கருணைக் கொலை செய்யப்பட்ட இனுக்கா!!

0
537

உலகின் கடைசி வெப்ப மண்டல துருவக் கரடியான இனுக்கா, கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

பனிக்கரடி… கடும் உறைபனி சூழ்ந்த ஆர்டிக் பகுதியில் காணப்படும் ஒருவகை கரடி இனம். ஆனால் இனுக்கா என்னும் பனிக்கரடியின் பிறப்பும் இறப்பும் அப்படியிருக்கவில்லை.

சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் 1990-ஆம் ஆண்டு டிசெம்பர் 26- ஆம் திகதி நனூக் எனும் கனடா ஆண் கரடிக்கும் ஷீபா என்னும் ஜெர்மன் பெண் கரடிக்கும் பிறந்த சுட்டி ஆண் கரடி தான் இந்த இனுக்கா.

சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் இனுக்காவுக்காகச் செயற்கை உறைபனி பகுதி உருவாக்கப்பட்டது. எப்போதும் துருதுருவென விளையாடிக் கொண்டிருக்கும் இனுக்காவை காண ஒவ்வொரு விடுமுறை தினத்துக்கும் கூட்டம் அலைமோதும். அரசியல் தலைவர்களின் பிறந்த நாளைப் போன்று இனுக்காவின் பிறந்தநாள் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

உயிரியல் பூங்கா நிர்வாகம் இனுக்கா மீது அதீத கவனம் காட்டியது. ஆனாலும், பனிக்கரடியை வெப்ப மண்டலத்தில் வைத்து வளர்ப்பது இயற்கைக்கு மாறானது என்று விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து `இனிமேல் உயிரியல் பூங்காவில் பனிக்கரடி வளர்க்கப்படாது. இனுக்காவே கடைசி’ எனச் சிங்கப்பூர் உயிரியல் பூங்கா அறிவித்தது. விலங்கு நல ஆர்வலர்கள் பயந்ததுபோல் இனுக்காவின் மென்மையான வெள்ளை நிற அழகிய ரோமங்கள் பிறந்து சில ஆண்டுகளிலேயே உதிரத் தொடங்கின. ஆனாலும், அதன் சேட்டைகள் குறையவில்லை.

கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் இனுக்காவின் 27ஆவது பிறந்தநாளை மிகப் பிரமாண்டமாகக் கொண்டாடியது உயிரியல் பூங்கா நிர்வாகம். கடந்த இரண்டு ஆண்டுகளாக இனுக்காவின் துள்ளல், சேட்டைக் குறைந்துவிட்டது.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் படுத்துக்கொண்டிருந்தது. மூட்டுவலி, பற்கள் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை அளித்த பிறகும் இனுக்காவின் உடல் நலத்தில் முன்னேற்றம் இல்லை. உடல் முழுவதும் பச்சை நிற பூஞ்சை பரவியது.

எனவே, இனுக்காவை கருணைக் கொலை செய்ய சிங்கப்பூர் உயிரியல் பூங்கா முடிவெடுத்தது. அதற்கான அறிவிப்பையும் இனுக்காவை காணும் கடைசி வாய்ப்பையும் மக்களுக்கு அளித்தனர். கடந்த வாரம் முழுவதும் சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் வழக்கத்தை விடக் கூட்டம் அலைமோதியது.

இன்று காலை 7 மணிக்கு மயக்க மருந்தின் உதவியுடன் அதற்கு விடைகொடுக்கப்பட்டதாக உயிரியல் பூங்கா அறிவித்துள்ளது. இனுக்காவின் மறைவு குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த வனவிலங்கு காப்பக அதிகாரி கண்ணீருடன் பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருந்தது எனத் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இனுக்காவின் அறையின் வெளியே என்று குழந்தைகள் எழுதி வைத்த கடிதங்களும் பலகைகளும், ரோஜா மலர்களும் நிறைந்துள்ளன. ஆனால், அறையின் உள்ளே இனுக்கா இல்லாமல் வெறிச்சொடிக் கிடந்தது.

Previous articleஅமிலத்தில் மூழ்கடிக்கப்பட்ட மாணவர்களின் சடலங்கள்!!
Next articleஸ்டாலின் தன்னை கடத்தியது பற்றி பல ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்த நடிகை பாத்திமா பாபு…!