ரெண்டு நாளா காது வலியா இருக்கு, எச்சில் கூட முழுங்க முடியலை, காது அடைப்பு, காது இரைச்சல், சீழ் வடிதல்!

0

“ரெண்டு நாளா காது வலியா இருக்கு, எச்சில் கூட முழுங்க முடியலைப்பா… இருமலா இருக்கு… ஏதாவது மாத்திரை, சிரப் இருந்தா கொடு…” இப்படி சுய மருத்துவம் செய்துகொள்பவர்களே அதிகம்.

கண்ணில் பார்வைக் குறைபாடு, மூட்டில் வலி என்றால் உடனடியாக மருத்துவரைப் பார்த்து பரிசோதனை செய்து, மருந்துகளை சாப்பிடுகிறோம். ஆனால், பேசுவதற்கும், ஒலியைக் கேட்பதற்கும், காற்றை சுவாசிப்பதற்கும், உண்ட உணவை விழுங்குவதற்கும் உதவிபுரியும் காது-மூக்கு-தொண்டையில் பிரச்னை ஏற்பட்டால்… அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியமாக விட்டுவிடுகிறோம்.

“ஐம்புலன்களில், முக்கியமான மூன்று புலன்கள் காது – மூக்கு – தொண்டையில் உள்ளன. பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது, உடலின் முக்கியப்பகுதிகளான காது-மூக்கு-தொண்டைதான். இவற்றை ஒழுங்காகக் கவனித்தாலே… உடலின் முக்கியமான பிரச்னைகள் பலவற்றைத் தவிர்க்கலாம்” என்கிற காது மூக்கு தொண்டை மருத்துவர் குமரேசன், அவற்றில் ஏற்படும் பிரச்னைகள், அதற்கான சிகிச்சை முறைகளை இங்கே அடுக்குகிறார். மேலும், மூலிகை மருத்துவர் ஜீவா சேகர் வழங்கியுள்ள இயற்கை மற்றும் மூலிகை வைத்திய முறைகளும், இயற்கைப் ப்ரியன் ரத்தின சக்திவேல் தந்துள்ள பராமரிப்புக் குறிப்புகளும் உங்கள் ஆரோக்கியத்துக்கான அச்சாரம்!

காது
சப்தங்களைக் கேட்பதற்கு மட்டுமே நம்முடைய காதுகளின் பயன்பாடு அல்ல. நாம் நிலையாக நிற்பதற்கும்கூட, காதுதான் முக்கியப் பங்காற்றுகிறது. காது வழியாக நாம் சப்தத்தைக் கேட்பதால்தான் பேச முடிகிறது. குழந்தைகள் சப்தத்தை உணர்ந்துதான் பேசவே ஆரம்பிக்கின்றன. மனிதனின் முக்கியமான புலன்களில் ஒன்று காது.

தூக்கத்தின்போது கண், மூக்கு, வாய், சருமம் என நான்கு புலன்களும் ஓய்வு பெற்ற பிறகு கடைசியாக தன்னுடைய செயல்பாட்டை நிறுத்துவது காது. அதேபோல், விழிக்கும்போது முதலில் செயல்படத் தொடங்கும் புலனும் அதுதான். எனவே, கேட்கும் சக்தி மனிதனுக்கு கிடைத்த மிகப் பெரிய வரம். இதன் முக்கியத்துவத்தை உணராமல், ‘காது வலிதானே!’ என்று அசட்டையாக இருந்துவிட்டால் ஒலியையே நாம் கேட்க முடியாத பரிதாப நிலை ஏற்படலாம். எனவே காது மீது கவனம் செலுத்தவேண்டும்.

காது அடைப்பு காது வலி
நம்முடைய காது மண்டலம், வெளிக்காது (புறச்செவி), நடுக்காது (நடுச்செவி), உட்காது (உட்செவி) என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சப்தம் எழுப்பும்போது, அது நம் வெளிக்காதின் வழியே ஊடுருவி காது ஜவ்வை அசைக்கிறது. இது நடுக் காதில் இருக்கும் மிகச் சிறிய எலும்புகளான ‘மெல்லன்ஸ், இன்கஸ், ஸ்டெப்ஸ்’ என்கிற மூன்று எலும்புகளை அசைக்கும். அதில் ஸ்டெப்ஸ் எலும்பினால் அதிர்வு தரப்பட்டு உள் காதிலுள்ள திரவம் அசைகிறது. இதனால் செவி நரம்பு தூண்டப்பட்டு, அந்த ஓசை நம் மூளைக்குச் சென்று சத்தத்தை உணரவைக்கிறது.

