வீதிகளில் அதிக வாகன நெரிசலும் ஒலிகளும் இப்போதுதான் குறைந்து நிம்மதியாய் கிடக்கிறது.
கடைத்தெருக்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது.
வானம், விமானப் பறவைகளின் தொந்தரவில்லாமல் நிம்மதியாய் கிடக்கிறது.
உணவுகளை கடைகளில் சாப்பிட்ட காலம் மாறி இப்போதுதான் வீடுகளில் சமைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
பிட்டும்,இடியப்பமும், குரக்கன் கஞ்சியும் பறாட்டாவுக்கு பதிலாக உண்ணலாம் என்பது குழந்தைகளுக்கு கூட இப்போதுதான் தெரிந்திருக்கிறது.
பர்கரும் ,சிக்கண் பண்ணும்,பிறைட் றைசும் , கொத்தும் மட்டும்தான் இரவுச் சாப்பாடு என்று நினைத்த குழந்தைகளுக்கு இப்போதுதான் தெரிகிறது முருக்கை இலை சுண்டலும் முட்டைப்பொரியலும் சுடு சோறும் சம்பலும் கூட இரவு உணவாய் உண்ணலாமென்று.
உயர்ரக உணவு என்று நச்சுக்களை உண்ட சமூகம் இப்போதுதான் இலைவகைகளை தேடி ஓடுகிறது.
மஞ்சளும் சீரகமும் இப்போதுதான் கிராக்கி ஆகிப் போயிருக்கிறது.
தொழில் தொழிலென்று குடும்பத்தை மறந்தவர்களின் வாகனங்கள் ஒய்வுபெற்றுக் கிடக்கிறது.
படிப்பு படிப்பு என்று புலமைப்பரிசில் பைத்தியத்தில் உணவு உண்ணக்கூட நேரமில்லாமல் பிள்ளைகளை துரத்திய பெற்றோர்களின் தொல்லைகளிலிருந்து பிள்ளைகள் நிம்மதியாய் இருக்கிறார்கள்.
கொரோனா கொன்றுவிடும் என்ற பயம்தான் வேத புத்தகங்களை மீண்டும் தூசுதட்ட வைத்திருக்கிறது.
பிள்ளைகளோடு சேர்ந்து இப்போதுதான் பெற்றோர்கள் தங்கள் பொழுதுகளைக் கழிக்கிறார்கள்.
கூடியிருந்து குடும்பமாய் இப்போதுதான் மூன்று வேளை உணவையும் ஒன்றாக உணவருந்துகிறார்கள்.
குடும்பங்களையும் பெற்ற தாய் தந்தையையும் இப்போதுதான் பலருக்கு ஞாபகம் வந்திருக்கிறது. அவா்கள் சொன்ன வைத்திய முறைகழும் இப்போதுதான் ஞாபகம் வருகிறது.
சிறுகாயத்திற்கும் ஆங்கில மருந்தில் மூழ்கிக் கிடந்த உலகம் இப்போது பெருங்காயம் தேடி அலைகிறது.
கைகளை சுத்தம் செய்து கொள்வது அடிப்படை சுத்தமாக இருந்தாலும் இப்போதுதான் அமுலுக்கு வந்திருக்கிறது.
அடுத்தவர் முகங்களுக்கு நேரே தும்மக் கூடாது என்ற பண்பாடெல்லாம் இப்போதுதான் சட்டமாகியிருக்கிறது.
வீதிகளும் வீடுகளும் என உலகமே சூழலை சுத்தப்படுத்திக் கொண்டுள்ளது.
இனம் மதம் மொழி என துவேஷம் பேசிய எல்லா குரலும் ஒரே மந்திரம் உச்சரிக்கிறது “கொரோனா” என.
அடுத்தவனை சுரண்டி வாழ்ந்த உலகம் அடுத்தவனின் மூச்சுக்காற்றைக் கூட சுரண்டக் கூடாதென்று மூடிக்கொண்டு அலைகிறது.
எல்லோருக்கும் நாட்டில் நல்லது நடந்தாலும் அத்தியவசியதுறை மட்டும் அழுது கொண்டிருக்கிறது.
கெட்டதில் நடந்த கெட்டது என்னவென்றால் பத்து ரூபா விற்ற பொருட்கள் சில வியாபாரிகள் கொள்ளை லாபம் காண்பதுதான்.
By:Tamilpiththan