குரு பெயர்ச்சி 2019: குரு தசை யாருக்கு கோடீஸ்வர யோகம் தரும் – பாதிப்புக்கு பரிகாரம் !

0

குருபகவான் தன காரகன், புத்திரகாரகன். குரு பகவான் ஒருவரின் ஜாதகத்தில் நன்றாக இருந்தால் அவரது தசாபுத்தி காலத்தில் கோடீஸ்வர யோகம் பெறும் அளவிற்கு அள்ளிக்கொடுப்பார். அதே சரியில்லாத நிலையிலோ வலுவிழந்தோ, நீசமடைந்தோ இருந்தால் அவரது தசாபுத்தியில் பாதிப்புகளை ஏற்படுத்துவார். எனவேதான் ஒருவருக்கு கோச்சார ரீதியாக குருபெயர்ச்சி பலன்கள் சொல்லும் போதே உங்கள் ஜாதகத்தில் குருவின் நிலை எப்படி இருக்கிறது. தசாபுத்தி என்ன நடக்கிறது என்பதைப் பார்த்து அதற்கேற்ப பரிகாரம் செய்யச் சொல்கின்றனர் ஜோதிடர்கள்.

குரு பொன்னவன். குரு பார்க்க கோடி நன்மை. குரு நின்ற இடம் பாழ், பார்க்கும் இடம் சுபிட்சம் என்றெல்லாம் ஜோதிட ரீதியான பழமொழிகள் உண்டு.

பொன்னும், மஞ்சளும் குருவிற்கு உரியதாகிறது. பொன் எனப்படும் தங்கத்திற்கு அதிபதியும் குருவே. குரு முழுமையான சுப கிரகம் என்பதால் அவரது பார்வைக்கு எத்தகைய தோஷத்தையும் போக்கும் வலிமை உள்ளது.

குரு, தனம் மற்றும் புத்திர காரகன் என்பதால் அவரது தசையில் பணம் அதிகமாகப் புரளும் இடங்களிலோ, பணத்தை வைத்துச் செய்யும் தொழில்களிலோ இருக்க வைப்பார்.ஒருவரின் ஜாதகத்தில் குரு வலிமையாக இருந்தால் பணம் அதிகம் புரளும் இடங்களில் வேலை கிடைக்கச் செய்வார் நகை, நிதித்துறை போன்ற தொழில்களை செய்ய வைப்பார். வலுப்பெற்ற குரு பத்தாமிடத்தோடு சம்பந்தப்படும் நிலையில், ஒருவரை பணத்தை இரட்டிப்பாக்கும் வட்டித் தொழில் மற்றும் ஜுவல்லரி போன்றவைகளில் ஈடுபட வைத்து பெரிய லாபங்களைத் தருவார். ஒருவரின் ஜாதகத்தில் குரு ஆறு, எட்டு போன்ற இடங்களில் மறைந்தோ, பகை, நீசம் பெற்றோ இருந்தால் சனி, ராகு போன்ற பாபக் கிரகங்களுடன் தொடர்பு கொண்டோ இருந்தால் தன லாபத்தை தடை செய்வார், புத்திரபாக்கிய தடையும் ஏற்படும்.

செல்வ வளம் தரும் யோகம்

ஒருவரின் ஜாதகத்தில் குரு ஒன்று, நான்கு, ஏழு, பத்து எனப்படும் கேந்திர ஸ்தானங்களில் இருந்து ராகு ஆறாமிடத்தில் இருந்தால் அஷ்டலட்சுமி யோகம் அமைவதாக ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. ஆறாமிடத்தில் அசுபக் கிரகமான ராகு இருப்பதால் ருண ரோக சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் கெட்ட ஆதிபத்தியங்களான கடன், நோய், எதிரி ஆகியவை ஒழிக்கப்பட்டு அந்த பாவம் ஜாதகருக்கு சுப விஷயங்களைச் செய்யும் என்பது ஜோதிட விதி.