எப்போதும் வெளிக் காது, உள் காது என இரண்டு பக்கமும் சரியான அழுத்தம் இல்லாமல் போனால், காது அடைப்பும் வலியும் ஏற்படும். விரல்களால் மூக்கை அழுத்திப் பிடித்து, முடிந்த அளவுக்கு வாயை மூடி காற்றை முழுவதுமாக உள்ளிழுத்து, காது வழியாக வெளியேற்ற முயற்சிக்கலாம். இதனால், காதுக்குள் இருக்கும் ஜவ்வானது சமநிலையை அடைந்து அடைப்பு, வலி குறையும். பிராணாயாமம் நல்ல பயிற்சி.

பனிகாலத்தில் மூக்கடைப்பு ஏற்படுவது சகஜம். குழந்தைகளுக்கு மூக்கடைப்பு நீடிக்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். ஏனெனில், தொண்டைக்கும் காதுக்கும் இடையில் உள்ள காது தொண்டை இணைப்புக் குழாய் அடைபட்டு காது வலியை ஏற்படுத்தும். இரவு நேரத்தில்தான் காதுவலி அதிகத் தொல்லையைக் கொடுக்கும்.

காது இரைச்சல்
சாதாரணப் பேச்சின் ஒலி 30 முதல் 35 டெசிபல் இருக்கும். இந்த அளவு 85 டெசிபலுக்கு மேல் போகும்போதுதான் காது கேளாமை, இரைச்சல் ஏற்படுகிறது. காதில் ஏற்படும் இரைச்சலை ‘டினிக்டஸ்’ பிரச்னை என்று சொல்வோம். வெளிக் காது, உட் காது, நடுக் காதில் வரலாம். ஒருசிலருக்கு அடைப்பினாலும் இரைச்சல் வரும். சிலருக்கு எப்போதும் இரைச்சல் இருக்கும். காதில் தண்ணீர் இருந்தாலும் இரைச்சல் இருக்கும். விடிந்ததும் சரியாகிவிடும். உள் காதில் நிணநீர் அதிகமாக இருந்தாலும் இந்தப் பிரச்னை இருக்கும்.

அந்தக் காலத்தில் இந்த அளவுக்கான சத்தம் பெரிய தொழிற்சாலைகள், சினிமா அரங்குகளில்தான் இருந்தது. ஆனால் இன்றோ, சினிமா தியேட்டர் சத்தம் வீட்டுக்குள்ளே வந்துவிட்டது. உடல் முழுவதும் பாதிக்கும் அதிக சத்தம் இது.

10 – 20 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை அண்ணா சாலையில்தான் 85 டெசிபல் சத்தம் இருந்தது. ஆனால், இன்று பெருநகரின் முக்கிய இடங்கள் அனைத்தும் அந்த இடத்தைப் பிடித்துவிட்டன என்கிறது சமீபத்திய சர்வே. அதிக இரைச்சலான இடத்தில் இருக்கும்போது நிசப்தமாகவும், சத்தம் இல்லாத இடத்தில் இரைச்சலாகவும் சிலருக்குக் கேட்கலாம். இதன் விளைவாக, காது மட்டுமின்றி, கூடவே உணர்ச்சி நரம்புகள், மூட்டுக்கள், சிறுநீரகம் ஆகியவை பாதிக்கலாம்.

தீர்வு: காது இரைச்சலை சவுண்ட் தெரப்பி மூலம் குறைக்க முடியும். இதில், காதில் ஹெட்போன் போன்ற கருவி பொருத்தப்படும். அதில் முன்பே பதிவு செய்யப்பட்ட குரல் ஒலிக்கும். இரண்டு விதமான குரல்கள் கலந்து, ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். இதனால், பாதிக்கப்பட்டவருக்குக் கேட்டுவந்த இரைச்சல் சத்தம் குறைய ஆரம்பிக்கும். தொடர்ந்து 10 நாட்களுக்கு இந்த தெரப்பியை மேற்கொள்ளவேண்டும்

காதிலிருந்து சீழ் வடிதல்
காது தன்னைத் தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் ஓர் உறுப்பு. மெழுகு போன்ற பொருளை உருவாக்கி தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்கிறது. இந்த மெழுகை அகற்றுகிறேன் என்று, தினமும் குளித்து முடித்ததும், காதில் ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றை விட்டு அழுக்கு எடுப்பது சிலருக்கு வழக்கம். காது ஒரு சென்சிடிவ் உறுப்பு. கம்பி போன்ற பொருட்களை உள்ளே செலுத்தும்போது, உள்ளே புண்ணாகி சீழ் பிடித்துவிடும்.

