் பொதுவான நற்பலன்களாக, உடல் வெப்பத்தை சீராக்கி, பசியின்மையைப் போக்கி, உடலின் நச்சுக் காற்றை வெளியேற்றி, மனிதர்களுக்கு நன்மைகள் தரும். வயிற்றில் வளரும் புழுக்களை அளிக்கும் ஆற்றல் மிக்கது.
Spread the love