குரு தரும் யோகம்

குரு ஹம்ச யோகம் தரும் நிலையில் அவருக்கு எதிர்த் தன்மையுடைய கிரகங்களான சுக்ரன், சனி, புதன் ஆகியோருடன் சேருவது, இவர்கள் குருவைப் பார்ப்பது யோகத்தைக் குறைத்து விடும். அதேநேரத்தில் குருவின் நண்பர்களான சந்திரன், சூரியன், செவ்வாய் ஆகியோர் குருவைப் பார்த்தாலோ, இணைந்தாலோ யோகம் இன்னும் வலுப்பெறும்.

குரு கேது சேர்க்கை

நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் விருச்சிக ராசியில் இருக்கும் குரு தனுசு ராசியில் நகர்ந்து அங்குள்ள சனி, கேது உடன் சில மாதங்கள் சஞ்சரிக்கப் போகிறார். சனி பெயர்ச்சி 2020 ஜனவரி மாதம் நிகழ்வதால் சனி மகரத்திற்கு நகர்ந்து விடுவார். ஆனால் குரு கேது உடன் இணைந்து ஆண்டு முழுவதும் சஞ்சரிப்பார். குருவும், கேதுவும் இணைந்து ஒரு பாவத்தில் அமர்ந்திருப்பது கேள யோகம் எனப்படும் கோடீஸ்வர யோகம் என்று சொல்லப்படுகிறது.

செல்வச்செழிப்பு

கேது ஒரு முழுமையான ஞானக் கிரகம் அவர் ஞானத்தின் வடிவான குருவுடன் சேரும் போது மிகப்பெரிய யோகத்தைச் செய்வார். குறிப்பாக கேதுவிற்கு வலிமையான இடங்களாகச் சொல்லப்படும் விருச்சிகம், கன்னி, கும்ப வீடுகளிலும், சர ராசிகளான மேஷம், கடகம் ஆகியவற்றிலும் இந்த அமைப்பு குரு மற்றும் கேது தசைகளில் ஜாதகருக்கு நல்ல யோகத்தைச் செய்யும். சர ராசிகளில் இந்த இணைப்பு இருக்கும் நிலையில் ஜாதகரை வெளிமாநிலம், வெளிதேசத்திற்கு அனுப்பி உயர்ந்த செல்வ நிலையை அளிக்கும்.

குரு தசையில் யோகம்

செவ்வாயின் ஆதிக்கத்துக்குட்பட்ட மேஷ லக்னத்திற்கு குரு 9 மற்றும் 12ஆம் அதிபதி. அதே போல விருச்சிக லக்னத்திற்கு குரு 2 மற்றும் ஐந்தாம் அதிபதி. குரு தனது தசையில் மிகச் சிறந்த யோகங்களை அளிப்பார். அதே போல கடகம், சிம்மம் லக்ன காரர்களுக்கும் தனது தசையில் யோகங்களையே செய்வார். இந்த நான்கு லக்னங்களுக்கும் வலிமையற்ற நிலையிலோ, மறைவு பெற்றோ, பகை, நீசம் பெற்றிருந்தாலும் கூடுமானவரை கெடுதல்களைச் செய்ய மாட்டார். கை தூக்கி விட்டு காப்பாற்றுவார்.

குரு செய்யும் நன்மை

ரிஷபம், துலாம் லக்னக்காரர்களுக்கு குரு பகவான் பெரிதாக நன்மை செய்வதில்லை. காரகம் குருவின் எதிரி சுக்கிரன். ரிஷப லக்னத்திற்கு எட்டிலும், துலாம் லக்னத்திற்கு ஆறாம் வீட்டிலும் அமர்ந்து ஆட்சி பலம் பெற்று சுப கிரகங்களின் பார்வையோ தொடர்போ ஏற்பட்டால் நல்லது நடக்கும்.