இந்தப் பழக்கத்தை உடனடியாக நிறுத்துவது காதுக்கு நல்லது. தவிர, காதில் அடிபடுதல் மற்றும் சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும் காதில் சீழ் வடிதல் பிரச்னை ஏற்படலாம். சளி, பாக்டீரியா தொற்று, சுகாதாரமற்ற சூழ்நிலைகள்கூட காதில் சீழ் வடிதல் பிரச்னையை ஏற்படுத்தும். பாதிக்கப் பட்டவருக்குக் காய்ச்சல், சீழ் வடிவதால் நாற்றம், காதுகளில் வலி போன்ற அறிகுறிகள் தென்படலாம். இதற்கு வீட்டு வைத்தியம் பார்க்காமல், ஆரம்ப நிலையிலேயே டாக்டரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

தலை சுற்றல் / மயக்கம்
தலை சுற்றல், மயக்கத்துக்கு காதும் ஒரு பிரச்னைதான்.

உள்காதில் உள்ள மூன்று அரைவட்டக் குழாய்களின் நீர்க் கோர்வை அதிகமாகும்போது,

தலை சுற்றலுடன் மயக்கம், வாந்தி, காதில் இரைச்சல், காது கேளாமை போன்ற பிரச்னைகள் தோன்றும்.

தக்க மருந்து மாத்திரைகள் மூலம் இதைக் கட்டுப்படுத்தலாம். தலை சுற்றலுக்குக் காரணமான நரம்பு மண்டலங்களை உணர்வு இழக்கச் செய்வதன் மூலம் நிரந்தரத் தீர்வு காண முடியும்.

சிலருக்கு திரும்பும் போது, பாத்ரூமில் அடியெடுத்துவைத்ததும், தலை சுற்றல், மயக்கம் வரலாம். இதை ‘பொசிஷனல் வெர்டிகோ’ என்று சொல்வோம். இதற்கு உட்கார்ந்து இருந்தாலே சரியாகிவிடும்.

நல்ல ஓய்வுதான் சிகிச்சையே. திரும்பவும் வராமல் இருக்க, நிணநீர் அளவு எப்படி இருக்கிறது என்று உள்காதை ஸ்கேன் செய்து பார்க்கவேண்டும். இதற்கும் புத்துணர்வு பயிற்சி நல்ல பலனைத் தரும்.

காதில் உள்ள சுற்றெலும்பு, பட்டை எலும்பு, அங்கவடி… எலும்புகள் சத்தத்தை எதிர்கொள்கின்றன. இதன் அதிர்வலைகளை நரம்பு, உணர்ச்சியாக மாற்றி உள் காதுடன் தொடர்புகொண்டு மெக்கானிக்கல் எனர்ஜியாக மாற்றிவிடும்.

உள் காதில் சீழ் வடிந்தாலும், நிணநீர் அளவு குறைந்தாலும் இந்த மூன்று எலும்புகளும் பாதிக்கும். நோய் தொற்று நம்மை அறியாமலேயே உள் காதுக்குப் போய் மூளையைச் சென்றடையலாம்… இதனால் மயக்கம் வரும். இதற்கு அறுவைசிகிச்சை செய்து சரிசெய்ய வேண்டும். காது கேளாமை
பிறவியிலேயே பேச்சுத் திறன் அற்ற குழந்தைகளுக்குக் கேட்கும் திறன் இல்லாமல் போய்விடும்.

நெருங்கிய உறவு முறைக்குள் திருமணம், குழந்தை பிறக்கும்போதே மஞ்சள் காமாலையுடன் பிறத்தல், தாய்-தந்தை ஆர்.ஹெச். ரத்த வகை இருப்பது போன்ற காரணங்களால் இந்த மாதிரியான பாதிப்புகள் இருக்கும்.

ரத்தப் பரிசோதனை செய்து, குழந்தை கருவில் இருக்கும்போதே கவனமாக இருக்க வேண்டும். குழந்தை பிறந்ததும் மஞ்சள்காமாலை இருந்தால், அதற்கான சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.

மூளையில் உள்ள அணுக்களில் பிறவிக் குறைபாடு இருந்தாலும் ‘காக்ளியர் இம்ப்ளான்ட்’ மூலம் சரிசெய்துவிட முடியும்.

வயது முதிர்வின் காரணமாகவும் கேட்புத்திறனில் பிரச்னை ஏற்படலாம். சிலருக்கு இயற்கையாகவே இழப்பு ஏற்படுகிறது. அதிக இரைச்சலான சூழலில் பணிபுரிபவர்களுக்கு, காதுகளில் ஏற்படும் நோய்த் தொற்று, காது மெழுகு அடைப்பு, உள் உறுப்பில் ஏற்படும் நோய், காது சவ்வில் ஏற்படும் ஓட்டை, காது மற்றும் காது எலும்புகளில் ஏற்படும் நோய்கள், தேவையற்ற வளர்ச்சி இவற்றின் காரணமாகக் காது கேட்கும் திறன் இழக்க நேரிடலாம்.

