குழந்தைகளின் இருமலுக்கு தேன், இஞ்சி, மஞ்சள்தூளே போதும்!

0

குழந்தைகளின் இருமலுக்கு தேன், இஞ்சி, மஞ்சள்தூளே போதும்!’ மருந்தின் பக்கவிளைவுகள் சொல்லும் மருத்துவர்கள்

இருமல் பாதிக்கப்பட்டவருக்கும் சரி, அருகிலிருப்பவர்களுக்கும் சரி, ஒருவிதமான அசௌகரியத்தை ஏற்படுத்தும் பிரச்னை. பேருந்துப் பயணத்தில், கோயிலில், அலுவலகத்தில் யாராவது இருமினால் ஒருவித எரிச்சலோடு பார்ப்போம். சில நேரங்களில் அவர்கள்படும் கஷ்டத்தைப் பார்த்து இரக்கமும் படுவோம். குழந்தைகள் யாராவது இருமலால் அவதிப்பட்டால், அது யாருடைய குழந்தையாக இருந்தாலும் சற்று கலங்கித்தான் போவோம்.

நம் வீட்டுக் குழந்தைகளுக்கு இருமல் ஏற்பட்டால், உடனடியாக அதைத் தடுப்பதற்கான முயற்சிகளை எடுப்போம். மருத்துவரைச் சந்தித்து, அவர் எழுதாவிட்டாலும், நாமே ஓர் இருமல் மருந்தை எழுதச் சொல்லி, கேட்டு வாங்கி, குழந்தைகளுக்குக் கொடுப்போம். குழந்தைகளுக்கும் இருமல் நின்றுவிடும். நமக்கும் நிம்மதியாக இருக்கும். ஆனால், `அதற்குப் பிறகுதான் மிகப்பெரிய அளவில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள்’ என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

`இருமும்போது ஏற்படும் துயரங்களைவிட, இருமல் மருந்தால் குழந்தைகள் அடையும் இன்னல்கள் ஏராளம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். இருமல் மருந்துகளிலிருக்கும் `ஹிஸ்டாமைன்ஸ்’ (Histamines), `செடேடிவ்ஸ்’ (Sedatives) ஆகியவை இதயத்துடிப்பை அதிகப்படுத்திவிடும். மூச்சுவிடுவதற்குச் சிரமத்தை ஏற்படுத்திவிடும். அதனால், மருந்துகளுக்குப் பதிலாக, பாலில் மஞ்சள்தூள், இஞ்சி, தேன் கலந்து குடித்தால் இருமல் குறையும்’ என்று ஆலோசனை வழங்குகிறார்கள் மருத்துவர்கள்.

பொதுவாக இருமலை ஓர் அபாயக் குரலாகத்தான் நம் மக்கள் பார்க்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. அது ஒரு தடுப்பு அரணாக, நம் உடலின் பாதுகாப்புக்காக (Protective reflex) ஏற்படும் ஓர் அனிச்சைச் செயல். நம் உடலுக்குள் சளி, தூசு, உணவுத் துகள்கள் போன்றவை உள்ளே நுழையாமல் பார்த்துக்கொள்வது இருமல்தான். இருமலைத் தடுப்பதற்கான வேலையை நாம் ஒருபோதும் செய்யக் கூடாது’’ என்கிறார் குழந்தைகள் நுரையீரல் நல மருத்துவர் பாலமுருகன்.

மேலும், இருமல் மருந்துகள் ஆபத்தானவையா என்பது குறித்தும் விளக்குகிறார்… “இருமல், பலவிதமான காரணங்களால் ஏற்படுகிறது. சளித்தொற்று, வீசிங், அலர்ஜி, நுரையீரல் தொடர்பான கோளாறுகள் இப்படிப் பல காரணங்களால் ஏற்படும். முதலில், மருத்துவரைச் சந்தித்து, எதனால் இருமல் ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். பெரும்பான்மையான இருமல், சளி மற்றும் வைரஸ் தொற்றுகளால் உண்டாகிறது. அதற்கு மருந்து வாங்கி உட்கொள்ளும் பழக்கம் அதிகளவில் இருக்கிறது. இது தவறான போக்கு. இந்த மருந்துகளால் சில ஆபத்துகளும் இருக்கின்றன.

