காஷ்மீர் மாநிலத்தில் துணை இராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் நேற்று முந்தினம் அதிகாலை 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து பள்ளதாக்கு பகுதிக்கு திரும்பி கொண்டிருந்த இந்திய துணை இராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது தற்கொலை குண்டுதாரியொருவர் வெடி குண்டுகள் நிரப்பிய சொகுசு காரை வேகமாக ஓட்டி வந்து இராணுவ வீரர்கள் சென்ற பஸ் ஒன்றின் மீது மோதி வெடிக்கவைத்துள்ளார்.
இந்த சம்பவத்தில் சவலாப்பேரியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகனும் பலியாகியுள்ளார். இவர் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கோவில்பட்டி அருகே சவலாப்பேரியை சேர்ந்த விவசாயி கணபதி. இவரது மனைவி மருதம்மாள். இவர்களுக்கு ஒரு மகள், 3 மகன்கள். இதில் கடைசி மகன் சுப்பிரமணியன்(28). ஐடிஐ படித்துள்ள இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சி.ஆர்.பி.எப். பணியில் சேர்ந்தார். உத்திரபிரதேசத்தில் தனது பணியை தொடங்கிய சுப்பிரமணியன் சென்னை, காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிந்துள்ளார். இவருக்கும் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் வெங்கடாசலபுரத்தை சேர்ந்த கிருஷ்ணவேணிக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.
கடந்த பொங்கலையொட்டி விடுமுறைக்கு வந்த சுப்பிரமணியன், கடந்த 10-ம் தேதி ரயிலில் பணிக்கு புறப்பட்டுள்ளார். தான் பணிக்குப் புறப்படும் செய்தியை தனது உறவினர்களுக்கும் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு பேசிய போது தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று ஜம்முவில் இருந்து சி.ஆர்.பி.எப். வீரர்கள் 2548 பேர் 78 பேருந்துகளில் ஸ்ரீநகருக்கு வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். புல்வாமா மாவட்டம் லேத்போரா பகுதியில் வந்தபோது, வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒரு சிஆர்பிஎப் வாகனம் மீது மோதினார். இந்த தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வாகனங்களும், தீவிரவாதியின் காரும் வெடித்து சிதறின.
இந்த சம்பவத்தில் வெடித்து சிதறிய சி.ஆர்.பி.எப். வாகனத்தில் இருந்த சுப்பிரமணியனும் உயிரிழந்தார். இதுகுறித்த தகவல்கள் சவலாப்பேரியில் உள்ள சுப்பிரமணியனின் உறவினர்களுக்கு தெரியவந்தது. ஆனால், அதிகாரப்பூர்வமாக சி.ஆர்.பி.எப். மற்றும் அரசு அதிகாரிகள் யாரும் உறுதி செய்யவில்லை. இதனால், நேற்று மதியம் வரை சுப்பிரமணியன் வீட்டில், அவர் நலமுடன் இருப்பார் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.
இதற்கிடையே, அதிகாரிகள் சுப்பிரமணியன் மரணமடைந்ததை உறுதி செய்தனர். அப்போது தமிழக முதல்வரின் இரங்கல் அறிக்கையும், உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வந்தது.
அதுவரை, நம்பிக்கையுடன் இருந்த சுப்பிரமணியனின் குடும்பத்தினர், அவர் இறந்து விட்டார் என்பதை அறிந்து கதறி அழுதனர். இதையறிந்த சுப்பிரமணியன் உறவினர்கள் அவரது வீட்டின் முன் திரள தொடங்கினர். இதனால் சவாலப்பேரி மட்டுமல்ல சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு சோகத்தில் மூழ்கின. கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ், கயத்தாறு வட்டாட்சியர் லிங்கராஜ் மற்றும் அதிகாரிகள் சவலாப்பேரி வந்து சுப்பிரமணியன் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை எடுத்து ஊருக்கு வந்த சுப்பிரமணியன் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
மேலும், விடுமுறையில் வந்திருந்த போது தனது தந்தை கணபதியை திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சைக்கு அனுமதித்ததோடு அருகே இருந்து கவனித்து கொண்டார். தந்தை சிகிச்சையில் இருந்ததால், சுப்பிரமணியன் விவசாய பணிகளை கவனித்து கொண்டார்.
நடந்த அசம்பாவிதம் குறித்து அவரது மனைவி கிருஷ்ணவேணி பேசுகையில், நேற்று மதியம் என்னிடம் தொலைபேசியில் பேசியபோது, குடும்பத்தினர் நலன் குறித்து விசாரித்தார். தற்போது கான்வாயில் சென்று கொண்டிருக்கிறேன். பின்னர் பேசுகிறேன் என்றார். அதன் பின்னர் அழைக்கவில்லை. மதியம் வரை நம்பிக்கையுடன் இருந்தேன், என கண்ணீா மல்கத் தெரிவத்தார்.
தந்தை கணபதி கூறுகையில், சுப்பிரமணியன் காவல் துறை, ராணுவம் போன்றவற்றை அதிகம் விரும்பினார். அதன்படியே சி.ஆர்.பி.எப். பணி கிடைத்து சென்றார். இன்று நாட்டுக்காக அவர் தனது உயிரை இழந்துள்ளார், என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த அவரது நண்பர்கள், உறவினர்கள் கூறும்போது, சுப்பிரமணியனுக்கு நாட்டுபற்று அதிகம். கிராமத்தில் உள்ள இளைஞர்களை ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்துவார். மேலும், ராணுவத்தில் இணைவதற்கான நுழைவுத்தேர்வை எப்படி எதிர்கொள்வது, எப்படி உடற்பயிற்சிகளை மேற்கொள்வது என்பது குறித்தும் பயிற்சி அளித்து ஊக்கப்படுத்துவார்.
விளையாட்டின் மீது தீராத ஆசை கொண்ட சுப்பிரமணியன், இங்குள்ள இளைஞர்களை விளையாட்டுத்துறையில் முன்னேற வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். தற்போது கூட பொங்கல் விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்து இளைஞர்கள், சிறுவர், சிறுமிகளை ஊக்கப்படுத்தினர். அவருடைய மரணம் எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு, என்றனர்.
சுப்பிரமணியன் கல்வி பயின்ற டி.என்.டி.டி.ஏ. பள்ளியில் அவரது மறைவுக்கு மாணவ, மாணவியர்கள் மௌன அஞ்சலி செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.