இது பெரிய பிரச்னையாக இருந்தாலும் தடுக்கக்கூடிய நோய்தான். படிக்காத குழந்தைகள், நோட்ஸ் சொல்லியும் எழுதாத பிள்ளைகள், கடைசி பெஞ்சில் உட்கார்ந்து இருப்பவர்கள், பக்கத்து மாணவனைப் பார்த்து எழுதுபவர்கள் என, பெரிய பள்ளிகளில் எடுத்த சர்வேயில் சென்னையில் மட்டும், செவித் திறன் குறைவாக உள்ள மாணவர்கள் ஒன்பது சதவிகிதம் பேர் இருக்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.

காதை அடிக்கடி குடைவதாலும் காது கேட்கும் திறன் பாதிக்கப்படலாம். இதற்கு பல் எலும்பின் உறுதித்தன்மையை அறிந்து, ‘டூத் ஆங்கர்டு தெரப்பி’ (tooth Achored therapy) தெரப்பி மூலம் காது கேட்கும் திறனை கொண்டு வரலாம்.

காக்ளியர் இம்ப்ளான்ட்
காது கேட்கும் சக்தியை முற்றிலும் இழந்த குழந்தைகளுக்கு, ‘காக்ளியர் இம்ப்ளான்ட்’ அறுவை சிகிச்சை மூலம் காது கேட்கும் சக்தியையும், பேசும் திறனையும் மேம்படுத்தலாம். பெரியவர்களுக்கும் பேச்சுப் பயிற்சி இல்லாமலேயே, இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியும். எந்தவிதத் தழும்போ, வீக்கமோ, வலியோ இல்லாமல் கேட்கும் திறன் எளிதில் கிடைக்கச் செய்யலாம். விரைவிலேயே காது கேட்கும் சக்தியைப் பெறுவதுடன் பேசும் திறனையும் வளர்த்துக்கொள்ள முடியும்.

காதுகளைப் பாதுகாக்க வழிகள்
காதுக்குள் குச்சி, பட்ஸ் போட்டு சுத்தம் பண்ணுதல் கூடாது.

80 முதல் 85 டெசிபல் வரை தான் நம் காதுக்கு சப்தத்தைத் தாங்கும் சக்தி உண்டு. அதற்கு அதிகமான சப்தத்தைத் தவிர்ப்பது நல்லது.

சைனஸ், டான்சில், தாடை எலும்பில் பிரச்னை ஏற்பட்டாலும் காது பாதிக்கும் என்பதால், பாதிப்பை அதிகரிக்க விடாமல் உடனடியாகக் கவனிக்கவேண்டும்.

அதிக சப்தம் இல்லாமல், மெல்லிய இசையை மட்டுமே கேட்க வேண்டும்.

காதுகளில் வாக்மேன், ஹெட்போன் அணிந்தாலும் மிகக் குறைந்த அளவில் வைத்துக் கேட்க வேண்டும்.

சுற்று வட்டாரத்தில் அதிக இரைச்சல் இருப்பது தெரிந்தால், காதில் பஞ்சை வைத்துக்கொள்ளலாம்.

தொடர்ந்து செல்போனில் பேச நேரிட்டாலும், ஒரு காதிலிருந்து மறு காதுக்கு மாற்றி மாற்றிப் பேசுவது நல்லது.

காதில் பூச்சி புகுந்துவிட்டால், எண்ணெய் சில சொட்டு விடலாம். பூச்சி செத்து வெளியே வந்துவிடும்.

காதில் அடிக்கடி டிராப்ஸ் போடக் கூடாது. இதனால் நோய் தொற்று, அரிப்பு ஏற்படலாம்.

காது, மூக்கில் நுழையும்படியாகவும், வாயில் போட்டு விழுங்கும்படியாகவும் உள்ள பொருட்களை குழந்தைகள் எடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

(மூலி)கை வைத்தியம்
காதில் திருகுவலி ஏற்பட்டால், 2 சொட்டு ரோஜா தைலத்தை விடலாம். வலி, குத்தல் மறையும்.

மல்லிகை இலை எண்ணெயை 2 சொட்டு விடலாம். காது வலி, குத்தல், சீழ் சரியாகும்.

கரியபோளம் – 9 கிராம், சம்பங்கிப் பூ தூள் – 35 கிராம், இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி இறக்கி, ஆற வைத்துக்கொள்ளவும். திருகுவலி, புண் வந்தால் 2 சொட்டு விடலாம்.

Previous articleஎடை அதிகரிக்க இவற்றை சாப்பிடுங்க எடை அதிகரித்துவிடும்! உடலும் பலம் பெறும்!
Next articleசளி, சைனஸ், மூக்கடைப்பு, ரத்தம் வடிதல், மூக்கில் சதை, ஆஸ்துமா, மூச்சிரைப்பு, மூக்கில் புண், நோய்த் தொற்று!