மிதுனம் கன்னி

மிதுனம் மற்றும் கன்னி லக்னக்காரர்களுக்கு குரு பகவான் கேந்திரமான 4, 7 , மற்றும் 10ஆம் வீட்டில் அமரும்போது யோகம் தருவார். நல்ல வாழ்க்கைத்துணையும் பிள்ளைகளால் பெருமையும் தேடி வரும். மகரம், கும்பம் லக்னகாரர்களுக்கு யோகாதிபதி இல்லை என்றாலும் கடகத்தில் உச்சம் பெற்ற குரு மகரத்தை பார்த்தால் தசையில் நன்மை நடைபெறும். அதே போல கும்ப லக்ன காரர்களுக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் குரு அமர்வது நன்மை நடக்கும்.

குரு எங்கு இருந்தால் நன்மை

தனுசு, மீனம் ராசிக்கு குரு அதிபதி என்றாலும் கேந்திரங்களில் அமர்ந்தால் கேந்திராதிபத்ய தோஷம் வரும். அதே நேரத்தில் தனுசு லக்ன காரர்களுக்கு குரு கடகத்தில் உச்சம் பெற்றால் நன்மை, அது எட்டாவது வீடான மறைவு ஸ்தானமாகவே இருந்தாலும் நல்லது நடக்கும். மீனம் ராசிக்காரர்களுக்கு உச்சம் பெற்றாலும் அதிகம் நன்மை இல்லை அதே நேரம் விருச்சிகமான ஒன்பதாவது வீட்டில் அமர்ந்து மீனத்தை பார்ப்பதன் மூலம் வலிமை கிடைக்கும்.

ஹம்ச யோகம்

சர லக்னங்களான மேஷம், கடகம், துலாம், மகர லக்னத்தில் பிறந்தவர்கள் குருவால் உண்டாகும் ஹம்ச யோகத்தின் முழுப் பலனையும் அனுபவிப்பவர்கள் உபய லக்னங்களான தனுசு, மீனம், மிதுனம், கன்னிக்கும் இந்த யோகம் அமையப் பெறும். ஆனால் குருவின் கேந்திராதிபத்ய தோஷத்தினால் அவர்களுக்கு யோகம் முழுமை பெறாது. சர லக்னங்களுக்கு குரு கடகத்தில் உச்சம் பெற்றும், உபய லக்னங்களுக்கு தனுசு, மீனத்தில் ஆட்சி பெற்றும் ஹம்ச யோகத்தை அளிப்பார். இந்த அமைப்பில் குரு பலம் பெறுவதால் அவரது சுப காரகத்துவங்கள் ஜாதகருக்கு மேலோங்கி நிற்கும். உபய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு லக்னத்தில் இருந்தால் மட்டுமே குரு முழு யோகம் அளிப்பார்.

பரிகாரம் என்ன?

ஜாதகத்தில் குரு வலிமை இழந்திருக்கும் நிலையில் நவ கிரகத் தலங்களில் குருவிற்கு முதன்மைத் தலமாக போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் சென்று அங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியை வணங்கலாம். தென் திட்டை ராஜ குருவையும், பாடியில் குரு தலத்திற்கும் சென்று வணங்கலாம். வட ஆலங்குடி என போற்றப்படும் தலம் போரூரில் அமைந்துள்ளது. அருள்மிகு ராமநாதீஸ்வரப் பெருமான் திருக்கோவிலுக்கு வியாழன் தோறும் சென்று வழிபடலாம். திருச்செந்தூர் குருபரிகார தலம்தான். அங்கு சென்று திருச்செந்தில் ஆண்டவனையும் தட்சிணாமூர்த்தியையும் வணங்கலாம். ஜென்ம நட்சத்திர நாளில் பரிகாரம் செய்வதுதான் நன்மையை தரும். ஒரு வியாழக்கிழமை குருவின் ஹோரையில் குருவின் வாகனமான யானைக்கு, விருப்பமான உணவு கொடுக்கலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுரு பெயர்ச்சி 2019-20: குரு தசையில் யோகம் பெறும் ஆறு லக்னகாரர்கள் !
Next articleToday Rasi Palan இன்றைய ராசி பலன் புதன்கிழமை – 16.10.2019 !