ஜப்பானின் ஹொக்கைடோவை பகுதியில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக, அங்கிருந்த விமானநிலையம், வீடுகள் பல சேதமடைந்துள்ளன.
ஜப்பானில் கொக்கைடோ என்ற தீவு உள்ளது. அங்கு இன்று அதிகாலை 3 மணிக்கு திடீரென பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது.
இதனால் அங்குள்ள அத்சுமா நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி மலைகளை கொண்டதாகும்.
இது ரிக்டர் அளவில் 6.7 என்று பதிவானது. இது பூமிக்கு அடியில் 40 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்க மையம் டொமகோமய் நகருக்கு கிழக்கே இருந்தது.
இதன் காரணமாக 140 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு தற்போது 4 ஆயிரம் ராணுவத்தினர் மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் 20 பேர் காணாமல் போயுள்ளனர். ஹொக்கைடோவில் 48 பேர் காயமடைந்ததாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றன.
வான்வழி பிம்பங்களைப் பார்க்கும் போது 10-15 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது தெரிந்தது. பசுமை வனாந்திரப் பகுதியில் நிலச்சரிவினால் ஏற்பட்ட பிரவுன் நிற சேறு சகதிகள் காணப்பட்டன.
விமானநிலையங்கள் மற்றும் சாலைகள் மூடப்பட்டன.சப்போரோவில் நிலசரிவினால் புறப்பட்ட சேறு சகதியில் பல கார்கள் சிக்கியுள்ளன.
ஹொக்கைடோ முழுதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் பலரைக் காணவில்லை என்றும் அரசு அதிகாரிகளுக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன.
நிலநடுக்கத்தின் போது 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் உறுதிபடுத்தப்படவில்லை.
இந்த பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக விமானநிலையம் குலுங்கியது, தரைமட்டமான வீடுகள் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.