இருமல் மருந்துகளில் `ஆன்டி சிஸ்டமைன்’ (Anti cystamine) உள்ள உள்ளவை சளியை நுரையீரலுக்குள்ளேயே சுருக்கிவிடும். சளி வெளியில் வருவதற்கு வாய்ப்பிருக்காது. அதனால், சுவாசம் தொடர்பான பிரச்னைகள் உண்டாகும். அதிகமாகத் தூக்கம் வரும். சோர்வுத்தன்மை ஏற்படும். `சால்புடாமோல்’ (Salbutamol), `லேவோசால்புடாமோல்’ (Levosalbutamol) வகை மருந்துகள் குழந்தைகளின் இதயத்துடிப்பை அதிகப்படுத்தும். நிம்மோனியாவால், மூச்சுப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு இருமல் மருந்து கொடுத்தால் பாதிப்பை மேலும் அதிகப்படுத்தத்தான் செய்யும்; குறைக்காது. அதனால் இருமல் மருந்துகளை பெரும்பாலும் தவிர்த்துவிடுவது நல்லது. சில நேரங்களில் குழந்தைகள் இருமி வாந்தி எடுப்பார்கள். அப்போது மட்டும் கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு இருமல் அதிகமாக இருந்தால் பாலில், இஞ்சி தேன் கலந்து கொடுக்கலாம். கற்பூரவல்லி, துளசி ஆகியவற்றாலான கஷாயம் செய்து கொடுக்கலாம். மருந்துகளைவிட இன்ஹேலர் பயன்படுத்துவது நல்லது. உடனடித் தீர்வுக்கும் இது வழிவகுக்கும்’’ என்கிறார் பாலமுருகன்.இருமல் மருந்துகளால் இவ்வளவு ஆபத்துகள் இருந்தாலும், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவது ஏன்?

குழந்தைகள் நல மருத்துவர் செல்வன் விளக்குகிறார். “குழந்தைகளின் இருமல் பிரச்னைக்கு இருமல் மருந்து கொடுக்கக் கூடாது. சுத்தமான தேன் கொடுத்தால் போதுமானது. பொதுவாக மருத்துவர்கள் யாரும் இருமலுக்கு மருந்து எழுதிக் கொடுப்பதில்லை.

மக்கள் நேரடியாக மருந்துக்கடைகளுக்குச் சென்று இவற்றை வாங்கும் பழக்கம்தான் பெருமளவில் இருக்கிறது. மருந்து வணிகத்தில் இருமல் மருந்துகள் விற்பனை முக்கியமானது. எந்தப் புதிய நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டாலும், அவர்கள் முதலில் தயாரிப்பது இருமல் மருந்தைத்தான். மருத்துவரின் பரிந்துரையில்லாமல் மருந்துக்கடைகளில் மருந்தும் வாங்கும் பழக்கத்தைத் தடுக்கவேண்டிய பொறுப்பு தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டுத் துறைக்குத்தான் இருக்கிறது.’’

தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலர் மருத்துவர் சிவபாலனிடம் இது குறித்துக் கேட்டோம் `இந்தியாவிலேயே மிகச் சிறப்பாகச் செயல்படுவது தமிழ்நாடு மருந்துக்கட்டுப்பாட்டு துறைதான். பொதுவாக இருமல் மருந்துகளை யாரும் நேரடியாக மருந்துக்கடைகளில் வாங்குவதில்லை. மருத்துவர்களின் பரிந்துரையோடுதான் வாங்குகிறார்கள்.

இருமல் மருந்துகளில் ‘பிரிஸ்கிரிப்ஷன் டிரக்ஸ்’ (Prescription drugs) ‘நான்-பிரிஸ்கிரிப்ஷன் டிரக்ஸ்’ (Non-Prescription drugs) என இரு வகைகள் உள்ளன. இவற்றில், `நான்-பிரிஸ்கிரிப்ஷன் டிரக்ஸ்’ வகை மருந்துகள்தான் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றையும், `மருத்துவர்களின் பரிந்துரையில்லாமல் கொடுக்காதீர்கள்’ என்று மருந்துக்கடைகளுக்கு அறிவுறுத்திவருகிறோம். இதுகுறித்து தொடர்ச்சியான நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறோம்’’ என்கிறார் சிவபாலன்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஒரு நாளைக்கு 10 டீஸ்பூன் சர்க்கரைக்கு மேல் வேண்டாம்! புற்றுநோய் ஏற்படலாம்!
Next articleரத்தத்தில் உள்ள அதிகமான சர்க்கரை அளவைக் குறைக்கும் அற்புத நட்டு மருந்து!